Last Updated : 30 Jun, 2018 12:41 PM

 

Published : 30 Jun 2018 12:41 PM
Last Updated : 30 Jun 2018 12:41 PM

நலம், நலமறிய ஆவல் 41: சிற்றம்மையின் ‘ஸ்லீப்பர்’ அம்மை

என் அம்மாவுக்கு வயது 55. அக்குளில் அடிக்கடி சிறு சிறு கொப்புளங்கள் தோன்றி மறைகின்றன. அதை ‘அக்கி அம்மை’ என்கிறார்கள் பெரியவர்கள். அதற்கு சிகிச்சை இல்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி ஏற்படும் போதெல்லாம் சந்தனத்தைப் பூசிச் சமாளித்து வருகிறோம். அம்மை நோய்க்கு நவீன மருத்துவத்தில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லையா? என்ன மாதிரியான தடுப்புமுறைகளை மேற்கொள்ள வேண்டும்? உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.

- நவீன் குபேந்திரன், திருச்சி.

சிற்றம்மை (Chicken pox அல்லது Shingles) நோயைத்தான் அம்மை நோய் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த நோயை ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella zoster) எனும் வைரஸ் கிருமிகள் ஏற்படுத்துகின்றன. இது பொதுவாக, குழந்தைகளையும் சிறுவர்களையும்தான் அதிகம் பாதிக்கும். என்றாலும், உங்கள் அம்மாவைப் போன்ற வயதில் உள்ளவர்களையும் அரிதாகப் பாதிக்கலாம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தோன்றும் கொப்புளங்கள், மூக்குச் சளி, மூச்சுக் குழல் சளி போன்றவற்றில் வைரஸ் கிருமிகள் இருக்கும். இவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் கிருமிகள் வெளியேறி அடுத்தவர்களைத் தொற்றும். அம்மைக் கொப்புளங்களில் நீர்கோக்கும்போது, நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களை இந்தக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். மேலும், நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுப் பாத்திரங்கள், போர்வை, துண்டு போன்றவை வழியாகவும் அடுத்தவர்களுக்குக் கிருமிகள் பரவ வழியுண்டு.

அறிகுறிகள்

கிருமிகள் உடலுக்குள் புகுந்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். சாதாரண காய்ச்சலோடுதான் நோய் ஆரம்பிக்கும். ஆனால், உடல்வலியும் தலைவலியும் படுத்தி எடுக்கும். அடுத்த நாளில் காய்ச்சல் கடுமையாகும். மார்பு, வயிறு, முகம், கை, கால்களில் தடிப்புகள் தோன்றும். மூன்றாம் நாளில் தடிப்புகள் அனைத்தும் கொப்புளங்களாக மாறிவிடும். அவற்றில் நீர் கோக்கும். ஏழாம் நாளில் நீர்க்கொப்புளங்கள் சீழ்க்கொப்புளங்களாக மாறும். அடுத்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் குறைந்து நோயின் தீவிரம் மட்டுப்படும். கொப்புளங்கள் உடைந்தும் உடையாமலும் சுருங்கி, காய்ந்து, பொக்குகளாக மாறி உடலிலிருந்து மறையும். அந்த இடங்களில் தழும்புகள் தெரியும். அவையும் சில மாதங்களில் மறைந்துவிடும்.

சிக்கல்கள்

நோயாளிகள் சுயசுத்தம் காக்கத் தவறினால், அம்மைக் கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று சேர்ந்து விடும்போது, நோயாளிக்குச் சில சிக்கல்கள் தோன்றும். தோல் அழற்சி நோய், சீழ்க்கட்டிகள், புண்கள் போன்றவை அல்லல்படுத்தலாம். நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத குழந்தைகளுக்குச் சிற்றம்மை ஏற்படுமானால், மூளைக்காய்ச்சல் வரைக்கும் கொண்டு செல்லும். நடுத்தர வயதைத் தாண்டியவர்களுக்கு இதயத் தசை அழற்சி மற்றும் சிறுநீரகப் பாதிப்புவரைக்கும் கொண்டு செல்ல சாத்தியம் உண்டு. ஆனால், இவை எல்லாம் மிக அரிதாக நேர்பவை.

