Last Updated : 24 Nov, 2018 11:29 AM

 

Published : 24 Nov 2018 11:29 AM
Last Updated : 24 Nov 2018 11:29 AM

வைரஸ் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

மழைக்காலம் வந்தால் வைரஸ் காய்ச்சல்களும் தொடங்கிவிடும். டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், மலேரியா எனப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.  மழைக் காலத்தில் வரக்கூடிய வைரஸ் காய்ச்சல்களை எப்படித் தவிர்ப்பது, குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்கள் வராமல் பார்த்துக்கொள்வது எப்படி?

டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்குக் கொசுதான் முதல் காரணம். கொசுக் கடி மூலம் உடலுக்குள் செல்லும் வைரஸ், 3 முதல் 7 நாட்களுக்குள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். முன்பு கொசுக்கடியால் மலேரியா காய்ச்சல்தான் தீவிரமாக இருந்தது. இப்போது டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் தாக்குகின்றன.

இந்தக் காய்ச்சல்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் சிவராம கண்ணனிடம் கேட்டபோது, “டெங்குவும் ஒரு வகையான வைரஸ்தான். கொசுக் கடியால் வருவதுதான். கொசுவைக் கட்டுப்படுத்தினாலே அந்தக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். டெங்குவால் பாதிக்கப்பட்டவரைக் கடிக்கும் கொசு மற்றவர்களைக் கடித்தால், அவர்களுக்கும் டெங்கு தொற்றிவிடும்.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசு பகலில்தான் கடிக்கிறது. எனவே, கொசுக் கடியிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். முதியவர்கள், குழந்தைகள், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் காய்ச்சல் எளிதில் தாக்கிவிடும். எனவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. மழை, குளிர் காலத்தில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தாலே, எந்த வைரஸ் காய்ச்சலையும் தவிர்த்துவிடலாம்” என்கிறார்.
 

kaaichal-3jpgசிவராம கண்ணன்

கைகளை நன்றாகக் கழுவுங்கள்

ஒருவருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தாலோ நுரையீரலில் பிரச்சினை இல்லாமல் இருந்தாலோ அவரை வைரஸ் காய்ச்சல் எளிதில் அண்டாது. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், ஜூரம் அதிகமானாலோ ரத்த அழுத்தம் அதிகரித்தாலோ வியர்வை, தலைசுற்றல், பசியின்மை போன்ற பிரச்சினைகள் தெரிந்தாலோ மருத்துவரை உடனே அணுக வேண்டும். பொதுவாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் வைரஸ் காய்ச்சல்களுக்கு எளிதில் இலக்காகிவிடுவார்கள்.

“பொதுவாக ஃப்ளு, இன்ஃப்ளூயன்சா ஆகியவற்றைத்தான் ‘வைரஸ் காய்ச்சல்’ என்கிறோம். இந்தக் காய்ச்சல் சுவாச வழியில் மூக்கு முதல்  தொண்டைவரை பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. நுரையீரல் வரையிலும் பாதிப்பு நீளும். வைரஸால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதோ தும்மும்போதோ பக்கத்தில் மற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கும் காய்ச்சல் வரக்கூடும். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் முகமூடி அணிந்துகொண்டாலோ கர்சீப்பை வைத்து மூடிக்கொண்டாலோ மற்றவருக்குப் பரவாது.

ஒரு வேளை அவர்கள் அப்படி இல்லாமல் இருந்தால், அவர்களை அணுகுபவர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது. காய்ச்சல் வந்தவர்களைத் தொட்டாலோ கைக்குலுக்கினாலோ கையை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இதைப் பழக்கமாக வைத்துக்கொண்டாலே வைரஸ் காய்ச்சல் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்” என்கிறார் மருத்துவர் சிவராம கண்ணன்.

குளியல் மிக அவசியம்!

மழைக்காலத்தில் குழந்தைகளுக்குச் சளி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் ஆகியவை அடிக்கடி வரும். மழை பெய்யும்போது தண்ணீரில் விளையாட குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகளை இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படிக் காப்பது?

“மழைத் தண்ணீரில் குழந்தைகள் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு, கை, கால், முகம்  முறையாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். அப்படிக் கழுவாமல் உணவு சாப்பிட்டால், அதன் மூலம் குழந்தைகளுக்கு வைரஸ் உள்ளே சென்றுவிடலாம். அதனால் வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். 

மழைக் காலத்தில் டெங்குக் காய்ச்சலிலிருந்து குழந்தைகளைக் காப்பது மிகவும் முக்கியம். பள்ளியில் இருக்கும்போதோ வீட்டில் இருக்கும்போதோ கொசுக் கடிக்கு ஆளாகமல் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் மழை நீரில் விளையாடக் கூடாது எனப் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடைய கையையும் விரல்களையும் பெற்றோர்கள் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ரவி.

மழையை வரவேற்போம். மழை நோய்களை மட்டும் விரட்டுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x