Published : 07 Apr 2018 10:54 AM
Last Updated : 07 Apr 2018 10:54 AM

விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்?

 

ந்திய விவசாயிகள் ஏன் தொடர்ந்து கிளர்ச்சிசெய்துகொண்டே இருக்கிறார்கள்? சில ஆண்டுகளாக வெவ்வேறு மாநிலங்களிலும் சமீபத்தில் மும்பையிலும் நடந்த விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பிறகு பலரிடம் எழுந்த கேள்வி இதுதான்.

வாக்கு வங்கிகள் மூலம் பதவியேற்ற எந்த அரசும் புறக்கணிக்க முடியாத வண்ணம், வேளாண்மை என்பது நாட்டின் முக்கிய பொருளாதார அங்கமாக இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பல ஆண்டுகளாக மத்திய அரசுகள், வேளாண்மை உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்காக ஒதுக்கிய தொகை, இடுபொருள் மானியம், கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன. அத்துடன் மாநில அரசுகளும் ஒவ்வொரு பருவத்திலும் கடன் தள்ளுபடிகளை அறிவிக்கின்றன.

ஆனாலும் விவசாயிகள் போராட்டங்களைத் தொடர்வதற்கும் போராட்டங்கள் தீவிரப்பட்டிருப்பதற்கும் அரசுத் திட்டங்கள் முக்கியப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காதது காரணமாக இருக்கலாம். வேளாண்மை சார்ந்த நெருக்கடிகளின் தன்மை, சமீப ஆண்டுகளாகத் தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

பற்றாக்குறையிலிருந்து உபரிக்கு

கொஞ்ச காலத்துக்கு முன்புவரை, பொய்த்துப் போன பயிர்களுக்காகவும் வறட்சியை முன்னிட்டும் தங்கள் போராட்டங்களை நடத்தினார்கள். கடந்த சில ஆண்டுகளாக மந்த்சவுர் தொடங்கி சேலம்வரை, கொள்முதல் செய்யப்படாத தக்காளி, திராட்சை, வெங்காயம், பால் உள்ளிட்ட பொருட்களைத் தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஏரிக்கரைகளிலும் கொட்டி விவசாயிகள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வேளாண் துறையைப் பொறுத்தவரை தவறும் பருவமழை, இடுபொருள் பற்றாக்குறை, குறைவான உற்பத்தி ஆகியவையே காலம்காலமாக அவர்களை வறுமைக்குத் தள்ளுவதாக இருந்தன.

சமீப ஆண்டுகளில் உபரி உற்பத்தியும் குறைவான விலையும் வேளாண் வருவாயை அதல பாதாளத்துக்குத் தள்ளியுள்ளன. கடந்த இருபதாண்டுகளிலான விவசாய உற்பத்திப் போக்கு உபரி உற்பத்திப் பிரச்சினை தொடர்பானது. 1998-99 முதல் 2009-10 வரை இந்தியாவின் அரிசி உற்பத்தி, 8.5 கோடி டன்களிலிருந்து 9.5 கோடி டன்களுக்குள் உறைந்துவிட்டது. 2002, 2004 ஆகிய வறட்சி ஆண்டுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு 8 முதல் 9 கோடி டன் அரிசியே நுகரப்பட்டது. அக்காலகட்டத்தில் பற்றாக்குறையே இருந்தது.

2011-12-ல் இந்தியா 10.5 கோடி டன் அரிசி உற்பத்தியை எட்டியது. கடந்த ஆறு ஆண்டுகளில் 10 கோடி டன் என்ற நிலையை விட்டுக் கீழிறங்கவே இல்லை. 2016-17-ம் ஆண்டிலோ இந்தியாவின் அரிசி உற்பத்தி, 11 கோடி டன். கொள்முதல் செய்யப்பட்ட 9 கோடி டன் அரிசி போக எஞ்சியது சந்தையில் உபரி இருப்பாக இருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் நெல்லுக்கான மொத்த விற்பனைத் தொகை ஆண்டுக்கு 2.4 சதவீதமே அதிகரித்துள்ளது.

