Published : 19 May 2018 11:38 AM
Last Updated : 19 May 2018 11:38 AM

கற்பகத் தரு 06: கருப்பட்டிகளின் அரசன்

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரைக் காய்ச்சினால் முதன்மையாகக் கிடைப்பது கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம். சற்றே கரிய நிறத்தைக் கொண்டிருப்பதால் கருப்பு எனவும் கல் போன்று கட்டியாக இருப்பதால் கருப்புக் கட்டி எனவும் அழைக்கப்பட்டது மருவி ‘கருப்பட்டி’ எனப்படுகிறது. பருவ காலத்தில் கருப்பட்டி காய்ச்சுவது தென் மாவட்டங்களைப் பொறுத்த அளவில் அன்றாடச் செயல்பாடு.

பொதுவாகப் பெண்களே கருப்பட்டி காய்ச்சுவார்கள். பெரும்பாலும் பனையேறிகளின் மனைவியே கருப்பட்டி காய்ச்சினாலும், பனைகளைக் குத்தகைக்கு / பாட்டத்துக்கு விட்டவர்கள்கூடப் பதனீர் காய்ச்சி, கருப்பட்டி எடுப்பது வழக்கம். கருப்பட்டி காய்க்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதால், அதற்கெனத் தனிக் கொட்டகை அமைத்திருப்பார்கள்.

பாட்டிகளின் பலம்

முன்பு மண் பானைகளில்தாம் கருப்பட்டியைக் காய்ச்சி வந்தார்கள். அப்படிக் கருப்பட்டி காய்ச்சுவதற்கு விறகு அதிகமாகத் தேவைப்பட்டது. பனையேறியின் மனைவியும் பிள்ளைகளுமாக விறகுத் தேவைக்கென்று நாள் முழுவதும் ஓடுகிற சூழல் ஏற்படும். ஆகவே 1960-களில் மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. பதனீர் காய்ச்சும் பாத்திரம் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு, தகரத்தில் நீள்சதுரமாகவும் தட்டையாகவும் இருக்கும் பாத்திரம் ஒன்றை வடிவமைத்தது.

என்றாலும் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்ந்துவிடவில்லை. 1980-களில் இருந்து மார்த்தாண்டத்தில் செயல்பட்டுவரும் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம், விறகுகளை இவர்களுக்கு வழங்கி உதவியது.

கடுமையான இவ்வேலையைச் செய்த பாட்டிமார்கள் தங்கள் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘பதினஞ்சு கருப்பட்டி செய்த கையாக்கும்’ என்று பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். பதினைந்து கருப்பட்டிகள் என்பது சற்று ஏறக்குறைய 23 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இவ்வளவு கருப்பட்டி காய்ச்ச சுமார் 200 லிட்டர் பதனீர் தேவைப்படும். நாள் முழுவதும் இரண்டு மூன்று முறையாகத் தொடர்ந்து காய்ச்சிக்கொண்டே இருப்பார்கள்.

கருங்கல் கருப்பட்டி

கருப்பட்டிகளில் பல விதம் உண்டு. சுக்குக் கருப்பட்டி, புட்டுக் கருப்பட்டி, ஓலைக் கருப்பட்டி எனச் சேர்மானம் செய்யும் பொருளைக் குறிப்பிட்டு பேர் வைக்கும் வழக்கம் உண்டு. இவற்றில் சுவையும் வடிவங்களும் வேறுபடும். ஊர்ப் பெயரைக் கருப்பட்டிக்குச் சேர்த்து வழங்குவது, மற்றொரு மரபு. உடன்குடி கருப்பட்டி, வேம்பார் கருப்பட்டி, ராமநாதபுரம் கருப்பட்டி, சேலம் கருப்பட்டி எனத் தரத்தின்படி அவை வரிசைப்படுத்தப்படும். ஆனால், தமிழகத்தில் கருங்கல் கருப்பட்டியை அறிந்தவர்கள் மிகவும் குறைவு.

எனது தேடுதலில் இறுதியாகத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் கருங்கல் பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டியைப் பற்றி அறிந்தேன். ஆனால், அதுதான் கருப்பட்டிகளின் அரசன் எனத் துணிந்து கூறலாம். அதன் வடிவம் அனைத்துக் கருப்பட்டிகளையும்விடப் பிரம்மாண்டமானது. ஒரு கருப்பட்டியின் எடை சராசரியாக 1.650 கிலோ. அதன் சுவை நாக்கில் நின்று விளையாடும், அதன் விலை அதிகம்தான். கிலோ ரூ. 500-க்குத் தற்போது விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. இந்தக் கருப்பட்டிகளின் வரவு சந்தையில் மிகவும் குறைந்து வருகிறது. கருங்கலை ஒட்டிய பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகள் அனைத்தும் ‘கருங்கல் கருப்பட்டிகள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு:malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x