Published : 08 Sep 2018 11:29 AM
Last Updated : 08 Sep 2018 11:29 AM

மூலிகையே மருந்து 21: தூதுவளை விடும் ‘தாம்பத்ய’ தூது!

மழைச் சாரல் ஒருபுறம்… இருமல், சளி என கபநோய்களின் தாக்கம் மறுபுறம்… இதன் காரணமாக மழையை ரசிக்க முடியாமல், மண்வாசனையை நுகர முடியாமல் தவிக்கும் இன்றைய தலைமுறையினரின் எண்ணிக்கை மிக அதிகம். மழைக்காலத்தில் தோன்றும் கபநோய்களைத் தடுத்து, சூழலை ரசிப்பதற்காக இயற்கை அனுப்பி வைத்த ‘தூதுவன்’தான் தூதுவளை.

மூலிகைகளோடு நெருங்கிய உறவு கொண்டவர்களுக்கு நெருஞ்சில் முட்கள் பாதங்களில் குத்துவதும், தூதுவளை முட்கள் கைவிரல்களில் குத்துவதும் சுகமான வலி. தூதுவளை என்றதுமே, கோழையை இளக்கி ‘தூ… தூ…’ என வெளியேற்ற மட்டுமே பயன்படும் மூலிகை என்பது பொதுவான பார்வை. ஆனால், தூதுவளையோ கபநோய்களை நீக்குவது முதல், வீரிய விருத்தியை உண்டாக்குவது வரை சகலகலா வல்லமை படைத்தது.

பெயர்க் காரணம்: சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம் ஆகிய வேறுபெயர்கள் தூதுவளைக்குச் சொந்தம். ‘வேளை’ தாவர வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் ‘தூதுவேளை’ என்ற பெயரும் உண்டு.

அடையாளம்: கொடி வகையைச் சார்ந்த தூதுவளை, தனது உடல் முழுவதும் சிறுசிறு வளைந்த முட்களைச் சுமந்திருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு சரசரவென ஏறும் தன்மை கொண்டது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். ஊதா நிறத்தில் பூக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அரிதான தூதுவளை வகையும் உண்டு.

‘சொலானம் டிரைலோபேட்டம்’ (Solanum trilobatum) எனும் தாவரவியல் பெயர் கொண்ட தூதுவளையின் குடும்பம் சொலானேசியே (Solanaceae). பீட்டா – சைடோஸ்டீரால் (Beta – sitosterol), சொலசோடின் (Solasodine), சாபோனின்கள் (Saponins), ஃப்ளேவனாய்ட்கள் (Flavonoids) எனத் தாவர வேதிப்பொருட்களும் நிறைந்திருக்கின்றன.

உணவாக: தூதுவளையின் இலைகளைக்கொண்டு செய்யப்படும் சட்னி, துவையல், ரசம், அடை என அனைத்துமே கபநோய்களைப் போக்கும் ‘உணவாகும் மருந்துகள்’. நெய்யைக் காய்ச்சும்போது சில தூதுவளை இலைகளையும் சேர்த்துக்கொள்ள, நெய்யினுடைய நோய் போக்கும் குணம் அதிகரிக்கும்.

பத்து முதல் பதினைந்து தூதுவளை இலைகளை நறுக்கி வைத்துக்கொண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய்யில் வதக்கி, சிறுநெல்லிக்காய் அளவு இருவேளை சாப்பிட மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். தூதுவளையோடு, தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யப்படும் தூதுவளைத் துவையல், மழைக்காலத்துக்கே உரித்தான பிரத்யேக ரெசிப்பி.

இதன் மலர்களை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட, நரம்புகள் வலுவடைந்து, உடல் உரமாகும். தூதுவேளை, தாளிக்கீரை, முருங்கை, பசலை, அறுகீரையை நெய்யிட்டு வதக்கி கலவைக் கீரையாக உட்கொள்ள, வீரிய விருத்தி அதிகரிக்கும்.

மருந்தாக: தூதுவளைக்குள் இருக்கும் வேதிப்பொருட்கள், ‘மாஸ்ட் செல்’ சிதைவுறுதலைத் தடுத்து நிறுத்தி, பல்வேறு காரணிகளால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன. தூதுவளையின் இலைகள் மற்றும் மலர்கள், நீரிழிவு நோயால் உண்டாகும் பாதிப்புகளைத் தடுப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் பயன்படுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

புற்றுசெல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, ஈரல் தேற்றியாகவும் தூதுவளையின் சாரங்கள் செயல்படுகின்றன. காசநோய்க்கான மருந்துகளோடு தூதுவளையையும் சேர்த்துப் பயன்படுத்த நோயின் தீவிரம் விரைவாகக் குறையும்.

வீட்டு மருந்தாக: முழுச்செடியையும் அரைத்துத் தண்ணீரில் போட்டு, நன்றாகக் கொதிக்கவைத்து கஷாயமாகப் பருக இருமல், சளி குறைந்து நல்ல பசி உண்டாகும். சிறுவர்களுக்கு உண்டாகும் இருமலைக் குறைக்க, தூதுவளை இலைகளை வெண்ணெய்யில் வதக்கிச் சாறு பிழிந்து, தேன் சிறிது கலந்து நாவில் தடவலாம். இலை உலர்த்திய பொடியுடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்துக் கொடுக்க சளி, இருமல் மட்டுமன்றி வயிற்று உப்புசமும் குறையும்.

மூச்சுக்குழல் சுருங்கி, ‘கர்கர்’ என்ற ஓசையுடன் மூச்சுவிட சிரமப்படும் ஆஸ்துமா நோயாளர்களிடம் இருக்க வேண்டிய அத்தியாவசிய மூலிகை தூதுவளை. நுரையீரலிலும் மூச்சுக்குழாயிலும் உள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. தாம்பூலம் தரிக்கும்போது, தூதுவளை இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தூதுவளை கொண்டு செய்யப்படும் லேகியம், நெய், சூரணம் என அனைத்து சித்த மருந்துகளும் நுரையீரல் பாதையில் சுவாசம் சீராக நடைபெறத் தடையில்லாச் சான்றிதழ் வழங்குபவை.

இதன் பழங்களை நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்துப் பருக, மலம் எளிதாக வெளியேறுவதோடு கோழையும் இளகும். இதன் காய்களை மோரில் உலரவைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம். இதன் காய்களை வெயிலில் காயவைத்து, பொடித்து மூன்று சிட்டிகை அளவு வெந்நீரில் கலந்து பருக, உடல் வலி, தலை பாரத்திலிருந்து துரித நிவாரணம் கிடைக்கும்.

ஆக… சூது இல்லாத மூலிகை இந்தத் தூதுவளை!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x