சிற்றம்மை தரும் காலங்கடந்த சிக்கல் ஒன்று உண்டென்றால், அது ‘அக்கி அம்மை’ (Herpes zoster). சிற்றம்மை நோயாளிகளுக்கு நோய் மறைந்தாலும் சிலரின் உடலுக்குள் கிருமிகள் மட்டும் வீரியமிழந்த நிலைமையில் மறைந்திருக்கும். பல வருடங்கள் கழித்து, அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது, அந்தக் கிருமிகள் மறுபடியும் வீரியம் பெற்று, உடலில் உள்ள புற நரம்புகளைத் (Peripheral nerves) தாக்கும். அப்போது உடலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும், குறிப்பாகச் சொன்னால் பாதிக்கப்பட்ட புற நரம்பு பரவியுள்ள பகுதிகளில் மட்டும் கொப்புளங்கள் தோன்றி நீர் கோக்கும். அவற்றைச் சுற்றித் தோல் அழற்சியுற்றுச் சிவப்பாகத் தெரியும். கொப்புளங்களில் வலி கடுமையாக இருக்கும். கொப்புளங்கள் பத்து நாட்களில் மறைந்தாலும், அந்த இடங்களில் வலி மட்டும் பல மாதங்களுக்குத் தொல்லை கொடுக்கும்.

சிகிச்சை உண்டா?

சிற்றம்மைக்குத் தற்போது சிகிச்சை உள்ளது. ‘ஏசைக்ளோவிர்’ (Acyclovir) எனும் மருந்து மாத்திரையாகவும், மேற்பூச்சுக் களிம்பாகவும் கிடைக்கிறது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த அளவில் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்தினால் உடனே நோய் கட்டுப்படும். மூளைக்காய்ச்சல், அக்கி அம்மை போன்ற சிக்கல்களும் பிறகு ஏற்படுவதில்லை. அப்படியே அக்கி அம்மை வந்தாலும் அதற்கும் இதே சிகிச்சைதான்.

தடுப்பது எப்படி?

சிற்றம்மைக்குத் தடுப்பூசி (Varicella vaccine) உள்ளது. குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணையையும், 5 வயது முடிந்ததும் இரண்டாம் தவணையையும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த வயதில் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் போடுவதாக இருந்தால், 3 மாத இடைவெளியில் இரண்டு தவணைகளும், அதற்கு மேற்பட்டவர்கள் என்றால், 2 மாத இடைவெளியில் இரண்டு தவணைகளும் போட்டுக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடக் கூடாது. அவர்களுக்குச் சிற்றம்மை வந்துவிட்டால், ‘சிற்றம்மைத் தடுப்புப் புரதம்’ (VZIG) எனும் தடுப்பூசியைப் போட வேண்டும். அப்போதுதான் கருவில் இருக்கும் குழந்தைக்குச் சிற்றம்மை ஏற்படாது. கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படச் சாத்தியமுள்ள தீய விளைவுகளை இதன்மூலம் தடுத்துவிடலாம்.

வீட்டிலோ அலுவலகத்திலோ ஒருவருக்குச் சிற்றம்மை வந்துவிட்டால், அவருக்கு நோய் வந்த ஐந்து நாட்களுக்குள் அவரோடு பழகும் மற்றவர்கள், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இந்த நோய் வருவதைத் தடுக்க முடியும். அத்தோடு சுயசுத்தமும் சுற்றுப்புறச் சுகாதாரமும் அவசியம். நோயாளியைத் தனிமைப்படுத்துவதும் முக்கியம்.

அக்குள் பிரச்சினை

உங்கள் அம்மாவுக்கு அக்குளில் மட்டும் மறுபடியும் மறுபடியும் கொப்புளங்கள் வருகின்றன என்றால், அவை சீழ்க்கொப்புளங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அதற்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை தேவைப்படும். சில நேரம் அவை வேர்பிடித்துவிடும். அப்போது சிறிய அறுவை சிகிச்சையும் தேவைப்படும். முக்கியமாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த மாதிரி சிக்கல் ஏற்படுவது வழக்கம். எனவே, ஒருமுறை மருத்துவரிடம் நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.inமுகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x