Published : 16 Sep 2017 11:39 AM
Last Updated : 16 Sep 2017 11:39 AM

கடலம்மா பேசறங் கண்ணு 20: சமூக மாற்றத்தின் உயிர்நாடி

தி

ருவனந்தபுரத்தில் சங்குமுகம் அருகே கண்ணாந்துறை என்னும் கடலோர கிராமத்தில் ஒரு சராசரி மீனவன். அவன் கடலுக்குப் போய்ச் சம்பாதிப்பதில் முக்காற்பங்கு குடி, வம்பு, வழக்கு, கைது, ஜெயில் எனக் கரைந்துவிடுகிறது. வீட்டில் கதியற்ற மனைவியுடன் பத்துப் பிள்ளைகள். தந்தை இறந்துவிட வேண்டுமெனக் குடும்பமே பிரார்த்திக்கிறது. குடும்பத்தின் இராப்பட்டினியைப் போக்க மார்க்கம் வேறின்றி அம்மா தலைச்சுமையாக மீன் விற்கும் தொழிலைத் தேர்ந்துகொள்கிறார்.

பத்துப் பிள்ளைகளில் மூன்றாவதாய்ப் பிறந்த பால் தாமஸ் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டுவேன் எனப் போராடுகிறான். காலையில் கரைக்கு வரும் தந்தையின் கட்டுமரத்துக்காகக் காத்திருப்பான். குற்றேவல்களை நிறைவேற்றி, மீனை உமலில் கொட்டி விற்பனைக்குத் தயார்படுத்திய பிறகு, அவசர அவசரமாகக் கடலில் இரண்டு மூன்று முறை மூழ்கி எழுந்து, நகரத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு ஒட்டமும் நடையுமாய்ச் சென்று சேர்வது அவனது அன்றாடப் போக்கு.

பெரும் போராட்டம்

பள்ளியில் படிக்கும் காலத்தில் கடைசி வரிசை பெஞ்ச் அவனுக்கு ஒதுக்கப்படுகிறது. கவிச்சி வாடை என்பது வகுப்பில் அவனது அடையாளமானது. புகுமுக வகுப்புக்குப்பின் பொறியியல் பட்டப்படிப்புச் சேர்க்கைக்குப் பயனற்ற போராட்டம். மார் இவானியோஸ் கல்லூரியில் பட்டப் படிப்பின்போது பசியோடு போராட்டம்.

பள்ளியில் படித்த காலத்தில் கையில் குறிப்பேடோ நூல்களோ எழுதுகோலோ எதுவும் அவன் கொண்டு போனதில்லை. வாங்குவதற்குப் பணம் வேண்டுமே. பள்ளி வகுப்புத் தோழன் ஒருவன் தான் பயன்படுத்திய இரண்டு சட்டைகளை இவனுக்குக் கொடுக்கிறான் – ரகசியமாக. 'ஒரு கடற்கரை இளைஞன் வகுப்பில் முன்னணியில் நிற்கிறான், பகலுணவு இல்லாமலேயே அதைச் சாதிக்கிறான்' என்று அறியவரும் அக்கல்லூரி முதல்வரான பாதிரியார், கல்லூரி நாட்களில் மாணவர் விடுதியில் இவனுக்குப் பகலுணவு வழங்க ஏற்பாடு செய்கிறார்.

தொடர் உந்துதல்

வேதியியலில் முதுநிலைப் பட்டம் முடித்தபின், அதே கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்கிறான். லட்சியம் அவனை உந்திக்கொண்டே இருக்கிறது. 1961-ல் நைஜீரியாவில் பள்ளி ஆசிரியர் பணியேற்கிறான். அங்கு பணிபுரிந்த காலத்தில் தனது கிராமத்திலிருந்து ஏராளம்பேரை அந்நாட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு பணியமர்த்த உதவுகிறான். வேதியியலில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெறுகிறான். 1971 முதல் அங்குள்ள அமாத் பெல்லோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆகிறான். லட்சியம் அவனை மேலும் உந்திச் செல்கிறது. 1986-ல் பால்ட்டிமோரில் (அமெரிக்கா) கல்லூரிப் பேராசிரியர் ஆகிறான்.

வெளிநாட்டு வேலை, பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து எல்லாம் உயர்ந்த பிறகும், அந்த இளைஞன் தன் கடந்த காலத்தை மறந்துவிடவில்லை. தனது வாழ்க்கையை இளைய தலைமுறைக்கு நம்பிக்கை தரும் செய்தியாய்ப் பதிவு செய்கிறான். ‘ஓர்மத் திரகள்’ (நினைவலைகள்) என்னும் சுயசரிதையாக அந்தப் பதிவு 2008-ல் வெளிவந்தபோது கேரள ஊடக உலகமே திரும்பிப் பார்த்தது. ஏராளம் மதிப்புரைகள், நேர்காணல்கள், கருத்தரங்குகள், பாராட்டுகள். அமெரிக்க மலையாளிகள் சங்கங்களின் இணையம் இம்மனிதரை வியந்து பாராட்டி விருது வழங்கியது.

வேள்வித் தீ

‘ஒர்மத் திரகள்’ நூலை 2008-ல் படித்தபோது என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை. முதல் தலைமுறைக் கடலோர இளைஞர்கள் பலருக்கும் இவ்வுணர்வு தோன்றியிருக்கக்கூடும். சமூகத்தின் உள்ளேயும் பிற சமூகங்களுக்கிடையேயும் அந்த இளைஞனுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள், அவனது இலட்சியத் தாகம், வாய்ப்பு மறுப்பு - எல்லாம் அவன் நெஞ்சில் தீயாய்க் கனன்றன. அது லட்சிய வேள்வித் தீயானது.

பால் தாமஸ் என்னும் அம்மனிதரைச் சந்தித்தே ஆகவேண்டும், அவர் வாழ்ந்த மண்ணைப் பார்க்கவேண்டும் என்னும் ஆவல் எனக்குள் பெருகியது. 2012 பிப்ரவரி முதல் வாரத்தில் அது நிகழ்ந்தது. மேட்டிமையோ, பெரியனவற்றைச் சாதித்துவிட்ட செருக்கோ இல்லாத வெகு இயல்பான புன்முறுவல், தீர்க்கமான பார்வை. இரண்டு மணி நேர உரையாடலுக்குப்பின் விடைசொல்லிப் பிரிகையில் அவரது முகத்தை வியந்து பார்த்தபடியே திரும்பினேன்.

இந்த மனசுக்குள்தானா அந்தத் நெருப்பு கனன்றுகொண்டிருக்கிறது! கையெழுத்திட்டு அவர் எனக்குத் தந்த நூற்பிரதியில் அந்தக் கங்குகளின் வெதுவெதுப்புத் தட்டியது. இந்த நூலின் தமிழ் வடிவம் ‘நினைவலைகள்’ என்ற தலைப்பில் (வறீதையா கான்ஸ்தந்தின் - சாந்தி, எதிர் வெளியீடு-நெய்தல் வெளி) வெளியாகியுள்ளது.

கோம்பையும் பால் தாமஸும் தேர்ந்துகொண்ட ரௌத்திரத்தின் திசைகள் வேறுவேறு. அவை சமூக மாற்றத்தின் உயிர்நாடி.

(அடுத்த வாரம்: உயிரின் தொட்டில்)

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x