Last Updated : 11 Aug, 2018 12:37 PM

 

Published : 11 Aug 2018 12:37 PM
Last Updated : 11 Aug 2018 12:37 PM

நலம், நலமறிய ஆவல் 47: சிரை நோயிலிருந்து விடுதலை?

நான் பேருந்து நடத்துநர். வயது 40. கடந்த 6 வருடங்களாக இரண்டு கால்களிலும் ‘வேரிக்கோஸ் வெயின்’ என்ற தொல்லையால் சிரமப்படுகிறேன். பகலில் வேலை செய்யும்போது கால் வலி கொல்கிறது. நாட்டு வைத்தியம், இயற்கை வைத்தியம், சித்தா, ஹோமியோபதி எனப் பல வைத்தியங்களைச் செய்து பார்த்துவிட்டேன்.

வலி குறையவில்லை. காலில் சாக்ஸ் போட்டுப் பார்த்தேன். வலி கொஞ்சம் குறைந்த மாதிரி தெரிந்தது. ஆனாலும், அவஸ்தை உள்ளது. அலோபதியில் ஆபரேஷன்தான் தீர்வு என்கிறார்கள். ஆபரேஷன் செய்துகொள்ள எனக்குப் பயமாக இருக்கிறது. இது குறித்துத் தாங்கள் விளக்கமாகச் சொன்னால், எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

- கே. ஞானேஸ்வரன், விழுப்புரம்.

நம் கால்களில் பாயும் அசுத்த ரத்தத்தை இதயத்தை நோக்கிச் செலுத்த சிரை ரத்தக்குழாய்கள் (Veins) இருக்கின்றன. இவற்றில் வெளிப்புறச் சிரைகள், உட்புறச் சிரைகள் என இரு வகை உண்டு. வெளிப்புறச் சிரைகளில் உள்ள ரத்தம், உட்புறச் சிரைகள் வழியாகப் பெருஞ்சிரைக்குச் சென்று,  இதயத்துக்குச் செல்ல வேண்டும்.

இந்தப் பயணத்துக்குச் சிரை ரத்தக் குழாய்களில் உள்ள வால்வுகள் உதவுகின்றன. இந்த வால்வுகளின் தனித்தன்மை, இவை ரத்தத்தை உடலில் மேல்நோக்கியே செலுத்தக்கூடியவை. ரத்தம் கீழ் நோக்கி வருவதைத் தடுத்துவிடும் தன்மையுள்ளவை. இது பொதுவான உடலியங்குமுறை.

சிலருக்குப் பிறவியிலேயே இந்த வால்வுகள் சரியாக அமைவதில்லை அல்லது சில நோய்களின்போது சரியாகப் பணி செய்வதில்லை. இதன் விளைவாக, கால்களில் உள்ள ரத்தம் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கிச் செல்ல முடியாமல், காலிலேயே தேங்கிவிடுகிறது. இதனால் அந்தச் சிரைக் குழாய்கள் வீங்குகின்றன. இந்த நிலைமைக்கு ‘வேரிக்கோஸ் வெயின்’ (Varicose vein) - தமிழில் ‘விரிசுருள் சிரை நோய்’ என்று பெயர்.

யாருக்கு வருகிறது?

பரம்பரைத் தன்மை காரணமாக, பிறவியிலேயே சிரை ரத்தக் குழாய்களில் வால்வுகள் இல்லை என்றால், சிறு வயதிலேயே ‘விரிசுருள் சிரை நோய்’ வந்துவிடும். 50 வயதுக்கு மேல் சிலருக்குக் கால்களில் இந்த வால்வுகள் பலவீனமாகும். அப்போது அவர்களுக்கு இந்த நோய் வரலாம். உடற்பருமன் உள்ளவர்களுக்கும், வயிற்றில் கட்டி இருப்பவர்களுக்கும், வயிற்றில் ஏற்படும் அதீத அழுத்தம், காலிலிருந்து வயிற்றுக்கு வரும் சிரைக் குழாய்களைப் பாதிப்பதன் காரணமாக, அவை வீங்கிக் கொள்ளும்.

கடுமையான மலச்சிக்கல் இருந்தாலும் இந்த நோய் வருவதைத் தூண்டும். ஹோட்டலில்/கடைகளில்  வேலை பார்ப்பவர்கள், காவலர்கள், கண்டக்டர்கள் போன்ற நீண்ட நேரம் நின்று பணி செய்கின்றவர்களுக்கும் நெட்டையாக இருப்பவர்களுக்கும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் மட்டும் இந்த நோய் ஏற்படுவதுண்டு. கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கும் இது வரலாம்.

