Published : 14 May 2016 12:11 PM
Last Updated : 14 May 2016 12:11 PM

வாசகர் பக்கம்: நீரைத் தேடும் பெண்களுக்கு விடிவு எப்போது?

நீருக்காய் அவள் நடந்த தூரத்தை ஒரு நேர்கோட்டில் இழுத்தால் பூமத்திய ரேகையாகிப் போகும்.

என்ற எங்கோ படித்த வரிகளை யோசித்தபோது, அடுக்கடுக்காய்ப் பானைகளைச் சுமந்துகொண்டு பாலை நிலத்தின் சுடு மண்ணில் நடந்து செல்லும் ராஜஸ்தான் பெண்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

மாரியம்மன் கோயில் திருவிழாவில் கரகாட்டம். தலையில் கரம் ஏந்திச் சுழன்று ஆடிவந்தார்கள் பெண்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த ஓர் இளைஞன் சொன்னான், “இது என்ன ஆட்டம். இன்னைக்குத் திருவிழான்னு நேத்து ராத்திரி ஒரு மணிக்கே குழாய்ல தண்ணீர் விட்டாங்க. அப்போ நம்ம தெரு பொம்பளைங்க நாலஞ்சு கொடத்தத் தூக்கிக்கிட்டு என்ன ஆட்டம் போட்டாங்க, தெரியுமா?”. அந்த இளைஞன் கிண்டலாகச் சொன்னாலும், இரவு பகல் பாராமல் நீரைச் சுமந்து வீடு சேர்க்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களுடையதாகவே இருக்கிறது.

நாட்டின் 25 சதவீதம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. 2.55 லட்சம் கிராமங்களில் வாழும் 33 கோடி பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் நீருக்கான அலைச்சல் பெண்களுக்கான கூடுதல் சுமையாகிப் போகிறது.

குழாயடிச் சண்டை அவமானம்

வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் எல்லாம் வற்றிவிட்ட நிலையில், தெருக்குழாய்கள் மட்டுமே தண்ணீருக்கான ஒரே ஆதாரம். ஆனால், குழாயில் தண்ணீர் எப்பொழுது வரும், எவ்வளவு நேரம் வரும் என்ற கேள்விக்கு ‘எப்ப வேணா வரும், எப்ப வேணா நின்னும் போகும்’ என்ற உறுதியற்ற நிலைமைதான் பதிலாக உள்ளது.

பெரும்பாலான இடங்களில் வாரம் ஒரு முறை, இரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்டது. இத்தகைய சூழலில் அடுப்பில் சோறு கொதிக்கும்போது, கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருக்கும் போது, குழந்தை அழும்போது… ஏன் என்ன வேலையிருந்தாலும் லாரியில் தண்ணீர் வந்துவிட்டால் கையில் எத்தனை குடங்களைத் தூக்க முடியுமோ அத்தனையுடன் தெருவுக்கு ஓட வேண்டும். எப்படியாவது அடித்துப் பிடித்துத் தண்ணீர் பிடித்துவிட்டால் சில நாட்களுக்குக் கவலையில்லை. அதில் ஏமாந்து போனால், காசு கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காது. அதனால்தான் லாரியில் பிடிக்கும்போதும் குழாயடியிலும் சண்டை தவிர்க்க முடியாததாகிறது.

நீர்நிலைகள் வற்றிப் போய்க் குளிப்பதும் துணி துவைப்பதும் சாத்தியமில்லாத நிலையில் தண்ணீரைத் தேடி அலைவது, அதைச் சிக்கனமாகச் செலவழிப்பது, பாதுகாப்பது என்பது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. நீர்ப் பற்றாக்குறையால் கிராமப்புறங்களில் கழிப்பறையைப் பயன்படுத்துவது இல்லை என்பதும் வேதனை.

வீடுதோறும் நீர் மேலாண்மை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சி, நீரின் அருமையை உணர்த்தியிருக்கிறது, நீர் மேலாண்மை செய்வதற்கான நெருக்கடியையும் உருவாக்கியிருக்கிறது.

நீர் மேலாண்மை என்பது ஒரு அரசின் பொறுப்பு மட்டுமல்ல. வீட்டில் உள்ள அனைவரின் பொறுப்பாக மாற வேண்டும். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு நீரைச் சேகரிக்க முயற்சிக்க வேண்டும், நீர்ப் பயன்பாட்டில் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டில் தண்ணீரைக் குறைத்துப் பயன்படுத்துவதாலும் மறுசுழற்சி செய்வதாலும் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் 300 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்கிறது மத்திய அரசின் நீர் ஆணையம்.

தமிழகத்தில் நான்கு திணைப் பகுதிகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்கள் இருக்கின்றன. நமது பொறுப்பற்ற செயல்கள் தொடர்ந்து, நீரைப் பாதுகாக்கத் தவறினால் பாலை நிலம் உருவாகிவிடும். அப்படி நடக்காமல் தடுப்பதும், நீருக்காகப் பெண்கள் நடக்கும் தூரத்தைக் குறைப்பதும் நம் அனைவரது கைகளிலும்தான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x