Last Updated : 17 Nov, 2018 11:31 AM

 

Published : 17 Nov 2018 11:31 AM
Last Updated : 17 Nov 2018 11:31 AM

கண்ணிலே அடைப்பிருந்தால்...

வாழ்க்கையில் ஏற்படும் திருப்புமுனைகளைப் பெரும்பாலும் யாரும் எதிர்பார்ப்பது கிடையாது. எப்போது ஏற்படும் என்று சொல்லவும் முடியாது. சில திருப்புமுனைகள் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும், சில விரும்பத்தகாததாகவும் இருக்கும். ஆனால், ராமனுக்கு ஏற்பட்ட திருப்பம் அவருக்குத் தாங்கவியலாத துயரத்தைத் தந்தது. நிம்மதியை அடியோடு போக்கிவிட்டது. ராமனுக்கு நேர்ந்த நிகழ்வு ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினை.

சில நாட்களாகவே அவருக்குக் கண்ணில் ஒரு மாதிரி அசவுகரியம். பொருட்களைப் பார்த்தால் ‘மசமச’வென்று தெரிந்தது. பார்வையில் பெரிய இடையூறு ஏதோ இருப்பதுபோல் தோன்றியது. அவ்வப்போது கண்களைத் தேய்த்துவிட்டு அன்றாட வேலைகளில் மூழ்கிவிட்டார்.

இந்தப் பிரச்சினை ஒருவாரமாகக் குறைந்தபாடில்லை. இப்படியான அசவுகரியம், புதிது என்பதால் அவருக்கு லேசாகப் பயம் வந்துவிட்டது. உடனடியாகக் கண் மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு, ‘மைய விழித்திரை நரம்பு அடைப்பு’ (Central Retinal Vein Occlusion) ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதாவது, கண்ணில் ‘ஸ்ட்ரோக்!’

கண்ணில் எப்படி பக்கவாதம்?

‘கண்ணில் ஸ்ட்ரோக்’ என்பதை முதலில் ராமனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘ஸ்ட்ரோக், உடம்பில்தானே வரும். அது எப்படிக் கண்ணில்?’ என்ற கேள்வி அவரைக் குடைந்தது.

நமது உடலில், தமனியும் நரம்பும் ரத்தத்தை எடுத்துச் செல்வது நமக்குத் தெரிந்ததுதான். கண்ணிலும் இவை உள்ளன. கண்ணின் விழித்திரையில் இருக்கும் முக்கிய நரம்பில் அடைப்பு ஏற்படும்போது, அதை ‘மைய விழித்திரை நரம்பு அடைப்பு’ என்கிறார்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது, அதைச் சரியாகக் கட்டுப்படுத்தவில்லை என்றால், உடம்பில் எப்படி ஸ்ட்ரோக் ஏற்படுகிறதோ அதைப் போன்றே கண்ணில் ஏற்படும் ஒருவகை ஸ்ட்ரோக்தான் இது. இந்த ஸ்ட்ரோக்கால், விழித்திரை நரம்பில் அடைப்பு ஏற்படுவதால் பார்வை வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

இப்படி விழித்திரை நரம்பில் அடைப்பு ஏற்படும்போது புதிய ரத்தக்குழாய்கள் உருவாகின்றன. இந்த ரத்தக்குழாய்கள், கசியும் தன்மை உடையதால் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மேலும், விழித்திரையில் உள்ள ‘மேக்குலா’ என்ற பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டு அதில் வீக்கமும் ஏற்படுகிறது.

eyes-2jpg

என்ன காரணம்?

போனவாரம் வரைக்கும் ‘ஹாயா’க இருந்தவர்தான் ராமன். ரத்த அழுத்தம் மிக அதிகமாக உயர்ந்திருந்தபோதும், ராமனுக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு இறங்காது. உணவில் கொஞ்சம் உப்பு குறைந்தாலும், கோபம் பொத்துக்கொண்டு வரும் மனுசனுக்கு.

ரத்தக் கொதிப்பின் தோழனான சர்க்கரையும் அவரை விட்டுவைக்கவில்லை. சர்க்கரை 200-க்கு மேல் இருந்தபோதும் குளிர்பானங்களை, பாட்டில் பாட்டிலாக ரசித்துக் குடித்து மகிழ்ந்தவர்தான். யாராவது, ‘என்ன சார் சர்க்கரை இருந்தும் இப்படிக் குடித்துத் தள்ளுகிறீர்களே?’ என்று கேட்டால், ‘அட, நோய் வந்தா, அப்போ பார்த்துக்கலாம்’ என்று சொன்னவர்தான் இவர்.

இத்தனைக்கும் இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு முறையும், மருத்துவர் சொல்லி வந்தாலும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. இதோடு அவர் தினமும் குடித்த மூன்று பாக்கெட் சிகரெட் வேறு பிரச்சினையின் தாக்கத்தை அதிகப்படுத்திவிட்டது.

என்ன சிகிச்சை?

புதிய ரத்தக்குழாய் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய மருந்தைக் கண்ணுக்குள் செலுத்துவது நல்ல பலனைத் தருகிறது. மேக்குலாவில் ஏற்பட்ட வீக்கமும் இதன் மூலம் குறைகிறது. வயதானவர்களைக் காட்டிலும் வயது குறைவானவர்களிடம் இந்தப் பிரச்சினை ஏற்படும்போது, சிகிச்சைக்குப் பின் பார்வை கிடைப்பதற்கான வாய்ப்பு சற்றுக் கூடுதலாக இருக்கிறது. ஆனால், இந்த சிகிச்சையில் பொறுமைதான் மிக அவசியம்.

விழித்திரையில் புதிய ரத்தக்குழாய் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தையும் கசிவையும் பொறுத்து, சிலருக்குக் கண்ணில் ஊசியுடன், லேசர் சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும்.

அலட்சியம் வேண்டாம்

தடுக்கக்கூடிய, தேவையில்லாமல் ஏற்படக்கூடிய இந்தப்  பார்வை இழப்பைக் கட்டுப்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது. இதற்கு முதலில் செய்ய வேண்டியது, கண்ணில் ஏற்படும் எந்த ஒரு மாற்றத்தையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பதுதான். உடனே கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பார்வையைக் காப்பாற்ற உதவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக,  சர்க்கரையாகட்டும், உயர் ரத்த அழுத்தமாகட்டும், தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இதுபோன்ற பக்க விளைவுகள் வராமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வழிவகை செய்யும்.

ஒளி நிறைக கண்ணில்!

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x