Published : 04 Aug 2018 11:04 AM
Last Updated : 04 Aug 2018 11:04 AM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 10: வேட்டைக்காரன்

மூணாறுக்கு அருகிலுள்ள எரவிக்குளம் சரணாலயம், வரையாடுகளுக்கும் குறிஞ்சி மலருக்கும்  பேர் போன பிரதேசம்.  புல் போர்த்திய மலைகளும் அவற்றின் இடையே உள்ள பள்ளத்தாக்குகளைப் போர்த்தியிருக்கும் அடர்ந்த சோலைகளும் நீரோடைகளும்  உள்ள எழிலார்ந்த நிலப்பரப்பு.

இங்கு  தென்னிந்தியாவிலேயே உயர்ந்த சிகரமான ஆனைமுடியின் (2695 மீ.) நிழலில்  ஒரு சிறிய, தகரத்திலான விடுதி ஒன்று இருக்கிறது. பன்னாட்டுக் காட்டுயிரியலாளர்களிடையே ‘குடிசை’ (the hut) என்று அறியப்படும் இந்த விடுதி, அருகிலுள்ள தேயிலைத் தோட்ட மேலாளரின் நிர்வாகத்திலிருந்தது. காட்டுயிர் சட்டங்களால் இந்தப் பகுதி பாதுகாக்கப்படும் முன் வேட்டையாடிகளும்  ‘ட்ரவுட்’ (Trout) எனும் அரிய மீனைத் தூண்டில் போட்டுப் பிடிக்க வருபவர்களும் தங்குவதற்கென உருவாக்கப்பட்டது.

இந்தக் குடிசைக்குச் செல்லும் வழியில் கடைசி 15 கிலோமீட்டருக்குச் சாலை கிடையாது. மலைமேல் நெளிந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதை ஒன்றுதான். நாங்கள் ஆறு பேர் சென்றிருந்தோம்.

கண்முன் செந்நாய் வேட்டை

எங்களைக் குடிசையின் வாசலில் விட்டுவிட்டு மோட்டார் பைக் வீரர்கள் விடை பெற்றுக்கொண்டார்கள். ஒரு சிறு மலையின் உச்சியில் இருக்கும் அந்தக் குடிசையை அவ்வப்போது வீசும் பலத்த காற்றிலிருந்து பாதுகாக்க சுற்றிலும் நெடிதுயர்ந்த தைல மரங்கள் உள்ளன. குடிசையின் படிக்கட்டில் உட்கார்ந்து சுற்றிலும் பார்த்தோம். எங்கே பார்த்தாலும் ஒன்றன்பின் ஒன்றாகப் புல் போர்த்திய மலை.

எங்களுக்கு இடப் பக்கம் ஒரு சிறிய புதருக்குள் இருந்து கீரி போன்ற ஒரு கரிய உயிரி பின்னங்கால்களில் நின்று, முன்னங்கால்களை உயர்த்தித் தொங்க விட்டுக்கொண்டு எட்டி எங்களைப் பார்த்தது. சில விநாடிகளே! என்றாலும் கழுத்து, மார்பின் மஞ்சள் நிறம் ஆகியவை அதை அடையாளம் காட்டியது. கரும்வெருகு (Nilgiri Marten).   நாங்கள் இதுவரை பார்த்திராத காட்டுயிர்.

மறுபுறம் எங்களுக்கு அருகே இருந்த மலையின் உச்சியில் ஒரு கடமான் வேகமாக நடந்து போவதைப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து ஐந்து செந்நாய்கள் வருவது தெரிந்தது. கதை புரிந்தது. செந்நாய் வேட்டை ஒன்று எங்கள் கண் முன் நடக்கிறது. அவ்வப்போது ஒரு செந்நாய், கடமானின் பின்காலைக் கடித்தது. சீக்கிரமே மான் நொண்ட ஆரம்பித்துவிட்டது. பின்னர் மலையின் மறுபக்கம் இறங்கி அந்த விலங்குக் கூட்டம் எங்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. நடந்துவந்த நால்வர், வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் இரவு கவிழத் தொடங்கியது.

