Published : 18 Mar 2017 11:59 AM
Last Updated : 18 Mar 2017 11:59 AM

வயலுக்கு வளம் சேர்க்கும் நீர்நிலை வண்டல் மண்

‘இந்த வானம் பெய்தால் ஒரேயடியாகப் பெய்து கெடுக்கும், இல்லை காய்ந்தால் ஒரேயடியாகக் காய்ந்து கெடுக்கும்' என்று நம்மூர்ப் பெரியவர்கள் சில நேரம் சொல்வது உண்டு. வழக்கமாக மாறிமாறி வருகிற பருவகாலங்களைப் போன்றதுதான் எதிர்பாராத மழையும் மழையின்மையும். ஆனால், சில வேளைகளில் இவை எல்லை மீறிப் போவதும் உண்டு. வரலாறு நெடுக வெள்ளமும், வறட்சியும் நம் நிலத்தை ஆட்கொண்டேதான் வந்திருக்கின்றன. ஆனால் ஒருபோதும் ‘வறுமை’ நிலவிடாத வகையில் நீர்-நில மேலாண்மையை நம் முன்னோர் கடைபிடித்துவந்தனர். அப்போது நிலத்தில் மழையாகப் பொழிந்த நீரை ஏந்திக்கொள்ள மண்ணாலும் கல்லாலும் அணையிட்டுக் குளங்கள், ஏரிகள், ஊருணிகள், கண்மாய்கள் எனப் பல வடிவங்களிலும் நீரைச் சேமித்துக்கொண்டனர்.

நிலத்தின் மேற்பரப்பானது மழையாலும் வெயிலாலும் பல்வேறு மாறுபாடுகளை அடைந்த வண்ணமாகவே இருக்கிறது. இதனால் உருவாகிற மண், மணல், புழுதி ஆகியவை நிலத்தில் மழை பொழியும்போது அடித்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் தொடர்ந்து படிந்துகொண்டே வருகிறது. ‘நிலத்தோடு நீரே’ என்பதனால் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர்நிலைகளில் படியும் வண்டல் வீழ்படிவானது அந்த நிலத்தை ஒத்த நிறத்தையும் வளத்தையும் கொண்டிருக்கும்.

ஊட்டச் சமநிலைக்கு

மற்றொரு புறம் உழவுத் தொழிலில் நிலத்தில் விளைவிக்கப்படும் பயிர்களுக்காக நிலத்துக்கு ஊட்டம் தொடர்ந்து அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு நிலத்தின் மேற்பரப்பை உழுதுகொண்டே இருப்பதால் மண் அரிப்பு ஏற்படும். வளமும் குறைந்துகொண்டே வரும்.

இந்த இரண்டு விளைவுகளையும் சமநிலைப்படுத்தும் பொருட்டு ஆண்டுக்கு ஆண்டு கோடைக்காலத்தில் நீர்நிலைகளில் படிந்திருக்கும் மண்ணை எடுத்து நிலங்களில் பரப்புவது பண்டைய வழக்கம். இவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு படிகிற மண்ணை எடுப்பதன் மூலம் நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்பு அளவும் ஒரே சீராகப் பராமரிக்கப்படும்.

சில இடங்களில் வண்டல் மண்ணுக்குச் சேடை மண், சேற்று மண் என்றெல்லாம் பெயர் வழங்கப்படுகிறது. வழங்கு பெயர் மாறுபட்டாலும் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் பழக்கம் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வந்தது.

