Last Updated : 31 Mar, 2018 11:03 AM

 

Published : 31 Mar 2018 11:03 AM
Last Updated : 31 Mar 2018 11:03 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 76: செலவற்ற உயிரி உரங்கள்

ழைச்சத்து (நைட்ரஜன் சத்து) எல்லாப் பயிர்களுக்கும் தேவையான பேரூட்டங்களில் ஒன்று. நமது வளிமண்டலத்தில் உள்ள 80% தழைச்சத்தைப் பயிர்களால் நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாது. வேதியியல், உயிரியல் ஆகிய இரண்டு முறைகளில் பயிர்கள் தமக்கு வேண்டிய தழைச்சத்தை எடுத்துக்கொள்கின்றன.

வேதியியல் முறையில் தயாரிக்கப்படுபவை உப்பு உரங்கள். இவை இயற்கையான முறையில் செடிகளுக்கு உணவைக் கொடுப்பவை அல்ல. உயிரியல் முறை என்பது நுண்ணுயிர்களால் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துவது, மண்ணில் உள்ள ஊட்டங்களைத் திரட்டிக் கொடுப்பது.

இயற்கையாக நுண்ணுயிர்கள் வேர் முடிச்சுகளிலும் மண்ணிலும் வாழ்ந்து நைட்ரஜன் சுழற்சியில் முதன்மைப் பங்காற்றுகின்றன. தொழிற்சாலைகளில் நைட்ரஜன் தயாரிப்பு முறை மூலம் உரங்கள், ஞெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள், சாயங்கள், மருந்துப் பொருட்கள் போன்றவை செய்யப்படுகின்றன.

தூண்டுதல் தரும் முடிச்சுகள்

உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தம் என்பது ஒரு நொதிமச் செயல்பாடு. இது காற்றிலுள்ள நைட்ரஜனை அமோனியாவாக மாற்றும் செயல்பாடு. நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் ‘நைட்ரோஜீனஸ்’ என்ற நொதிமத்தைக் கொண்டுள்ளது. இது உயிரியல் நைட்ரஜன் நிலைப்படுத்தலுக்கான உயிரி-வேதியியல் அமைப்பை வழங்குகிறது. தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிர்களில் கிளப்சில்லா நியுமோனியா, அசட்டோபாக்டர், ரோடோசூடோமோனஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மற்றவை பயறு வகைப் பயிர்களின் வேர்களோடு இணைந்து ஒத்திசைந்து நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.

ரைசோபியம், பிராடிரைசோபியம், அசோரைசோபியம் போன்றவை ஒத்திசைந்து வாழும் தன்மை கொண்ட நுண்ணுயிர் இனங்கள். இவை ரைசோபியா என்று அழைக்கப்படுகின்றன. இவை பயற்றம் பயிர்களின் வேர் முடிச்சுகளை உருவாக்கும் தூண்டுதலைச் செய்கின்றன.

பயிருக்கு ஏற்ற ஊட்டங்கள்

இந்த முடிச்சுகள் நைட்ரஜனை நிலைப்படுத்தும்போது பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமோனியாவையும் கொடுக்கின்றன. இவ்வாறு நிலைநிறுத்தும் திறன் 20கிலோ நைட்ரஜன்/ஹெக்டேர்/ஆண்டு என்ற அளவு முதல் 300 கிலோ நைட்ரஜனை/ஹெக்டேர்/ஆண்டு என்ற அளவுவரை உள்ளது. இது பயிர், இயற்கைச் சூழல், மண்ணின் தன்மை, நுண்ணுயிர்களின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. இவை தற்பொழுது வேர் முடிச்சுகளைத் தூண்டும் மரபீனிகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

இவை தவிர நமது மண்ணில் பயனுள்ள வேறு பல நுண்ணுயிர்களும் உள்ளன. கரையாத நிலையில் உள்ள ஊட்டங்களைக் கரையும் நிலைக்கு மாற்றுவதும், அண்டை அயலில் உள்ள பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஊட்டங்களைப் பயிருக்கு ஏற்ற வகையில் திரட்டித் தருவதும் இவற்றின் பணிகள்.

பயன்படாத பாஸ்பரஸ்

பொதுவாக இந்திய மண்ணில் மிகக் குறைந்த அளவில் பாஸ்பரஸும், நடுத்தர நிலையில் பொட்டாசியமும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதாவது 13 கோடி டன் பாஸ்பரஸும் பயிருக்குப் பயன்படாத வகையில் உள்ளது. சில குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் இதைச் சிதைத்துப் பயிருக்கு ஏற்ற வகையில் கொடுக்கின்றன.

இப்படியாக நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிர்கள், பாஸ்பரஸை கரைக்கும் நுண்ணுயிர்கள், பொட்டாசியத்தைத் திரட்டும் நுண்ணுயிர்கள் ஆகியவை உயிரி உரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நீர்ம நிலையிலோ அல்லது திட நிலையிலோ அதிக அளவு செறிவுடன் கூடிய வகையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும், பாஸ்பரஸை கரைத்துத் தரும், பொட்டாசியத்தைத் திரட்டித் தரும் நுண்ணுயிர்களை, உயிரி உரங்கள் என்று வரையறுக்கலாம். இவற்றை, நைட்ரஜனை நிலைப்படுத்துபவை, பாஸ்பரஸை கரைப்பவை - திரட்டுபவை, பொட்டாசியத்தைத் திரட்டுபவை என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x