Published : 30 Jun 2018 12:42 PM
Last Updated : 30 Jun 2018 12:42 PM

‘பூட் பந்து’ டாக்டர்!

 

1948

-ல் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக ரசிகர்களால் விரும்பப்பட்ட பிரான்ஸ் அணிக்குக் கடுமையான போட்டியாகத் திகழ்ந்தது தாலிமரன் அவோ தலைமையிலான இந்திய அணி. போட்டி முடிந்த பிறகு இந்தியர்கள் ஏன் பூட்ஸ் (காலணிகள்) அணியாமல் விளையாடுகிறார்கள் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் அவரிடம் கேட்டபோது “இந்தியாவில் நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். இங்கு நீங்கள் ‘பூட் பந்து’ விளையாடுகிறீர்கள்” என்று கிண்டலடித்து அனைவரையும் மலைக்க வைத்தார்.

இது நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவத் தொழிலை தேர்ந்தெடுத்த அவோ, தனது ஆளுமையிலிருந்து கால்பந்தை விலக்கிவைக்க வேண்டியிருந்தது. அசாமிலிருந்து பிரிந்த நாகா மலைகள், நாகாலாந்து ஆனதைப் போல! ஆனால் அந்த தலைசிறந்த கால்பந்து வீரர், ஒலிம்பிக்கில் பங்கேற்ற சுதந்திர இந்தியாவின் முதல் கால்பந்து அணியின் கேப்டன். நெபியு ரியோ தலைமையிலான நாகாலந்தின் கூட்டணி அரசு, அவரது நூற்றாண்டில் மீண்டும் அவரைக் கண்டுபிடித்துள்ளது. அம்மாநிலத் தலைநகர் கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்துக்கு தாலிமரன் அவோவின் பெயரைச் சூட்ட மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவுக்காக விளையாடிய கால்கள்

முதல் நாகா ஒலிம்பிக் விளையாட்டு வீரர் என்ற பெருமை மட்டுமல்ல, 1950-ல் மருத்துவத்துக்கான எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பை முடித்த முதல் நாகா இனத்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

வடகிழக்கின் ஆகச் சிறந்த கல்லூரி என்று அறியப்பட்ட, குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் அறிவியல் இண்டர்மீடியேட் வகுப்பில் அவோ சேர்ந்தார். அந்த ஆண்டிலேயே, கல்லூரியின் விளையாட்டு, தடகளக் குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கல்லூரிக் கால்பந்து அணியிலும் இடம்பெற்றார். ஒரு உள்ளூர் கிளப்புக்கு எதிரான போட்டியில், தனது தலையால் பந்தை அடிக்க அவோ முயன்றபோது, எதிரணி வீரர் ஒருவர் தனது இரண்டு முஷ்டிகளாலும் அவரது தாடையில் குத்திவிட்டார். இதனால் அவோ சில வாரங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. ஆனால், மீண்டு வந்து அடுத்த ஆண்டு உள்ளூரில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தன் கல்லூரி அணி கோப்பையைத் தட்டிச் செல்ல பெரும்பங்காற்றினார்.

கர்மைக்கேல் மருத்துவக் கல்லூரியில் (இன்று, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி) படித்தபோது கொல்கத்தாவின் மோஹன் பகான் கிளப்புக்கு விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945-ல் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் வங்க அணி வெற்றிபெற உதவியதால் 1948 ஒலிம்பிக்கில் இந்தியக் கால்பந்து அணிக்குத் தலைமை வகிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. லண்டனின் வெம்ப்ளி அரங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியக் குழுவில் முதல் ஆளாகக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் அவர் பெற்றார்.

30chnvk_ao.jpgrightகால்பந்தைக் கைவிட்டது ஏன்?

இள வயதில் தாலிமரனுக்கு விளையாட்டில் எந்த அளவு ஆர்வம் இருந்ததோ, அதே அளவு கல்வியிலும் இருந்தது. பிளவுபடாத அசாமின் நாகா மலைப் பகுதியில் உள்ள சங்க்கி எனும் கிராமத்தில் ஜனவரி 18, 1918 அன்று சுபொங்வதி நிங்தங்ரி என்ற கிறிஸ்தவ போதகர், மோங்சங்லா சங்கிலரிக்கும் நான்காவது மகனாக அவர் பிறந்தார். உடன்பிறந்தோர் பத்து பேர். கால்பந்து மீதான அவரது காதல், கல்வியைப் பாதித்தது.

ஆனால் 1935-ல் அவரது தந்தையின் மறைவுக்குப்பின், அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் மருத்துவர் ஆவதற்காக உழைத்தார். 1942-ல் அசாம் அரசிடமிருந்து கிடைத்த மருத்துவக் கல்வி உதவித்தொகையால் எட்டாண்டுகளுக்குப் பிறகு அந்தக் கனவு நிறைவேறியது. 1951-ல் முன்னணி கால்பந்து வீரராக ஜொலித்துக் கொண்டிருந்தபோதே விளையாட்டை அவர் கைவிட நேர்ந்தது, இதனால்தான். 1953-ல் கோஹிமா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளர் ஆனார். 1963-ல் நாகாலாந்து தனி மாநில அந்தஸ்து பெற்றபோது, நாகாலந்தின் மருத்துவச் சேவைகள் இயக்ககத்தின் முதல் இயக்குநராக அவோ ஆனார். 1978-ல் பணி ஓய்வு பெறும்வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

புதிய பெயரா? புதிய கட்டிடமா?

1968-ல் இந்தியக் கால்பந்து அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்திந்தியக் குழுவின் உறுப்பினராக அவோ ஆனார். ஆனால் நாகாலாந்து ஒலிம்பிக் சங்கம் சொன்னதுபோல், தாய்மண்ணில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாகாக்களின் இறையாண்மைக்கான போராட்டம் வேர்விடத் தொடங்கிய காலகட்டத்தில், அவர் கால்பந்து வீரராக இருந்தது இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

அதேநேரம் மேற்கு வங்கத்தின் விளையாட்டு அரங்கத்துக்கும் அசாமில் உள்ள காட்டன் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்குக்கும் அவரது பெயரை வைத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கவுரவித்துள்ளன. இப்போது, நாகாலாந்து மாநில அரசு, அவோவின் பெருமையை அங்கீகரிக்க முன்வந்திருப்பதை வரவேற்றுள்ளார் அவோவின் மகன் இந்தியனோபா. அதேநேரம், “ஒரு முன்னாள் பிரதமரின் பெயரில் இருக்கும் அரங்கை எங்கள் தந்தையின் பெயரில் மாற்றுவதற்குப் பதிலாக, அவரது பெயரில் ஒரு புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டால் மகிழ்வோம்”என்கிறார்.

நன்றி: தி இந்து(ஆங்கிலம்) | தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x