Last Updated : 16 Feb, 2019 12:02 PM

 

Published : 16 Feb 2019 12:02 PM
Last Updated : 16 Feb 2019 12:02 PM

மூன்றாவது கண்: தேடலுக்கு ஏது ஓய்வு?

விருதுநகர் அருகே உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மோகன்குமார் (69). கேரளத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து 2007-ல் ஓய்வுபெற்றார்.

பணி ஓய்வு அளித்த தனிமை, மனைவியின் இழப்பு அளித்த வெறுமை ஆகியவற்றிலிருந்து காட்டுயிர் ஒளிப்படத்தின் மீதான காதலால் மீண்டெழுந்தார். இவரது ஒளிப்படத் தொகுப்பு நமது கண்களை மட்டுமல்லாமல், மனத்தையும் விரிவடையச் செய்கிறது. இவர் இந்தியாவை மூன்று முறை காரில் சுற்றி வந்துள்ளார். காட்டுயிர்கள், பறவைகள் என இதுவரை ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களை எடுத்துள்ளார். காட்டுயிர் ஒளிப்படம் சார்ந்த பல்வேறு அமைப்புகளில் சேர்ந்துள்ளதோடு, ஏராளமான விருதுகளையும் வென்று வருகிறார்.

மாற்றம் தந்த படம்

சிறு வயதிலிருந்தே ஒளிப்படம் எடுப்பதில் தனக்கு ஆர்வம் இருந்ததாகக் கூறும் அவர், மின்வாரியத்தில் பணியாற்றியபோது விடுமுறை நாட்களில் பாக்ஸ் கேமரா வைத்து இயற்கைக் காட்சிகளைப் படம் எடுத்துள்ளார். மனைவியின் மறைவுக்குப்பின், கேரள வனப்பகுதியில் உள்ள கும்பாஉருட்டிக்குக் குடும்பத்துடன் சென்றபோது காட்டு அணிலைப் படம் எடுத்துள்ளார். அதுதான் காட்டுயிர் துறையில் அவரது முதல் படம். அந்தப் படத்தை அவருடைய மகள் ஒரு வாரப் பத்திரிகைக்கு அனுப்ப, அது அட்டைப்படமாக வெளியானது.

அதன்பின், காட்டுயிர் ஒளிப்படம் எடுக்கும் நண்பர்கள் குழுவுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து காட்டுப் பகுதிகளுக்கும் சென்று உயிரினங்கள், பறவைகளை ஒளிப்படம் எடுத்துள்ளார். இலங்கை, ஸ்காட்லாந்து, கென்யா, மசாய்மாரா காட்டுப் பகுதிகளுக்குச் சென்று படம் எடுத்துள்ளார். “அந்த அனுபவங்களை இப்போது நினைத்தாலும் த்ரில்லாக உள்ளது. புலியை நேருக்கு நேர் நின்று ஒளிப்படம் எடுக்கும் அனுபவமே தனி” என நினைவுகளில் மூழ்கிச் சிலாகிக்கிறார்.

உயிரினங்களிடமும் பறவைகளிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம் ஏராளம் எனச் சொல்லும் அவர், காட்டுயிர் ஒளிப்படம் தொடர்பான பல்வேறு கண்காட்சிகள், போட்டிகளுக்குத் தேர்வுசெய்யப்பட்டு தேசிய, மாநில அளவில் பல்வேறு பரிசு, விருதுகளையும் பெற்றுள்ளார். ‘முதுமையில் ஓய்வு என்பது நாம் செய்துவரும் பணிக்குத்தானே தவிர, நமது தேடலுக்கும் ஆர்வத்துக்கும் இல்லை’ எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறார் மோகன்குமார். இங்கே உள்ள அவரது படங்களே அதற்குச் சான்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x