Published : 04 Aug 2018 11:13 AM
Last Updated : 04 Aug 2018 11:13 AM

கற்பக தரு 17: ஓல ஓலக் குடிசையில…

உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் தங்குமிடம் உண்டு. அவை எப்படித் தம் சந்ததிகளுக்கு வசதியாக அமைய வேண்டும் என்பதைக் குறித்து அவை கவனம் எடுத்துச் செய்கின்றன. இந்த வகையில் மனிதர்களும் தங்கள் நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தங்கள் வீடுகளை அமைத்துக்கொண்டனர். அப்படிப் பார்க்கும்போது, பனையோலைகள் மனித வாழ்வில் ஆற்றிய பங்கை அளவிட முடியாது.

பொதுவாக, பனை மரம் நிழல் தராது என்பார்கள். அது சார்ந்த பழமொழிகள் பனை மரத்தை மட்டுமல்ல; நம் தொல்குடிகளையும் இழிவுசெய்யும் நோக்குடன் புனையப்பட்டவையே! ஓலையால் வேயப்பட்ட வீடுகள் நமது கலாச்சார அடையாளங்கள். அவை தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த நமது சமூகத்தின் மாறா அடையாளங்கள்.

ஒன்றின் மீதொன்றாக ஓலை

பனைத் தொழில் நடைபெறும் காலத்தில் ஓலைகளை மரத்திலிருந்து வெட்டுவது கிடையாது. ஆனால், ஓலைகளைப் பனை ஏறும் தொழிலுக்கு முன்பாக வெட்டிவிடுவார்கள். இது ‘பனைக்குச் சிரை எடுப்பது’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. சிரை எடுப்பது என்பது முடிவெட்டிவிடுவது போன்ற பொருளிலேயே இங்கே எடுத்தாளப்படுகிறது.

வெட்டிய ஓலைகளை மட்டை தனி, பத்தை தனி, ஓலை தனி எனப் பிரித்துக்கொள்வார்கள். ஓலைகளைத் தனித் தனியாகக் கால்களால் மிதித்துப் பரப்புவார்கள். அதன் பின்பு, ஓலைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டி வைத்து, இவற்றின்மேல் பாரமான பொருட்களை ஏற்றி வைப்பார்கள். இப்படிச் செய்தால் ஓலையில் இருக்கிற சில வளைவுகள் மாறி அவை சீராகிவிடும். ஒரு சில நாட்களுக்கு அவை அப்படியே இருக்க விடப்படும்.

வீட்டுக்கு ஆனை பலம்

பின்னர், இவற்றை எடுத்து வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படுத்துவார்கள். அப்போது, ஓலைகளை ஒன்றிணைத்துக் கட்ட பனை நாரைப் பயன்படுத்துவார்கள். ஆகவேதான் ‘ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனையின் பலம்’ என்ற சொலவடை வழக்கில் இருந்தது.

இன்று வீடுகள் அனைத்தும் கூரையிலிருந்து மாறி, ஓட்டு வீடுகள் எனப் பதவி உயர்வு பெற்று, அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகக் கொலுவீற்றிருக்கின்றன. ஓலை வீடுகளில் இருந்த சுகம் போய்விட்டது. அதனால் நமது பாரம்பரிய அறிவும் பெருமளவில் நம்மை விட்டு அகன்றுவிட்டது.

சுற்றுலாவுக்காகப் படையெடுப்பு

ஒரு நண்பர் தனது வாழ்வில் பார்த்த ஒரு நிகழ்வைக் கூறும்போது, தனது ஓலைக் குடிசை எரிவதைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பனையேறி, உள்ளே ஓடிச் சென்று தனது ரேடியோ பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து ரேடியோவைக் கேட்க ஆரம்பித்தாராம். செய்வதற்கு ஒன்றுமில்லை என்றான பின் எஞ்சி இருக்கும் ஒரே மகிழ்ச்சியை (பாடல் கேட்பதை) அவர் தவறவிடவில்லை.  அவருக்குத் தெரியும் பனை ஓலைகளைக் கொண்டு தன்னால் இரண்டே நாட்களில் அருமையான வீடு ஒன்றை மீண்டும் அமைத்துவிட முடியும் என்று!

பனை ஓலைகளைக் கூரையாக வேய்வதுதான் வழக்கம். ஆனால், சுவருக்காகவும் பனை ஓலைகளை வைக்கும் வழக்கம் இன்று விழுப்புரம் பகுதிகளில் இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில், நட்சத்திர விடுதிகளில்தான் இப்படியான பாரம்பரியங்கள், நவீன வடிவங்கள் உட்புகுத்தப்பட்டு மீண்டெழுகின்றன. ஆனால், நமது ஊர்கள் ‘பாதுகாப்பான’ கட்டிட அமைப்பை நோக்கிச் சென்று பெரும் பணத்தை விழுங்கிவிடுகின்றன.

ஒரு ஊர் முழுவதும் பனை ஓலையால் செய்யப்பட்ட வீடுகள் நிறைந்திருந்தால், உலகமே அந்தக் கிராமத்தை நோக்கிச் சுற்றுலாவுக்காகப் படையெடுக்கும் காலம் விரைவில் வரும்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x