Last Updated : 05 Dec, 2015 04:55 PM

 

Published : 05 Dec 2015 04:55 PM
Last Updated : 05 Dec 2015 04:55 PM

பரிசோதனை ரகசியங்கள் 12: நிமோனியா காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?

மழைக் காலத்தில் ஏற்படுகிற தொற்றுநோய்களுள் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிய இடமுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்படலாம் என்றாலும், பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்குவது நிமோனியாவின் தனித்தன்மை.

எது நிமோனியா?

ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஃடெபைலோகாக்கஸ், நிமோகாக்கஸ், கிளப்சியெல்லா, மைக்கோபிளாஸ்மா, இன்ஃபுளூயென்சா எனும் பலதரப்பட்ட கிருமிகள் காற்றில் கலந்துவந்து நுரையீரலைத் தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது.

இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்புப் புகையைச் சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும்.

அறிகுறிகள்

இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது, சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால் குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும்.

இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளைஉறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும்.

என்ன பரிசோதனை?

1. ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count):

காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் 90 சதவீதம் சரியாக இருக்கும். வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை செய்யப்படும். இதன்மூலம் நோயாளியின் பொது ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

ரத்த வெள்ளையணுக்களின் இயல்பான அளவு 4,000 11,000 / டெசி லிட்டர். நியூட்ரோபில் அணுக்களின் இயல்பான அளவு 60 - 70 %. பாக்டீரியா கிருமிகளால் நிமோனியா வந்தவருக்கு ரத்த வெள்ளையணுக்களின் மொத்த எண்ணிக்கையும் நியூட்ரோபில் அணுக்களின் எண்ணிக்கையும் இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

வைரஸ் கிருமிகளால் நிமோனியா வந்தவருக்கு ரத்த வெள்ளையணுக்களின் மொத்த எண்ணிக்கையும் நியூட்ரோபில் அணுக்களின் எண்ணிக்கையும் இயல்பைவிட குறைவாக இருக்கும்.

2. மார்பு எக்ஸ்-ரே பரிசோதனை (Chest X-ray):

நிமோனியா காய்ச்சலை உறுதிசெய்ய உதவும் மிக எளிய பரிசோதனை இது. காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளிலேயே மார்பை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்து நிமோனியா உள்ளதா எனத் தெரிந்துகொள்ளமுடியும்.

நிமோனியாவின் அடுத்தகட்டப் பாதிப்புகளான நுரையீரலில் நீர் கோத்தல், சீழ் பிடித்தல் போன்றவையும் இந்த எக்ஸ்-ரே படத்தில் தெரிந்துவிடும். நிமோனியாவுக்கு சிகிச்சை முடிந்த பிறகு, நோய் முழுவதும் குணமாகிவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள மீண்டும் ஒருமுறை மார்பு எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதுண்டு.

3. மார்பு சி.டி.ஸ்கேன் (Chest CT Scan)

இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற முதல்நிலைப் பரிசோதனை இதுதான். நோய் தொடங்கிய உடனேயே சரியான சிகிச்சையைத் தொடங்க இது உதவுகிறது. மார்பை எக்ஸ்-ரே எடுப்பதன் மூலம் நிமோனியா இருக்கிறதா என்பது மட்டுமே தெரியும்.

மார்பைச் சி.டி. ஸ்கேன் எடுப்பதன் மூலம் நிமோனியா எந்த அளவுக்கு நுரையீரலில் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். நிமோனியாவுக்குப் பல கிருமிகள் காரணம் என்று பார்த்தோமல்லவா? ஒவ்வொரு கிருமியும் ஒவ்வொரு விதத்தில் நுரையீரலைத் தாக்கிச் சில தடயங்களைக் காண்பிக்கும்.

அந்த அறிகுறிகளை இதில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். இதன் பலனாக எந்தக் கிருமியால் குறிப்பிட்ட நோயாளிக்கு நிமோனியா வந்துள்ளது எனத் தெரிந்துகொண்டு, அந்தக் கிருமிக்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தேர்வு செய்து, உடனே சிகிச்சையைத் தொடங்கமுடியும். இதன் ஒட்டுமொத்தப் பலனாக நிமோனியா விரைவிலும் முழுவதுமாகவும் குணமாகும்.

