Published : 28 Jul 2018 11:18 AM
Last Updated : 28 Jul 2018 11:18 AM

கற்பக தரு 16: நலம் தரும் நார்க் கட்டில்

பனை ஓலைகளைப் பயன்படுத்தி பொருட்களைச் செய்யக் கற்றுக்கொண்ட மனிதர்கள், பனை நார்களைப் பயன்படுத்திப் பொருட்களைச் செய்ய ஆரம்பித்தனர். பனை நார்களைக் கிழித்துப் பக்குவம் செய்யும் பணிகள், ஓலைகளைவிடச் சற்றே அதிகமாக இருப்பதால், ஓலைகளைவிடவும் குறைவான பொருட்களே பனை நாரிலிருந்து பெறப்பட்டன. ஆனால், கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பனை மட்டையிலிருந்து பெறப்படும் அகணி நார் மிக முக்கியமானது.

பனை நார் என்றவுடனேயே பனை நார்க் கட்டில்தான் எவருக்கும் நினைவுக்கு வரும். சிறு வயதிலிருந்தே உறங்குவதற்காகப் பனை நார்க் கட்டில்களே தென் மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்விதக் கட்டில்கள், பனையோடு தொடர்புடைய மக்களின் பெருமைகளைப் பறைசாற்றுகின்ற வகையில் இவர்கள் வீடுகளில் இருக்கும்.

உலகுக்கே முன்னோடி

பனை நார்க் கட்டிலின் தோற்றம் குறித்துத் தெரியவில்லை. வெகு சமீப நூற்றாண்டுகளில்தான் பனை நார்க் கட்டில் புழக்கத்துக்கு வந்திருக்கக் கூடும். ஆனால், உலகில் வேறு எந்தப் பகுதியிலும் பனை நார்க் கட்டில் பின்னும் தொழில்நுட்பம் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்த வகையில் தென் தமிழகம் உலகுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது.

நெல்லை மாவட்டத்தில் நார்க் கட்டில்களை வேகமாகப் பின்னுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், குமரியைப் பொறுத்தவரையில் மித வேகம்தான். பனை மட்டையின் உட்புறம் இருக்கும் அகணி நாரை எடுத்துக் காயவைப்பார்கள். காய்ந்த பின்பு, அதைத் தண்ணீரில் ஊறப்போட்டு நாரின் பிற்பகுதியில் இருக்கும் தும்புகளை நீக்கிச் சுத்தம் செய்வார்கள். இவற்றை ஒரு சீராக ‘வகிர்ந்து’ எடுக்க, இரண்டு நாட்கள் ஆகிவிடும்.

‘கால்’ கொடுக்கும் பூவரசு

பனை நார்க் கட்டில் தனித்தன்மை வாய்ந்தது எனச் சொல்லும்போது, அதன் சட்டங்கள்கூட பனை மரத்தால் செய்யப்பட்டவை என்பது முக்கியக் குறிப்பு. ஆனால், அதன் கால்கள் பெரும்பாலும் சீலாந்தி எனப்படும் பூவரச மரத்தில் செய்யப்படுபவை. இன்று தேவை கருதி வேறு மரங்கள் இட்டாலும், மிகச் சிறந்த மரம் என்பது பூவரசுதான். ஆசாரி இவற்றை ஒன்று கூட்டிச் செய்த பின்பு கட்டில் பின்னுபவர் தனது பணிகளைச் செய்யத் தொடங்குவார்.

சிறிதாக வகிர்ந்து வைத்திருக்கும் பனை நார்களைக் கட்டில் சட்டங்களில் பின்னி எடுப்பதுதான் பனை நார்க் கட்டில். இந்தப் பாவுகள், வலதும் இடதுமாகப் பிரிந்து 45 டிகிரியில் சாய்வாகச் செல்லும். தொய்வாக இருக்கும் இந்தப் பாவுகளை ஊடறுத்துச் செல்லும் நேர் பாவு அனைத்தையும் சீராக்கிவிடும் தன்மை வாய்ந்தது. ஓட்டைகள் தெரியும் இந்த விதப் பின்னல்களை ‘சக்கரக் கண்ணி’ என்று அழைக்கிறார்கள். சுமார் நான்கு முதல் 5 அடி நீளம் மட்டுமே உடைய இந்த நார்கள், முடிச்சுகள் இடப்பட்டே இணைக்கப்படுகின்றன. என்றாலும் இதன் பலம் அதிகம்தான்.

தொட்டிலான கட்டில்

தமிழகம் உலகுக்கு வழங்கக்கூடிய அதி அற்புதமான ஒரு கலை வேலைப்பாடு பனை நார்க் கட்டில். சிறு வயதில் குளிக்க வைத்துவிட்டு, கட்டிலில் கிடத்தி சாம்பிராணிப் புகை போடுவார்கள். பிரசவம் ஆன பச்சை உடம்புப் பெண்களுக்கும் நோயுற்றிருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் இது ஒரு சிறந்த கட்டில். இன்றும் இந்தக் கட்டில் பின்னுபவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்றால், அது மருத்துவ உலகால் பரிந்துரைக்கப்படுவதே காரணம். இந்தக் கட்டிலிலிருக்கும் நெகிழும் தன்மை, இவற்றில் கிடைக்கும் காற்றோட்டம், உலகில் வேறு எந்த வடிவிலாவது இணை செய்யப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே.

வயதில் மூத்தவர்கள் மட்டுமே செய்யும் இந்தப் பொருள் இளைய தலைமுறையினர் மத்தியில் அறியப்படாததாக மங்கிவிட்டது. பொன்பாறைக்குளம் என்ற கருங்களை அடுத்த ஊரில் வசிக்கும், குமரி மாவட்டத்தைச் சார்ந்த அருணாச்சலம், இப்போதும் இந்தக் கட்டிலைச் செய்து வருகிறார்கள்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

தொடர்புக்கு:

malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x