Last Updated : 26 Jan, 2019 12:12 PM

 

Published : 26 Jan 2019 12:12 PM
Last Updated : 26 Jan 2019 12:12 PM

இயற்கையைத் தேடும் கண்கள் 30: இளஞ்சிவப்புக் காலழகி

நீர் நிலைகளுக்கு அருகில் வாழும் நெடுங்கால் உள்ளான் (Black-winged stilt) ஒரு நீர்ப் பறவை. இந்தப் பறவை இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது, இந்தப் பறவையைச் சமூகப் பறவை என்று சொல்லலாம். நன்னீர் நிலைகள், முகத்துவாரப் பகுதிகள், ஆழமற்ற ஏரி - குளங்கள், நெல் வயல்களில் இந்தப் பறவை அதிகமாகக் காணப்படும்.

பொதுவாக, இந்தப் பறவை இடம்விட்டு இடம் செல்வதில்லை. தண்ணீர் வற்றிய சூழ்நிலையில் மட்டுமே இது வேறு இடத்துக்கு இடம்பெயரும். இதனால், இந்தப் பறவையை எல்லாப் பருவத்திலும் காண முடியும். தமிழகத்தில், பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலும் வேடந்தாங்கலிலும் இந்தப் பறவை அதிகம் காணப்படுகிறது.

கூட்டமே பலம்

இந்தப் பறவை எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இதைத் தனியாகக் காணவே முடியாது. இவற்றின் கூடுகள் தனியாக அல்லாமல், ஒரு காலனியைப் போன்று கூட்டங்கூட்டமாகத் தண்ணீருக்கு அருகில் அமைந்திருக்கும். தன் எல்லைக்குள் வேறு பறவைகளை இது நுழைய விடாது. மீறி வேறு பறவைகள் நுழைந்தால், சத்தமாகக் குரல் எழுப்பித் துரத்தும்.

கோடைக் காலத்தில்தான் இதன் இனப்பெருக்கம் நடக்கும். முட்டையைக் கீழே இட்டு மறைவாக வைத்திருக்கும். மனிதர்கள் யாரேனும் அருகில் சென்றால், சத்தமாகக் குரல் எழுப்பியபடி தலைக்கு மேலாகப் பறந்து, விரட்ட முற்படும். சத்தம்தான் இவற்றின் பலம்.

ஒளிப்படத்தில் ஒளிரும் அழகு

கறுப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தப் பறவையின் கால்கள் மட்டும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அந்த நீண்ட கால்கள் மனத்தைக் கவரும் அழகுடன் இருக்கும். நீண்ட கால்களைப் பயன்படுத்தியே தனது உணவைத் தேடுகிறது. ஆபத்தான சூழ்நிலையில் மட்டுமே இந்தப் பறவை நீரில் மூழ்கி நீந்தும்.

எப்போதும் காணக் கிடைப்பதால், இந்தப் பறவையைப் பலர் கண்டுகொள்வது இல்லை. இதை ஒளிப்படம் எடுத்துப் பார்த்தால்தான், இதன் மொத்த அழகும் கண்களுக்குப் புலப்படும். இவை ஒன்றின் மீது மற்றொன்று ஏறி மோதும் காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அந்தக் காட்சியைத்தான் இங்கே பகிர்ந்துள்ளேன்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x