Last Updated : 09 Mar, 2019 02:08 PM

 

Published : 09 Mar 2019 02:08 PM
Last Updated : 09 Mar 2019 02:08 PM

இயற்கையைத் தேடும் கண்கள் 33: ஜெட்டெனப் பறக்கும் வல்லூறு

பொரி வல்லூறு ஆங்கிலத்தில் Peregrine Falcon என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே அதிவேகமாகப் பறக்கும் பறவை இது. காகம் போன்றிருக்கும் இந்தப் பறவை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பறக்கும். இதன் கண்கள், கால்கள், அலகு போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் பிஸ்கட் நிறத்தில் இருக்கும். ஆண் பறவையைவிடப் பெண் பறவை சற்றுப் பெரிதாக இருக்கும்.

இரை கொல்லிப் பறவையான இது இந்தியா முழுவதும் காணப்படுகிறது. பெரும்பாலும் மனிதர்கள் வசிக்கும் இடத்தில் இந்தப் பறவையைக் காண்பது அரிது. புல்வெளி, மலைப்பகுதி, வறண்ட ஏரிகள் போன்றவற்றில் இந்தப் பறவையைக் காண முடியும். இந்தப் பறவை கூடு கட்டி வாழாது. மலையுச்சி, மர உச்சி, போன்ற உயரமான இடங்களில் இது வசிக்கும்.  இது முட்டைகளையும் உயரமான இடத்திலேயே இடும். இந்தப் பொரி வல்லூறு தனது ஜோடியை மாற்றிக்கொள்ளாது. பொதுவாக, ஒரு முறைக்கு நான்கோ ஐந்தோ முட்டைகளை இது இடும். பெண் பறவை அடை காக்கும். ஆண் பறவை இரை தேடும். இரண்டு மாதத்துக்குள் குஞ்சுகள் பறக்கத் தொடங்கிவிடும்.

பாம்பு, எலி, வாத்து, நீர்ப் பறவை போன்றவற்றை இது பிடித்து உண்ணும். வானில் பறக்கும்போதே புறா போன்ற பறவைகளை இது பிடித்து உண்ணும். வானிலிருந்து 350 கி.மீ. வேகத்தில் செங்குத்தாகக் கீழிறங்கி புறாவைத் தனது கூர்மையான கால் நகங்களால் பிடித்துச் செல்லும் காட்சி, பிரமிப்பை ஏற்படுத்தும்விதமாக இருக்கும்.

இந்தப் பறவையை முதன்முதலில் கட்ச் வளைகுடாவில் பார்த்தேன். சுந்தர்பன் சதுப்புநிலக் காட்டில் நான்கு, ஐந்து  பொரி வல்லூறுகளைப் பார்த்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஏனென்றால், பிஸ்கட் நிறத்தில் இருக்கும் இந்தப் பறவை, நிலத்தின் நிறத்தோடோ மலையின் நிறத்தோடோ கலந்தே தெரியும்; தனித்துத் தெரியாது. ஆனால், சுந்தர்பன் காடுகளில், இந்தப் பறவை அங்குள்ள பசுமையினிடையே தனித்துத் தெரிந்தது, என்னை மெய்மறக்க வைத்தது. நான் எடுத்த, எனக்குப் பிடித்த பொரி வல்லூறு ஒளிப்படங்களில் சில இங்கே.

கட்டுரையாளர்,

காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

தொடர்புக்கு: rrathika@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x