நாவலில் வரும் நாய்

காலையில் எழுந்து, அவசர அவசரமாகத் தேநீர் குடித்துவிட்டு, குடிசைக்குப் பின்புறம் இருந்த ஒற்றையடிப் பாதையில் வரையாடுகளைத் தேடி நடக்க ஆரம்பித்தோம். சிறிது தூரத்தில் ஒரு நீர்நிலையை அடைந்தோம் அங்கே கரையின் ஓரத்தில், நீரில் கிடந்த கடமானின் எலும்புக்கூட்டில் ஒட்டியிருந்த இறைச்சியைச் செந்நாய்கள் தின்று கொண்டிருந்தன. சில, உண்ட களைப்பில் கரையில் உறங்கிக்கொண்டிருந்தன. முன் தினம் மாலை நாங்கள் பார்த்த வேட்டை, இந்தச் சிறு ஏரியில் முடிந்திருக்கிறது.

பகலில் வேட்டையாடும் இந்த இரைக்கொல்லி விலங்குகள், கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 12 முதல் 40 செந்நாய்கள்வரை இருக்கலாம்.  உருவில் நாயைவிடச்  சற்றே சிறிதாக, கால்கள் குட்டையாக இருக்கும். ரோமப் போர்வை செங்கல் வண்ணத்திலும் அடர்த்தியான கறுப்பு வாலுடனும்  இருக்கும். நமது காடுகளில் ஒரு காலத்தில் இவை மிகுந்த எண்ணிக்கையில் இருந்திருக்கின்றன. கொல்லிமலையிலும் கல்ராயன் மலையிலும் எழுபதுகளில்கூடச் செந்நாய்கள் இருந்ததாக அங்குள்ள முதியோர் கூறுகிறார்கள்.

பெருமாள் முருகன் ‘பூனாச்சி’ நாவலில் இதை ‘காட்டு நாய்’ என்று குறிப்பிடுகிறார். முன்பு இவை காட்டில் பெருமளவில் இருந்ததை, அவரது கதைமாந்தர்கள் நினைவுகூர்கிறார்கள். ஜவ்வாது மலைவாழ் மக்கள் இந்த விலங்கை ‘வேட்டைக்காரன்’ என்று குறிப்பிடுகிறார்கள். பொருத்தமான பெயர். வேட்டையில் இந்த விலங்கு கில்லாடி. ஒரு கால்பந்தாட்டக் குழு மாதிரி ஒருங்கிணைந்து, அவசரமில்லாமல் இயங்கி இரை விலங்கை வீழ்த்தும். பல செந்நாய்கள் கூட்டாக வேட்டையாடுவதால் அதை விடப் பல மடங்கு உருவில் பெரிய கடமானைக்கூடக் கொல்ல முடிகிறது.

சிறப்பு பெற்ற செந்நாய்ப் படம்

இவற்றிடமிருந்து உயிர் பிழைக்க கடமான், நீர்நிலைகளைத் தேடி ஓடும்.  மான் நீருக்குள் இறங்கிவிட்டால் அவ்வளவுதான். அதைச் சூழ்ந்துகொண்டு செந்நாய்கள் வேலையை எளிதாக முடித்துவிடும்.

பிரிட்டிஷ் ஆட்சியில் செந்நாய் ஒன்றைக் கொன்று அதன் வாலை அறுத்துக்கொண்டு போய்க் காட்டினால், அரசு 5 ரூபாய் சன்மானம் கொடுத்தது. மனிதர்களால் கொல்லப்பட்டு, வாழிடம் சுருங்கி, இன்று சரணாலயங்களில் மட்டும், அதிலும் அரிதாகவே, காணப்படுகிறது.  அண்மைக் காலத்தில் தெருநாய்கள் பெருகியதால் அவை மூலம் வெறிநோய், இந்த விலங்குக்கும் தொற்றி இவை நூற்றுக்கணக்கில் அழிந்துவிட்டன. செந்நாயும் வீட்டு நாயும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

மைசூரைச் சேர்ந்த கிருபாகர், சேனானி என்ற காட்டுயிரில் ஆர்வம் கொண்ட இரு இளைஞர்கள், 2006-ல் செந்நாய்களைப் பற்றி  50 நிமிட ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார்கள். பந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்ட ‘The Pack’ என்ற தலைப்புடைய இந்தப் படம் 2008-ல் ‘கிரீன் ஆஸ்கர்’ (Green Oscar) என்று சொல்லப்படும் காட்டுயிர்ப் படங்களுக்கான பரிசை பிரிட்டனில் பெற்றது. அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பாருங்கள். ஒரு புதிய உலகம் உங்கள் கண் முன் விரியும்.

(அடுத்த கட்டுரை – ஆகஸ்ட் 18 இதழில்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x