Published : 17 Nov 2018 11:31 AM
Last Updated : 17 Nov 2018 11:31 AM

மூலிகையே மருந்து 31: நலத்தின் நல்‘வேளை!’

‘வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை…’ இது தைவேளைப் பூக்களால் செய்யப்படும் உணவைக் குறிப்பிடும் புறநானூற்றுப் பாடல். இதன் பூக்களைத் தயிரிலிட்டுப் பிசைந்து காய்ச்சி ‘புளிக்கூழ்’ எனும் சுவைமிக்க உணவு தயாரிக்கப்பட்டதாக இந்தச் சங்க இலக்கியப் பாடலிலிருந்து நாம் அறியலாம்.

மண் மணம் உதிர்க்கும் பருவமழைக் காலத்தின் தொடக்கத்திலேயே, கூட்டமாகத் தைவேளைத் தாவரங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடும். மாலை மங்கும் வேளையில் பூத்திருக்கும் அதன் வெள்ளை நிற மலர்களின் தொகுப்பைப் பார்க்கும்போது, வானத்து நட்சத்திரங்கள் கீழிறங்கி, தாவரங்களின் மீது மலர்களாக ஜொலிப்பதைப் போன்ற பிரமையைக் கொடுக்கும்.

கழுத்துக்கு மேல் உண்டாகும் நோய்களைக் களைவதில், தைவேளை கில்லாடி. ‘காது மூக்கு தொண்டை’ நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் எனத் தைவேளைக்குக் கவுரவப் பட்டம் கொடுக்கலாம்.

பெயர்க் காரணம்: வேளை, நல்வேளை, அசகண்டர் ஆகிய வேறுபெயர்கள் இதற்குச் சொந்தம். பகல் வேளையில் சிறிது தலை குனிந்திருக்கும் இதன் மலர்கள், மாலை வேளையில் பிரகாசமாக மலர்ந்து சிரிக்கும். இதை வைத்து முற்காலத்தில் மாலை வேளையை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்பதால், ‘வேளை’ என்ற பெயர் உருவாகியிருக்கிறது. நல்ல மருந்தாகச் செயல்படுவதால், ‘நல்’ என்ற அடைமொழி சேர்ந்து ‘நல்வேளை’ என அழைக்கப்படுகிறது.

அடையாளம்: ஓராண்டு வளரும் செடி வகை இது. தாவரம் முழுவதும் பிசுபிசுப்பான ரோம வளரிகள் காணப்படும். நீள் முட்டை வடிவில் ஐந்து சிற்றிலைகளைக் கொண்டி ருக்கும். ‘கெப்பாரிடேசியே’ (Capparidaceae) குடும்பத்தைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘கைனாண்டிராப்ஸிஸ் பெண்டாஃபில்லா’ (Gynandropsis pentaphylla). க்ளியோகைனால் (Cleogynol), ஆந்த்ரோகுயினோன்கள் (Anthroquinones), பீட்டா-கரோடீன் (Beta-carotene), சுண்ணச் சத்து ஆகிய நலம் பயக்கும் பொருட்களைக் கொண்டிருக்கின்றன. 

உணவாக: பசியைத் தீர்த்துக்கொள்ளும் உணவாக வேளைக்கீரை உபயோகத்தில் இருந்திருக்கிறது. வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தினர், வேளைக்கீரையை உப்பில்லாமல் வேகவைத்துச் சாப்பிட்ட உணவியல் கருத்தைச் சிறுபாணாற்றுப்படையில் முன்னிறுத்துகிறார் நல்லூர் நத்தத்தனார். சமையலில் வேளைக்கீரையைச் சேர்த்துவர, உடல் சோர்வு நீங்கிப் புத்துணர்வு உண்டாகும். பசியில்லாமல் அவதியுறுபவர்களுக்கு, ‘வேளைப் பூ’ சமையல் சிறந்த பலன் அளிக்கும்.

தைவேளைப் பூ, தூதுவேளைப் பூ இரண்டையும் நெய்விட்டு வதக்கி துவையலாக்கிச்  சாப்பிட, அதிகரித்திருக்கும் கபமும் வாதமும் தன்னிலை அடையும். இலைகளைக் கொதிக்கவைத்து நீர்மோரில் சில நாட்கள் ஊறவைத்து, ஊட்டச்சத்துப் பானமாகப் பருகும் பழக்கம் பல பகுதிகளில் காணப்படுகிறது. அரிசி கழுவிய நீரில் இதன் இலைகளைச் சேர்த்து நொதிக்கச் செய்தும் உபயோகிக்கலாம். இதன் இலைகள் சில நாடுகளில் ஊறுகாய்த் தயாரிப்பில்கூட சேர்க்கப்படுகின்றன.

மருந்தாக: இதன் தண்டிலிருந்து எடுக்கப்பட்ட சாறு, நாடாப் புழுக்களுக்கு எதிராகச் செயல்படுவதாக ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மற்றும் வீக்கமுறுக்கி செய்கை கொண்ட தைவேளை, வாத நோய்களுக்கான அற்புத மருந்து. பூஞ்சைத் தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராகவும் இதன் சாரங்கள் செயல்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சிறுசிறு பூச்சிகளை மிரளச் செய்யும் பூச்சிவிரட்டியாகப் பயன்படுகிறது.

வீட்டு மருந்தாக: இதன் பூக்கள், கொழுந்துகளிலிருந்து சாறு பிழிந்து தாய்ப்பாலோடு கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல் குறையும். தலையில் கபம் சேர்ந்து பாரமாக இருக்கும்போது, இதன் இலைகளை அரைத்துக் கொஞ்சம் சாறு பிழிந்துவிட்டு, மீதமிருக்கும் சக்கையைத் தலையில் வைத்து, சிறிய பானை கொண்டு மூடி, அதன் மீது துணியைக்கொண்டு கட்ட வேண்டும்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து இலைகளைப் பிழிய, அதிலிருந்து நீர்வடியும் அதிசயத்தைப் பார்க்கலாம். தலை பாரமும் குறைந்திருக்கும். மூலிகைப் பற்பொடி தயாரிக்கும்போது, இதன் வேர்களையும் துணைக்கு அழைக்கலாம்.

இதன் முழுத் தாவரத்திலிருந்து பிழிந்த சாறோடு பாலும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட, பீனச (சைனுசைடிஸ்) அறிகுறிகள் நீங்கும் என்கிறது சித்த மருத்துவம். இதன் விதைகளைப் பொடித்து, ஆமணக்கு எண்ணெய்யில் கலந்து உள்ளுக்குக் கொடுக்க, வயிற்றில் உள்ள புழுக்களை அடித்து விரட்டும்.

இலைச் சாறோடு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, புண்களின் மீது தடவ நோய்த்தொற்று அதிகரிக்காமல் விரைவில் ஆறும். முழுத் தாவரத்தையும் வெள்ளைப் பூண்டோடு சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்து, நாட்பட்ட தோல் நோய்களையும் குணமாக்கப் பயன்படும் என்கிறது மூலிகைக் குறிப்பு.

நலத்தின் நல்வேளை..!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x