Published : 15 Sep 2018 11:17 AM
Last Updated : 15 Sep 2018 11:17 AM

மன்னார்குடியில் மணக்கும் ‘செண்டு!’

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில், ‘நெல் விவசாயம்தான் பிரதானம்’. ஆனால் சமீபமாக இங்கே, மலர்களின் வாசம் வீசுகிறது.

மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பூத்துக் குலுங்குகின்றன செண்டுப் பூக்கள். பார்ப்பதற்குச் சாலையோரச் சோலையாகக் காட்சியளிக்கிறது. இந்தச் சோலை வனத்தை உருவாக்கியவர் மாரிமுத்து (எ) சதீஷ். வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த இவர், கடந்த 2010-ம் ஆண்டு தனது சொந்த ஊரான மன்னார்குடிக்குத் திரும்பினார்.

அருகில் உள்ள கிராமத்தில் கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டார். விவசாயப் பணிகளில் தந்தை கண்ணையனுக்கு உதவியாக இருந்தார். விவசாயத்தில் லாபம் ஈட்ட வழி தேடியபோது கிடைத்த வாய்ப்புதான் இந்த செண்டுப் பூ சாகுபடி.

“மன்னார்குடியில் அதிக அளவு விற்பனையாகும் மலர் மாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் செண்டுப் பூக்கள் அனைத்துமே வெளியூரிலிருந்துதான் வரவழைக்கப்படுகின்றன. தஞ்சை, திருச்சி பகுதிகளுக்குச் சென்றுதான் பூக்கடைக்காரர்கள் இதை வாங்கி வருகின்றனர். இந்தப் பூக்களை மன்னார்குடியிலேயே உற்பத்தி செய்தால் லாபம் கிடைக்கும் எனத் தோன்றியது. அதைச் செயல்படுத்த முடிவெடுத்தேன். வெற்றி கண்டேன்” என்று எளிமையாகத் தான் எடுத்த முடிவைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார் மாரிமுத்து.

சொட்டுநீர்ப் பாசனம்

தான் முடிவெடுத்த பிறகு, செண்டுப் பூ சாகுபடி குறித்துத் தனது தேடலை மேற்கொண்டார். அப்போது ஓசூரில் நண்பர் ஒருவர் மூலம் சொட்டுநீர்ப் பாசனத்தில் இந்த மலர்ச் சாகுபடியை நன்றாகச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டார்.

“அதன்படி அங்கிருந்த நர்சரி ஒன்றின் துணையோடு மன்னார்குடியில் இந்தச் சாகுபடியைச் செய்ய முடிவெடுத்தேன். பின்னர் தோட்டக்கலைத் துறையை அணுகிச் சொட்டுநீர்ப் பாசன அமைப்புகளை உருவாக்கினோம்.

பின்னர் ஓசூரிலிருந்து செண்டுப் பூச்செடிகளை இறக்குமதிசெய்து, ஒரு ஏக்கரில் 6 ஆயிரம் பூச்செடிகள் நடவுசெய்தோம். பூச்செடி கொடுத்த நர்சரியிலிருந்தே அதற்குரிய இடுபொருட்களையும் வழங்கி, வழிகாட்டவும் செய்தனர்” எனத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

சதீஷ் இந்தச் செண்டுப் பூச்செடியை 25 நாட்கள் வயதுடைய செடியாக நட்டார். 40-ம் நாளிலிருந்து பூக்கத் தொடங்கி யுள்ளது. அன்றிலிருந்து கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 3 டன் செண்டுப் பூக்களை அறுவடை செய்து, விற்றுள்ளார்.

mannargudi 2jpgமாரிமுத்து

6 மாதத்துக்கு அறுவடை

“இன்னும் 3 டன் அளவுக்குப் பூக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான செலவு என்று பார்த்தால், செடி ஒன்றுக்கு 2.50 ரூபாய், உரச் செலவு சுமார் 20 ஆயிரம் ரூபாய், கூலியாட்கள் செலவு 20 ஆயிரம் ரூபாய் என ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும். ஒரு கிலோ செண்டுப் பூ 20 ரூபாய் முதல் 50 ரூபாய்வரை விற்பனையாகியுள்ளது. இந்த விலை இன்னும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே, செலவுபோக ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம்” என்கிறார் அவர்.

இந்தச் செண்டுப் பூச்செடியை ஒரு முறை நடவு செய்தால், 5 முதல் 6 மாதங்கள்வரை அறுவடை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் இந்த மலர்ச் சாகுபடியில் ஈடுபட்டால் மன்னார்குடியை மையப்படுத்தி ஒரு மலர்ச் சந்தையை உருவாக்கலாம் என்பது மாரிமுத்துவின் யோசனை. மணக்கட்டும் மன்னார்குடி!மாரிமுத்து

- கட்டுரை, படங்கள்: எஸ்.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x