Published : 15 Sep 2018 04:10 PM
Last Updated : 15 Sep 2018 04:10 PM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 13: வேழத்துக்கு ஒரு திருவிழா

சென்ற மாதம் டெல்லியில் இந்திரா காந்தி நிகழ்கலை மையத்தில் யானைகளைப் போற்றி நடத்தப்பட்ட மூன்று நாள் கூடுகையில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவியர்கள், இசைக் கலைஞர்கள், காட்டுயிரியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், வனத்துறை அதிகாரிகள் எனப் பல துறைகளிலிருந்து நிபுணர்கள் பங்கேற்றனர்.

இந்தியக் காட்டுயிர் அறக்கட்டளை (Wildlife Trust of India) மத்திய அரசுடனும் சில பன்னாட்டு நிறுவனங்களுடனும் இணைந்து நடத்திய விழா இது. தமிழ்நாட்டிலிருந்து ஏ.ஜே.டி. ஜான்சிங், தாரா காந்தி, ‘ஓசை’ காளிதாஸ், நந்திதா கிருஷ்ணா ஆகியோரைக் காண முடிந்தது.  இந்த மாநாடு நடந்து கொண்டிருந்தபோது அதற்கு வாழ்த்துக் கூறுவதுபோல, யானைகளின் வழித்தடம் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது.

மூத்த பாலூட்டி

ஊழிக்காலமாக இவ்வுலகில் வாழ்ந்து வரும் யானை, நிலம் வாழ் பாலூட்டிகளிலேயே உருவில் பெரியது மட்டுமல்ல, மிக மூத்ததும்கூட. இந்தியாவின் பரந்திருந்த வெப்பக் காடுகள், அதற்கு ஏற்ற வாழிடமாக அமைந்திருந்தன. ஆனால், துப்பாக்கி வந்த பின்பு இதற்குப் பிடித்தது கெட்ட காலம்.  தந்தத்துக்காகப் பெருமளவில் கொல்லப்பட்டது. இதைக் கவனித்த பிரிட்டிஷ் அரசு 1871-லேயே மதராஸ் ராஜதானியில் யானைகளை, பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது.

இந்தியா சுதந்திரமடைந்த பின்பும் யானைகள் கள்ள வேட்டையாடப்படுவது தொடர்ந்தது. அது மட்டுமல்ல; வெட்டுமரத்தொழில், தோட்டப்பயிர்கள், அணை கட்டுதல், காட்டினூடே சாலை பாவுதல், சுற்றுலா போன்ற நடவடிக்கைகளால் யானையின் வாழிடம் வேகமாகச் சுருங்க ஆரம்பித்தது. 1982-ல் யானைகளைப் பிடிப்பது அறவே தடை செய்யப்பட்டது.

இந்திய அரசு, வேங்கைப் புலிகளைப் பாதுகாத்ததுபோல யானைக்காக ‘புராஜெக்ட் எலிஃபன்ட்’ (Project Elephant)  செயல் திட்டத்தை 1992-ல் தொடங்கியது.  எனினும், 2010-ல் வெளியிடப்பட்ட ‘கஜா ரிப்போர்ட்’ (Gaja Report) என்றறியப்பட்ட யானை அறிக்கை, நிலைமை மோசமாக இருக்கிறது என்றது. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் (IUCN), யானை, ஆபத்தான நிலையிலிருக்கிறது என்று அறிவித்தது.

13 ஆசிய நாடுகளில் இன்று யானை இருக்கிறது என்றாலும், அதிகமாக இருப்பது நம் நாட்டில்தான். அதன் எதிர்காலம் இந்தியாவில்தான் இருக்கிறது என்று உயிரியிலாளர்கள் கருதுகிறார்கள்.  அதனால்தான் காட்டுயிர்ப் பாதுகாப்பில் கரிசனம் காட்டும் பன்னாட்டு நிறுவனங்களின் கவனம், இந்தியாவின் மேல் இருக்கிறது. அந்த நிறுவனங்களைச் சேர்ந்த பல பிரபலங்களை மாநாட்டில் சந்திக்க முடிந்தது.

தென்னிந்தியப் போரில் முதன்முதலாக…

நம் நாட்டில் இன்று சுமார் 28 ஆயிரம் யானைகளே இருக்கின்றன.  இவை சிறு சிறு தீவுகளாக உள்ள காடுகளைத் தங்கள் வாழிடமாகக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள முதுமலை, ஆனைமலை போன்ற சரணாலயங்களில் வாழ்கின்றன. இத்துடன் மனிதர்களிடம் வளர்ப்பு விலங்காக - கோயில்களிலும் வனத்துறையிடமும் சுமார் 3,500 யானைகள் உள்ளன.