கோதுமையின் கதையும் இதுதான். பத்தாண்டுகளாக 7.5 கோடி டன் சராசரி ஆண்டு உற்பத்தியாக இருந்த கோதுமை 2010-11-ம் ஆண்டிலிருந்து அதிகரித்து கடந்த ஆறு ஆண்டுகளில் 9.5 கோடி டன்னாக உள்ளது. உள்நாட்டுத் தேவையான 10 கோடி டன்னுக்கு அருகில் கோதுமை உற்பத்தி வந்து நிற்கிறது. இது உபரியாக வெகுகாலம் பிடிக்காது. விநியோகம் அதிகரித்திருப்பதால் கோதுமையின் விற்பனைத் தொகையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு சதவீதத்துக்கு மேலே உயரவில்லை.

சமீப காலம்வரை கடுமையான பருப்புப் பற்றாக்குறையை இந்தியா சந்தித்து வந்தது. புரதச் சத்துக்காக வெகுமக்கள் பருப்புகளை அதிகம் உட்கொள்ள ஆரம்பித்த நிலையில், பருப்புப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், பருப்பு உற்பத்தியும் பெருகிவிட்டது.

அரிசி, கோதுமை, தேயிலை போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்து அதற்கு விலை குறைந்துவரும் நிலையில், காய்கறி, பழ விவசாயிகளுக்கோ அதிகம் உற்பத்தியான பொருட்களை அழுகவிடாமல் பாதுகாப்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தியாவில் உருளைக்கிழங்கு உற்பத்தி இரண்டு மடங்காகிவிட்டது. தக்காளி மூன்று மடங்கு, வெங்காயமோ நான்கு மடங்கு. ஆனால், மோசமான சேமிப்பு வசதிகளும் மாநில அரசுகளின் சட்டங்களும் விவசாயிகளை உள்ளூர் சந்தைகளுக்குள்ளேயே கட்டுப்படுத்தி விலையை நிர்ணயிப்பதில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நிலை தொடர்கிறது.

உபரிதான் பிரச்சினையா?

வறட்சி ஆண்டாகக் கருதப்படும் 2014-லும்கூட அரிசி உற்பத்தி 10.5 டன்னைத் தாண்டியது. 8.6 கோடி டன் கோதுமையும் 1.7 கோடி டன் பருப்பும் உற்பத்தி செய்யப்பட்டன. மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரித்ததும் அதிக உற்பத்திக்குக் காரணமாக அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கோதுமைக்கும் நெல்லுக்கும் முறையே 73 சதவீதமும் 108 சதவீதமும் ஆதரவு விலை கூடியுள்ளது. சமீப ஆண்டுகளில் மாநில அரசுகளும் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய்க்கு ஆதரவு விலை போனஸை அதிகரித்துள்ளன.

குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டம் பல ஆண்டுகளாக இருந்துவரும் வேளையில், அந்த முறை விவசாயிகளைத் தொடர்ந்து தோல்வியடையச் செய்கிறதென்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.

பெரும்பாலான பயிர்களுக்கான சந்தை விலை அதிகாரப்பூர்வ ஆதரவு விலையைவிடக் குறைவாகவே உள்ளது.

24 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்திருந்தாலும் அரிசி, கோதுமையை மட்டுமே அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்கிறது. ‘நேஷனல் அக்ரிகல்சுரல் கோ-ஆப்பரேட்டிவ் மார்கெட்டிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ எனும் அமைப்பு, பருப்பைக் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளது.

மாநில அளவிலான கொள்முதல் நடவடிக்கைகள் இன்னும் மேம்போக்கானவை. நிதியும் யோசனைகளும் அற்றவை. அதனால், குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்தை நம்பி ஒரு விவசாயி கடுகு, திராட்சை அல்லது வெங்காயத்தைப் பயிரிட்டால், உற்பத்திப் பொருளை சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது விலைக்கு எந்த உத்தரவாதமும் இருக்காது.

மத்திய, மாநில அரசு அமைப்புகள் தடபுடலாக வாங்கும் நிலையிலும்கூட, சந்தைரீதியான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட பயிர்களையே வாங்குவதாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொள்முதல் இல்லாமல் போவதாலும் பெரும்பாலான விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைப்பதில்லை.

