Published : 23 Jun 2018 10:27 AM
Last Updated : 23 Jun 2018 10:27 AM

கற்பக தரு 11: ‘பாஸ்கெட்’ பிரியாணி சாப்பிடலாமா?

 

கா

லம் எனும் வாகனத்தில் பல்லாண்டு பயணித்து, நமது கரத்தில் இருக்கும் மிக அடிப்படைத் தேவையான, உறுதியான ஒரு படைப்பு, கடகம் (கடவம்). குமரி மாவட்டத்தில் அனைவரின் வீட்டிலும் தவறாது ஒரு கடகம் காணப்படும். கடகம் எத்தனை முக்கியமானதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்று அது புறக்கணிக்கப்பட்ட ஒரு பொருளாகவும் மாறிவிட்டது.

கடகம் என்பது ஓலையில் செய்யப்படும் மிகப் பெரிய பெட்டி. கடகப் பெட்டி என்றும் கடாப்பெட்டி என்றும் அழைப்பார்கள். இரண்டு, மூன்று அடி அகலமும் ஒன்றிலிருந்து இரண்டரை அடி உயரத்துடனும் காணப்படும். மஞ்சணப்பெட்டியின் அடிப்படையை அறிந்தால் கடகப் பெட்டியைச் செய்துவிடலாம். ஆனால், இரண்டுக்குமான வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்குமானது.

கடகம் என்ற வார்த்தையே குமரி மாவட்டத்தில் ‘வடிவ நேர்த்தியற்றது’ என்ற பொருளிலேயே பெருமளவில் கையாளப்படுகிறது. கடகம்போல் உறுதியான, ஆனால் இலகுவான ஒரு பொருளை நாம் செயற்கையாக உருவாக்க இயலாது.

பப்படங்கள் வைக்க

ஓலைக் கடகம் செய்வதற்குக் குறைந்தபட்சம் ஐந்து ஓலைகளை ‘அடி வைப்பார்கள்’. அடி என்றால் அடிப்படையாக என்று பொருள். தற்போது குறைந்தபட்சம் 6 அடி முதல் 11 அடிவரை வைக்கிறார்கள். கடகம் விற்பனைக்கு வரும்போது அதன் செய்நேர்த்தியும் தொழில் அறிவும் வியக்க வைக்கும். கடகம் பெரிதாக இருப்பதால், அவை இடத்தை அடைத்துக்கொள்ளும். ஆகவே, கடகம் செய்பவர்கள் 15 கடகங்கள் சேர்ந்த ஒரு தொகுப்பைச் செய்வார்கள். அவற்றை ஒன்றுக்குள் ஒன்றாக வரிசைப்படுத்தி அடுக்கி விற்பனைக்குக் கொடுப்பார்கள்.

கடகம், ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வீடுகள்வரைக்கும் இருக்கும். மண் சுமக்க, தேங்காய் சுமக்க, உரம் சுமக்க, பூ எடுத்துச் செல்ல, மீன் எடுத்துச் செல்ல எனப் பலவாறாக முன்பு அது பயன்படுத்தப்பட்டது. திருமண விசேஷங்களுக்குக் காய்கறி வாங்க வருபவர்களின் கைகளில் கண்டிப்பாகக் கடகங்கள் இருக்கும். கல்யாண வீடுகளில் பொறித்த மென்மையான பப்படங்கள் வைக்க, பழங்களைப் பறிமாற இன்றும் கடகம் தேவையாக இருக்கிறது.

சுவையூட்டும் பெட்டி

கடகம் நமது பாரம்பரியப் பண்டங்களைச் சுமக்கும் ஓர் உன்னத வடிவம். நமது வணிகம் எப்படி இருந்தது என்பதற்கான இறுதிச் சான்று. தலைச் சுமையாக மீன், காய்கறி, கிழங்குகளை எடுத்துச் செல்லும் வயோதிகர்கள் இன்றும் குமரி மாவட்டத்தில் இருக்கிறார்கள். ஒரு கடகம், நன்றாகப் பேணப்பட்டால் மூன்று முதல் ஐந்து வருடங்கள்வரை பயன்தரும். ஓலைவிளையைச் சார்ந்த பால் தங்கம் (93854 45773), கடந்த 40 வருடங்களாகக் கடகங்களைப் பின்னிக்கொண்டு வருகிறார்.

‘பக்கெட்’ பிரியாணியை மறக்கடிக்கச் செய்யும் சுவையையும் மணத்தையும் கடகத்தில் வைக்கப்பட்ட ‘பாஸ்கெட்’ பிரியாணி தரும். முயற்சி செய்துபாருங்களேன்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x