அறிகுறிகள் என்ன?

காலில் தோலுக்கு அடியில் மேற்புறமாக இருக்கும் வெளிப்புறச் சிரைகள் அகன்று விரிந்து வீங்கிக் காணப்படும். சிறு பாம்பு போல் சுருண்டிருக்கும். சிலந்திபோல் பரவியிருக்கும். கால் வலிக்கும். இதைத் தொடர்ந்து காலில்/பாதத்தில் வீக்கம் தோன்றும். இரவு நேரத்தில் வலி குறைந்த மாதிரி இருக்கும். ஆனால், காலில் எரிச்சல் உண்டாகும். தசைகள் இழுத்துக்கொள்ளும்.

இதற்கு அடுத்த கட்டமாக, இந்த ரத்தக் குழாய்கள் உள்ள இடத்தில் புண் ஆகிவிட்டால், சீக்கிரத்தில் ஆறாது. வருடக்கணக்கில் நீடிக்கும். அங்கு தோல் கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும். அரிப்பு ஏற்படும். அதிகம் சொரிந்தால் அல்லது அதில் லேசாக அடிபட்டால் ரத்தம் பீச்சும்.

பரிசோதனைகள் என்ன?

இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் ‘டூப்ளெக்ஸ் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை’ (Duplex ultra sound imaging) செய்து, காலில் எந்த ரத்தக் குழாயில் வால்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுவது நல்லது.

என்ன செய்ய வேண்டும்?

நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். நடுநடுவில் நாற்காலியில் அமர்ந்து கால்களுக்கு ஓய்வு தர வேண்டும். தொடர்ந்து நிற்க வேண்டிய அவசியம் இருந்தால், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சிறிது தூரம் நடக்கலாம்.

# நிற்கும்போதும், வேலை செய்யும்போதும் காலுக்கு ‘ஸ்டாக்கிங்ஸ்’ (Stockings) எனும் மீள்காலுறையைப் போட்டுக்கொள்ள வேண்டும் அல்லது பாதம் தொடங்கி முழங்கால் வரை ‘கிரீப் பேண்டேஜ்’ (Crepe bandage) எனும்  மீள்துணியைச் சுற்றிக்கொள்ள வேண்டும். இரவில் இவற்றைக் கழற்றிவிடலாம்.

# படுத்து உறங்கும்போது கால்களுக்குத் தலையணை வைத்து உயரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

# உடற்பருமன் இருந்தால், அதைக் குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

# நோயின் தொடக்கத்திலிருந்தே காலுக்கு உதவும் நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சி செய்வது நல்லது.

என்ன சிகிச்சை?

காலில் தீராத வலி, ஆறாத புண், தோலில் நிற மாற்றம், ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்துவிடும் நிலைமை ஆகியவை காணப்பட்டால், அறுவை சிகிச்சைதான் சிறந்தது. இதற்கு மூன்று வகை அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன.

1. தோலைக் கீறி ரத்தக் குழாயைச் சரி செய்வது ஒரு வழி. இதுதான் காலங்காலமாக நடைமுறையில் உள்ள ‘திறந்தவழி’ அறுவை சிகிச்சை (Open surgery). 

2. நவீன முறையில் லேசர் கொண்டும் இதைச் சரிப்படுத்துகின்றனர் (Endo venous laser ablation).

3. சிலருக்குச் சிரை ரத்தக் குழாய்க்குள் மருந்து செலுத்திச் சரி செய்வதும் உண்டு (Sclerotherapy).

ஆனால், யாருக்கு எந்த வகை சிகிச்சையை மேற்கொள்வது என்பதை ரத்தநாள அறுவை சிகிச்சையாளர்தான் (Vascular Surgeon) முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், ஒவ்வொன்றிலும் ஒரு சில சாதக, பாதகங்கள் உண்டு. அவை நோயாளிக்கு நோயாளி வேறுபடும். அவற்றை மருத்துவர்தான் அறிவார்.

இது முக்கியம்: எந்த சிகிச்சையை மேற்கொண்டாலும், மறுபடியும் நீண்ட நேரம் நிற்பதாக இருந்தால், மீண்டும் பிரச்சினைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.  எனவே, இந்த நோய்க்குத் தடுப்புமுறைகள்தாம் மிக முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x