நிமோனியாவாலும் மறைந்துள்ள புற்றுநோயாலும் மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் இதில் தெரிந்துகொள்ளலாம். சிகிச்சையின்போது நோய் எந்த அளவுக்குக் குணமாகிக்கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

4. சளிப் பரிசோதனை (Sputum Test)

நோயாளியின் சளியை எடுத்து அதில் கிருமி உள்ளதா எனப் பார்க்கும் பரிசோதனை இது. நிமோனியா கிருமியின் வகையைச் சரியாகத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது. பரிசோதனையின் முடிவு உடனே தெரிந்துவிடும். நோய் ஏற்பட்ட முதல் வாரத்தில் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதற்கு முன்பு, இதைச் செய்துகொண்டால் முடிவு சரியாக இருக்கும்.

5. ரத்த நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Blood Culture Test)

காய்ச்சல் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டதென்றால், இரண்டாம் வாரத் தொடக்கத்தில் இதைச் செய்துகொள்ள வேண்டும். ரத்தத்தை ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது. அத்துடன் எந்த ஆன்டிபயாடிக் மருந்துக்கு நோய் கட்டுப்படும் என்பதையும் இந்தப் பரிசோதனையில் (Antibiotic Sensitivity Test) தெரிந்துகொள்ள முடியும்.

நிமோனியா காய்ச்சலின் கிருமி வகையை உறுதி செய்யவும் சரியான சிகிச்சையைத் தரவும் இது உதவுகிறது. ஆனால், இந்த முடிவுகள் தெரிய ஒரு வாரம் ஆகும். அதற்குள் நோய் முற்றிவிடவும் வாய்ப்புண்டு. எனவேதான், இதை இரண்டாம் நிலைப் பரிசோதனையாக வைத்துள்ளனர்.

6. ஆன்டிஜென் பரிசோதனை (Antigen Test)

சிறுநீரில் நிமோனியா கிருமிகளுக்கான ஆன்டிஜென்கள் உள்ளனவா எனக் கண்டறியும் பரிசோதனை. காய்ச்சல் தொடங்கிச் சில வாரங்கள் கழித்துச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இதைச் செய்வது வழக்கம். ஆன்டிபயாடிக் மருந்துகளை ஏற்கெனவே சாப்பிட்டு வரும் நோயாளிகளுக்கும், இது சரியான முடிவைக் காட்டும் என்பது இது தரும் கூடுதல் பலன்.

எந்தப் பரிசோதனையிலும் கிருமிகள் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை எனும்போது பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் ஐ.ஜி.எம். எதிர்அணுக்கள் பரிசோதனை மூலம் நிமோனியா கிருமி வகையைக் கண்டறிய முடியும்.

நிமோனியாவுக்குத் தடுப்பூசி!

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்கு இரண்டு வகைத் தடுப்பூசிகள் உதவுகின்றன.

‘பி.சி.வி. 13’ தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள்வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு ‘முதன்மை தடுப்பூசி’ என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும்.

‘பி.பி.எஸ்.வி. 23’ (PPSV 23) என்பது மற்றொரு வகை. இத்தடுப்பூசியை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே போட வேண்டும்.

அதிலும் எல்லாக் குழந்தைகளுக்கும் இது தேவையில்லை. இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்கிறவர்கள் ஆகியோர் 'PCV 13' தடுப்பூசியை ஒருமுறையும், இரண்டு மாதங்கள் கழித்து 'PPSV 23' தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'PPSV 23' தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.

முதியோரும் போட்டுக்கொள்ளலாம்!

நிமோனியா சில நேரம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி மிக மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால், உடனடியாக உயிரிழப்பும் நேரலாம். இதைத் தவிர்க்க 50 வயதைக் கடந்தவர்கள் ‘பி.சி.வி. 13’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து ‘பி.பி.எஸ்.வி. 23’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.

(அடுத்த வாரம்: எலிக்காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு : gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x