தமிழரின் வாழ்வுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டது யானை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இ.எஸ். வரதராஜ அய்யர் ‘தி எலிஃபன்ட் இன் தமிழ் லேண்ட்’ (The Elephant in Tamil land - 1945) என்ற நூலில் சங்க இலக்கியத்தில் யானைகளைப் பற்றிய குறிப்புகளை ஆராய்கிறார். கலிங்கத்துப்பரணியில்  போர்க்களத்து  யானைகளைப் பற்றிய குறிப்புகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

அண்மையில்  வெளிவந்த ‘எலிஃபன்ட்ஸ் அண்ட் கிங்ஸ்: ஆன் என்விரான்மென்ட்டல் ஹிஸ்டரி’ (Elephants and Kings: An Environmental History) என்ற  நூலை எழுதிய வரலாற்றாசிரியர் தாமஸ் ட்ரவுட்மன், யானை முதன்முதலாக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது தென்னிந்தியாவில்தான் என்கிறார் (ட்ரவுட்மனின் யானை நூல் அடுத்த ஆண்டு தமிழில் வெளிவரும்).

சயாம் நாட்டு மன்னர் 1833-ல் கம்போடியாவுடன் போரிட்டபோது இந்த விலங்கு கடைசியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. நவீன காலத்தில் சண்டையில் டாங்கி செய்யும் வேலையைப் பண்டைக் காலத்தில் யானைகள் செய்தன என்கிறார். 'ஒளவையார்' (1953) படத்தில் யானைத்திரள் ஒன்று சோழ மன்னனின் கோட்டையைத் தகர்க்கும் காட்சி நினைவிலிருக்கிறதா?

நாற்பது பெயர்கள்

தமிழில் யானையின் பெயர்கள் பற்றிப் பேசிய என்.வி.கே. அஷ்ரஃப், தமிழில் நாற்பது பெயர்கள் இருக்கின்றன என்றார். ‘களிறு’ என்றால் போர்க்கள யானை, ‘பிடி’ என்றால் பெண் யானை, அரசனிடம் வேலை செய்யும் யானைக்கு ‘கரி’ என்று பெயர். அதேபோல் பல ஊர்ப் பெயர்களும் இந்த விலங்குடன் தொடர்புடையதாக இருக்கின்றன. ஆனைக்காரன்சத்திரம், திருவானைக்கா, ஆனைமலை போன்ற இடங்கள் நினைவுக்கு வருகின்றன.

மனிதர் வாழ்வுடன் இவ்வளவு இணைந்திருந்தாலும், யானைகளில்  வீட்டினம் என்று ஒரு தனி வகை கிடையாது. அதாவது மாடு, நாய் போன்று.  காட்டு யானைகளைப் பிடித்துத்தான் பழக்க வேண்டும். இதற்கென்று ‘கஜசாஸ்திரம்’ என்று ஒரு நூலும் இருக்கிறது. இதன் தமிழ் வடிவம் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது.

யானைகள் சார்ந்த ஒரு அற்புதமான திறந்த வெளி சிற்பக் கண்காட்சியில் 101 சிற்பங்கள் இருந்தன. இவை ஒவ்வொன்றும் மாநாடு முடிந்தபின்  நாட்டில் இருக்கும் 101 யானை வழித்தடங்களில் காட்சிப்படுத்தப்படும்.  நாட்டின் பிரபல ஓவியர்களின் ஜதின் தாஸ், பாபு சேவியர் உட்பட படைப்புகள் கொண்ட ஒரு காட்சி இருந்தது, புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  பல புத்தகக் கடைகள் இருந்தன. ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ கிருஷ்ணமூர்த்தி பற்றிய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பலரது கவனத்தை ஈர்த்தது,

தமிழ் சினிமாவில் யானைகள் பயன்படுத்தப்பட்டது பற்றி பேசிய நான், 'ஸ்ரீவள்ளி' (1945) படத்தில் முருகன் (டி.ஆர்,மகாலிங்கம்), வள்ளியின் (குமாரி ருக்மிணி) அன்பைப் பெற யானையின் (கணேசர்) உதவியை நாடுவது, 'சந்திரலேகா'வில் (1948) சர்க்கஸ் யானைகள் இளவரசனைக் குகையிலிருந்து மீட்பது போன்ற காட்சிகளைத் திரையிட்டேன்.

எம்.ஜி.ஆர் நடித்த 'நல்ல நேரம்' (1972) படத்திலிருந்து ஒரு காட்சியையும் காட்டினேன். புராணப் படக் காலம் முடிந்துவிட்டதாலும், பிராணி நலன் விதிகள் இறுகியதாலும் இப்போது யானைகளை நம் திரையில் காண்பது அரிதாகிவிட்டது. கும்கி விதிவிலக்கு.

(அடுத்த கட்டுரை: செப்டம்பர் 29 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x