Last Updated : 20 Oct, 2018 12:00 PM

 

Published : 20 Oct 2018 12:00 PM
Last Updated : 20 Oct 2018 12:00 PM

‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுப்பது எப்படி?

அக்டோபர் 20 - உலக எலும்பு வலுவிழப்பு நோய் நாள்

உடலுக்குள் ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக, இந்த வேகம் குறையும். பொதுவாக, 35 வயதுக்குப் பிறகு புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் இறந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகலாம். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) முதலில் குறையும். இந்த நிலைமைக்கு ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’ (Osteopenia) என்று பெயர். 50 வயதுக்கு மேல், எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். அப்போது நம்மால் தொடர்ந்து நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும்.

நாளடைவில் அந்த எலும்பில் முறிவு ஏற்படவும் அதிக சாத்தியம் உண்டு. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (Osteoporosis) என்கிறோம். எளிதாகப் புரிந்துகொள்வதற்கு இப்படிச் சொல்லலாம்: இது எலும்புகள் பலவீனம் அடையும் நோய்!

முன்பெல்லாம் இந்த நோய் இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது புதிதாக ஏற்பட என்ன காரணம்? - குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணி செய்வது, வெயில் நுழைய முடியாத அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்பது, உடலுழைப்பு குறைந்து போவது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவதால் புரதம், ஊட்டச்சத்துக் குறைந்துவிடுவது போன்ற தற்போதைய வாழ்க்கை முறையால் இந்த நோயின் தாக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் வைட்டமின் ‘டி’ குறைபாடு ஏற்படும். இந்த இரண்டும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு. அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீதச் செயல்பாடு காரணமாகவும் இது ஏற்படுவதுண்டு.

இவை தவிர வேறு காரணங்கள் உண்டா? - இயல்பாகவே முதுமையில், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதாலும், பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைந்துவிடுவதாலும், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை, போதைப் பழக்கம் போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகிறது. பரம்பரை ரீதியாகவும் இது வருகிறது.

யாருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்? - மாதவிலக்கு நின்றுபோன பெண்களுக்கு, வெயில் படாத வேலை செய்கிறவர்களுக்கு, முதியோருக்கு, மது அருந்து பவர்களுக்கு, புகைபிடிப்போருக்கு, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு, மூட்டுத் தேய்மானம் உள்ளவர்களுக்கு, நாட்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வரும் சாத்தியம் அதிகம்.

இந்த நோய் என்னென்ன தொல்லைகள் கொடுக்கும்? - பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. சிலருக்கு மட்டும் கீழ்முதுகிலும் கழுத்திலும் தொடர்ந்து வலி இருக்கும். அந்த இடங்களைத் தொட்டால் வலி கூடும். பலருக்கு பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோய் இருப்பது தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதும், லேசாக அடிபட்டால்கூட பலத்த எலும்பு முறிவு ஏற்படுவதும்தான் இந்த நோயின் கொடுமை. பொதுவாக, இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவை இந்த நோயின்போது எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும் இடங்கள்.

இந்த நோயைக் கண்டறிவது எப்படி? - தைராய்டு பரிசோதனை, கால்சியம் மற்றும் வைட்டமின் ‘டி’ அளவீடு போன்ற பல பரிசோதனைகள் உள்ளன. என்றாலும், ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) பரிசோதனைதான் முக்கியமானது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 வருடங்களுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். தேவைப்படுபவர்களுக்குச் சிகிச்சை வழங்க முடியும்.

இதற்கு என்ன சிகிச்சை உள்ளது? - இந்த நோய் ஏற்பட்ட பின்பு வலு இழந்த எலும்பை மீண்டும் வலுப் பெறச்செய்ய முடியாது. கால்சியம் மற்றும் வைட்டமின் ‘டி’ மிகுந்த உணவுகளைச் சாப்பிடுதல் அல்லது மாத்திரைகள் சாப்பிடுதல் மூலம் மற்ற எலும்புகளை வலிமைபெறச் செய்யலாம். இவை தவிர, சமீபத்தில் இந்த நோய்க்கு நவீன மாத்திரைகளும் ஊசி மருந்துகளும் வந்துள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம்.

கால்சியம் எந்த உணவுகளில் அதிகம் உள்ளது? - பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி ஆகியவற்றில் கால்சியம் அதிகம். தவிர, கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, முட்டைக்கோஸ், எலுமிச்சை, திராட்சை, கொய்யாப் பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற வற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களை அதிகப்படுத்திக்கொண்டால் உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

‘எலும்பு வலுவிழப்பு நோய்’க்கும் வைட்டமின்-டிக்கும் என்ன தொடர்பு? - கால்சியம் குறைந்தால் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருகிறது என்று சொன்னோம். என்னதான் நாம் கால்சியம் மிகுந்துள்ள உணவைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின் ‘டி’ அவசியம். இது சாதாரண உணவுப் பொருட்களில் குறைவாகவே இருக்கிறது. வெயிலில்தான் அதிகம் கிடைக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் வெயிலில் வேலை பார்ப்பதும், வெயிலுக்குச் செல்வதும் குறைந்துவிட்டது. இதனால் இந்த வைட்டமின் கிடைப்பதும் குறைந்துவிட்டது. எனவே, ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ ஏற்படுவதற்கு இது துணைபோகிறது.

வைட்டமின்-டி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? - தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின் ‘டி’ இயற்கையாகவே கிடைப்பதற்கு வழி செய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுப் பொருட்களில் இதைப் பெறலாம். வைட்டமின் ‘டி’ மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றைச் சாப்பிடலாம்.

‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுக்க முடியுமா? - இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது.

தினமும் குறைந்தது அரை மணி நேரம் வெயிலுக்குச் செல்ல வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் காபி, தேநீர் அருந்தக் கூடாது. புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மக்னீசியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போதுமான கால்சியம் இல்லை என்றால், மருத்துவரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இது முதியோரை அதிகம் தாக்குவதால், அவர்களுக்கென ஏதாவது முன்னெச்சரிக்கைகள் உண்டா? - முதியோர்கள் கீழே விழுவதைத் தவிர்க்க, ‘வாக்கர்’ உதவியுடன் நடக்கலாம். மாடிப்படிகளில் ஏறும்போதும், குளியலறை/கழிப்பறை தளங்கள் வழுவழுப்பாக இல்லாமல் சொரசொரப்பாக இருக்க வேண்டியதும், அவற்றைப் பயன்படுத்தும்போது பற்றிக்கொள்வதற்குக் கைப்பிடிகள் இருக்க வேண்டியதும் முக்கியம். மேலும், படுக்கை அறையில் தடுமாற்றத்தைத் தவிர்க்க இரவு விளக்கைப் பயன்படுத்த வேண்டும். மயக்கம் தரும் மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.

- கு.கணேசன் - கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x