Last Updated : 14 Jul, 2018 10:01 AM

 

Published : 14 Jul 2018 10:01 AM
Last Updated : 14 Jul 2018 10:01 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 91: வணிகரீதியான மண்புழு வளர்ப்புக்கு…

யா

ர் வேண்டுமானாலும் மிக எளிய முறையில், பெரிய அளவில் வணிகரீதியாக மண்புழு வளர்த்துப் பயனடைய முடியும். இதற்குப் போதிய அளவு உயிர்மக் கழிவுப் பொருட்கள் வேண்டும். அது பண்ணைக் கழிவாக இருக்கலாம் அல்லது உணவு விடுதிகளில் உள்ள கழிவாக இருக்கலாம் அல்லது பிளாஸ்டிக் போன்ற மட்காத பொருட்கள் தவிர்த்த நகரக் கழிவாகவும் இருக்கலாம். இவற்றைப் போதிய அளவில் சேகரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மட்கு உருவாக்கப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

முதலில் கழிவுப் பொருட்களில் மட்காத பொருள் ஏதும் இருந்தால் அவற்றை நீக்கிவிட வேண்டும். பின்னர் கழிவை நீண்ட குவியல்களாகப் போட்டுக்கொள்ள வேண்டும். முன்னர் கூறியதுபோல அடுக்குகள் அமைத்துக்கொள்ள வேண்டும். அடுக்குகளுக்குச் சாணம் அதிகமாகக் கிடைக்கவில்லை என்றால் சாணக் கரைசலே போதுமானது. கரைசலுக்குக் குறைந்த அளவு சாணம் போதும்.

குருணைக் குப்பை

வாரம் ஒருமுறையோ அல்லது சூழலுக்கு ஏற்பவோ தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதிலுள்ள அறிவியல். கழிவுகள் நன்கு மட்கத் தொடங்கும்போது குவியலில் வெப்பம் உண்டாகும். இது நாளாவட்டத்தில் தணியத் தொடங்கும். வெப்பமாக இருக்கும்போது மண்புழுக்களைக் குவியலில் இடக் கூடாது. வெப்பம் தணிந்தபின் குவியலில் இடலாம்.

மண்புழுக்கள் மிக வேகமாகப் பல்கிப் பெருகத் தொடங்கும். இதனால் மட்கிய குப்பை அடர்பழுப்பு வண்ணத்தில் குறுணைகளாக மாறும். இது மிகவும் சிறந்த உரம். குப்பையை மேல் மட்டத்தில் இருந்து முன்னர் சொன்னதுபோல எடுக்கலாம், அல்லது அதற்கான தனிப்பட்ட சல்லடைகள் மூலம் பிரித்து எடுக்கலாம்.

பிரித்தெடுக்கப்பட்ட மண்புழு எருவைக் கோணி மூட்டைகளில் நிரப்பி வைக்கலாம். எக்காரணம் கொண்டும் எருவை உலர்த்திவிடக் கூடாது. ஈரப்பதம் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வளர்ப்புத் தெளிப்பான்

மண்புழுக்களைப் பெரும் எண்ணிக்கையில் வளர்ப்பதற்கு எளியமுறையில் நாமே தெளிப்பான்கள் அமைத்துக்கொள்ளலாம். பொதுவாக, கோணிகளை மட்குக் குவியல்களின் மீது போட்டுக் கையால் நீர் தெளித்து வந்தாலே போதும். ஆனால், போதுமான குளிர்ந்த சூழல் இருந்தால் புழுக்கள் நன்கு பல்கிப் பெருக வாய்ப்பு உள்ளதால், அதற்கான சூழலை உருவாக்கலாம்.

இதற்காகக் கடைகளில் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும் குழாய்களை வாங்கி வடிவமைத்துக் கொள்ளலாம். இக்குழாய்கள் வழியாகப் பனித்தூவிபோல நீரைப் பீய்ச்சி அடிக்கச் செய்து நல்ல குளிர்ச்சியான நுண் காலநிலையை உருவாக்கிவிடலாம். இந்தச் சூழலில் மண்புழுக்கள் பல்கிப் பெருகும். மண்புழுக்களின் மீது நீர்த்திவலைகள் விழும்போது அவை மிகவும் மகிழ்ச்சியடைகின்றன. நுண்ணுயிர்களும் பெருகுவதால் மண்புழு உரத்தின் அளவு அதிகமாவதோடு மட்காகும் காலமும் விரைவடைகிறது.

கட்டுரையாளர்,

சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x