Published : 09 Dec 2017 12:19 PM
Last Updated : 09 Dec 2017 12:19 PM

நலம் தரும் நான்கெழுத்து 12: எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா?

“வாழ்க்கையில் எல்லாமே மிகச் சரியாக நடந்தால் எந்தவொரு சுவாரசியமுமே இருக்காது”

– கேத்தரின் ஹெப்பர்ன்

எல்லாமே மிகச் சரியாக , ஒழுங்காக இருக்கவேண்டும் என நினைப்பது நல்ல பண்பு என்று சொன்னீர்களே என்பவர்களுக்கு – அது போன வாரம். நான் சொல்வது இந்த வாரம். எல்லாப் பண்புகளையும் போன்றே துல்லியவாதமும் அளவுக்கு மிஞ்சினால் தொந்தரவுதான் தரக்கூடும்.

எப்படி எனக் கேட்கிறீர்களா? சிலர் எல்லாமே சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொண்டே இருப்பார்கள். செய்ய வேண்டிய செயல்களைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், அவர்களால் சரிபார்ப்பதை நிறுத்த முடியாது.

உதாரணமாக வீட்டைப் பூட்டினோமா எனத் திரும்பத் திரும்ப வந்து சரிபார்ப்பது, கேஸ் அடுப்பை அணைத்தோமா எனத் தூங்காமல் அடிக்கடி எழுந்து வந்து சரிபார்ப்பது, பரீட்சையில் நமது எண்ணைச் சரியாக எழுதினோமா எனச் சரிபார்த்துக்கொண்டே நேரத்தை வீணாக்குவது போன்ற செயல்கள். இன்னும் சிலர் எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகி மணிக் கணக்கில் வாளிக் கணக்கில் கைகளை, தரையை, பாத்திரங்களைக் கழுவுவது உண்டு. தண்ணீர்ப் பஞ்சம் உள்ள இடங்களில் இருந்தால் உடனிருப்பவர்கள் கதியைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அச்சமே காரணம்

என் நண்பர் ஒருவருக்கு ஒரு வகையான பயம். தபால் பெட்டியில் கடிதத்தைப் போட்டதும் விலாசம் சரியாக எழுதியுள்ளோமா என ஐயம் வந்துவிடும். பெட்டி அருகேயே இருந்து தபால்காரர் வரும்வரை காத்திருந்து உறுதிசெய்துகொண்டுதான் செல்வார். சில நேரம் தபாலை எடுத்துக்கொண்டு நேரிலேயே சென்று கொடுத்துவிடுவார். அநேகமாக இப்போது ஈமெயில் முகவரி சரியாக இருக்கிறதா என எங்கேனும் சரிபார்த்துக்கொண்டிருப்பார்.

இதனை எண்ணச் சுழற்சி அல்லது விடாப்பிடி எண்ணங்கள் நோய் என அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில், அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர். இவ்வாறு அதிகமாகச் சரிபார்க்கும் எண்ணம் வருவதற்கு அச்சமே முக்கியக் காரணம். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் எனச் சரிபார்ப்பது ஆக்கப்பூர்வமானது . ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது நேர்மறையானது. ஆனால் அதுவே ஏதேனும் தவறுதலாக ஆகிவிடுமோ என அச்சப்பட ஆரம்பித்துச் சரிபார்த்தால், அது எதிர்மறையாகப் போய் பிரச்சினைகளை உருவாக்கத் தொடங்குகிறது.

கொக்கா..? கிளியா..?

சென்ற வாரம் சொன்ன உதாரணங்களையே எடுத்துக்கொண்டால் விமானி விமானத்தை எடுக்கும் நேரம் கடந்த பின்னும் சரிபார்த்துக்கொண்டே இருந்தால் விமானம் எப்போது கிளம்புவது அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் வயிற்றினுள் எதையேனும் வைத்துவிட்டோமா எனச் சரிபார்த்துக்கொண்டே இருந்தால் திறந்த வயிறை எப்போது தைத்து மூடுவது? ஒரு அளவுக்குச் சரிபார்க்கலாம். அதற்கு மேலே வந்தது வரட்டும் எனத் துணிந்து சென்றுகொண்டே இருக்க வேண்டியதுதான்.

அதேபோல் ஒரு செயலைச் செய்து தவறாகிவிட்டால் அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ எனப் பயப்படுவதும், இதுபோல் தள்ளிப்போடுவதற்கான காரணங்களுள் ஒன்று. ‘கொகொக்க கூம்பும் பருவத்து’ என்பது சரிதான். ஆனால் தவறுகளே நடக்கக் கூடாது, மிகச் சரியான சூழ்நிலை அமைய வேண்டும் என அளவுக்கு அதிகமாகக் காத்திருந்தால் மீனைப் பிடிக்கும் கொக்காக இல்லாமல், இலவு காத்த கிளியாக மாறிவிடுவோம்.

விதிமுறைகளைப் புரிந்துகொள்ளல்

அதேபோல் விதிமுறைகளை அப்படியே பின்பற்றுவதும் எல்லா நேரங்களிலும் முடியாது. எதற்காக விதிமுறைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளாமல், அப்படியே கடைப்பிடிப்பது என்பது அடாது மழைபெய்தாலும் விடாது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் தோட்டக்காரன் போலச் சில நேரம் முட்டாள்தனமாகவும், அடிப்படை நோக்கத்துக்கேகூட எதிரானதாகவும் அமையக்கூடும்.

முடிந்த அளவு எல்லாம் சரியாக இருக்கின்றனவா எனச் சரிபார்க்க வேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில் துணிந்து செயலில் இறங்க வேண்டும். இந்த இரண்டுக்கும் உள்ள சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து!

கட்டுரையாளர்,

மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x