மத்திய அரசு 2017-18-ல் கொள்முதலை இரண்டு மடங்கு ஆக்கியும், உற்பத்தி செய்யப்பட்ட அரிசி, கோதுமையில் மூன்றில் ஒரு பங்கையும் பத்தில் ஒரு பங்கு பருப்பையுமே கொள்முதல் செய்ய முடிந்துள்ளது. பருவமழை நன்கு பெய்து, நிறைய பயிர்கள் உபரி நிலைக்குச் செல்லும்போது சந்தை விலையும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் நகராது.

புதிய நடவடிக்கைகள்

அரிசி, கோதுமையைக் கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசின் சந்தைத் தலையீடுகளுக்கு அதிக செலவு பிடித்தாலும் எந்த விளைவும் ஏற்படவில்லை. இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க, மத்திய அரசு புதிய கொள்கைத் திட்டங்களை உருவாக்க முயன்று வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்குப் பதிலாக விலைக் குறைபாட்டுத் தொகையைக் கொடுத்து, விலையில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முயல்கிறது.

இடுபொருள் மானியங்களுக்குப் பதிலாக நேரடி பணப் பரிமாற்றம் செய்யவும் திட்டமிட்டுவருகிறது. உற்பத்திப் பொருட்களை விற்பதற்கான ‘நேஷனல் எலக்ட்ரானிக் மார்க்கெட்’ திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது. தங்கள் விருப்பத்துக்கேற்பப் பொருட்களை விற்பதைத் தடுக்கும் வகையில் விவசாய உற்பத்திப் பொருள் சந்தைக் குழுவின் சட்ட விதிமுறைகளை ரத்து செய்ய மாநில அரசுகளை வலியுறுத்தவும் செய்துள்ளது.

ஆனால், பணவீக்கத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளும் வர்த்தகம் தொடர்பான கெடுபிடியான கொள்கைகளும் விவசாயிகளுக்குத் தடையாகவே உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் உபரி விநியோகம் இருந்தும், குறைந்த விலையில் கோதுமையையும் பருப்பையும் மத்திய அரசு அதிகமாக இறக்குமதி செய்துள்ளது.

விலைவாசி ஏற்றத்தைக் கையாளுதல்

சர்க்கரை, கோதுமை, அரிசி ஆகியவற்றின் விலை ஏற்றத்துக்கு ஏற்றுமதி வரிகளும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலைகளும் அவ்வப்போது காரணமாக அமைந்துவிடுகின்றன. ஒட்டுமொத்த ஏற்றுமதிக்கான தடைகளும் விலைவாசி ஏற்றத்துக்குக் காரணமாக உள்ளன.

மாநில அரசுகளோ, அதிகப்படியான வரிகளை இடுவதில் பிடிவாதத்தைத் தளர்த்தாமல், புராதன நடைமுறைகளைக் கொண்ட சந்தைகளுடனேயே பரிவர்த்தனையை வைத்துள்ளன. இதனாலேயே விவசாயிகள், தரகர்களை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.

இதனால்தான், உற்பத்தி குறைந்தாலும் அதிகரித்தாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமே என்ற நிலை தொடர்கிறது. பயிருக்குச் சந்தை விலை குறையும்போது, அரசு அவர்களைக் காப்பாற்ற முடியாமல் உள்ளது. பயிருக்கு விலை அதிகமாகும் போதும், அதனால் விவசாயிகள் பலன் பெற முடியாமல் போகிறது.

இந்த நிலைமைகளால்தான், இந்திய விவசாயிகள் துயரடைகிறார்கள். இதே காரணங்களால்தான் மாதச் சம்பளக்காரர்களும் எப்போதும் கவலையுடன் உள்ளனர். அதிக உற்பத்தித் திறனைக் கொடுத்தாலும் வெறும் பொட்டுக்கடலையைக் கொறித்துக்கொண்டு போகச் சொன்னால் யார்தான் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்?

நன்றி: தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x