அந்நியமான நீர்நிலைகள்

இடைக்காலத்தில் நீர்நிலைகளில் இருக்கிற இந்த மண் சிறு கனிமத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. பின்னர் இவற்றுக்கெனத் தனிச் சட்டம் இயற்றப்பட்டு, நிலத்துக்கு அடியில் படிந்திருக்கும் அரிய வகைக் கனிமங்களைக் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு கனிமவளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனால், மக்கள் பராமரித்து வந்த நீர்நிலையின் பயன்பாடுகள் எளிய மக்களின் கைகளுக்கு எட்டாத தொலைவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், சமூகக்காடுகள் வளர்ப்பு என்ற பெயரில் நீர்நிலைகளில் கருவேல மரங்களை வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நீர் நிற்க வேண்டிய இடத்தில் முள்மரங்கள் வேர்ப் பிடித்து நிற்கின்றன. ஓடிவருகிற நீரானது கருவேல மரங்களின் தடுப்பால் மண் படிந்து மேடிட்டு உள்ளது. இம்மரங்கள் ஏரிகள், கண்மாய்கள் நடுவில் பெருந்தீவுகளைப் போன்று காட்சியளிக்கின்றன. இதுவும் ஒருவகையில் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்குத் தடையாக உள்ளது. மற்ற இடங்களிலும் சீமை கருவேல மரங்கள் முளைத்து முற்றுகையிட்டுள்ளன.

பராமரிப்புக்கு எளிய தீர்வு

நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருவதைப் போன்று, முறையான பராமரிப்பு இன்மையால் மூன்று அடிக்கு மேல் மண் மேடிட்டும் கிடக்கின்றன நம் ஊர் நீர்நிலைகள். நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மண் குன்றுகளாகிவிட்டன, நீதிமன்றங்கள் தலையிட்டு நீக்க வேண்டிய நிலையில் சீமைக் கருவேல மரங்களும் இவற்றைச் சுற்றி மண்டியிருக்கின்றன.

கடந்த காலத்தில் ‘ஏரி வாரியம்’ என்ற பெயரில் மேலாண்மையும், குடிமராமத்து முறையில் வீட்டுக்கு ஒருவர் பராமரிப்புப் பணியிலும் ஈடுபட்டுவந்தனர். தற்போதைய நிலையில் பல்வேறு அணைக்கட்டுகளில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை எடுப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த ஆய்வுகளை மேற்கொள்ளவே பல கோடி ரூபாயும், தமிழகம் முழுவதுமுள்ள நீர்நிலைகளில் தூர்வார மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும், இம்மண்ணைக் கொட்ட இடமில்லை என்றும் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதற்கெல்லாம் மிக எளிய தீர்வு மக்களிடமே உள்ளது. நீர்வழித் தடங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ஆகியவை நீக்கப்பட வேண்டும். அதே வேளையில் மக்களின் வேளாண்மைத் தேவைக்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதை அரசு ஊக்குவிப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கு மிகச் சிறந்த தீர்வை எட்டமுடியும்.

உற்பத்திக்கு அடிப்படையாகும் வண்டல் மண்

கடந்த ஐம்பது ஆண்டுகளாக வேதி உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி உள்ளிட்டவற்றால் நமது வேளாண் முறையும், நிலமும் பெருமளவு பாழ்பட்டுள்ளன. இழந்த நிலத்தின் வளத்தைப் பெருக்க வளமான வண்டல் மண்ணைக் கொண்டு மீட்டெடுக்கலாம். இதனால் நீர்நிலைகளும் ஆழமாகும், நிலமும் வளம் பெறும்.

நீர்நிலைகளை ஆழப்படுத்துவதன் மூலம் மழைநீர் சேகரிப்புக் கொள்ளளவு அதிகமாகிறது. ஒரு போகம் சாகுபடி என்பது இரண்டு போகமாக அதிகரிக்கலாம். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதால் கிணறுகளிலும், ஆழ்குழாய்களிலும் நீர்மட்டம் உயரும். நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறையும். குறிப்பாகக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உப்புத்தண்ணீரின் ஊடுருவல் தடுக்கப்படும். மீன் வளம், கால்நடைகளின் மேய்ச்சல் பரப்பு அதிகரிப்பு என ‘நீர்நிலை மையப் பொருளாதாரம்’ மீட்டெடுக்கப்படும்.

மக்களின் உணவுப் பாதுகாப்புக்கும், நாட்டின் அனைத்துத் துறை உற்பத்திக்கும் அடிப்படையாக உள்ள நீர்நிலைகளைத் தூர் வாருதலே தீர்வாகும். நீர்நிலைகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு வழி செய்யும் அரசுச் சட்டமும் உள்ளது. இந்தக் கோடைக் காலத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டு நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்.

வண்டல் மண் வளமான உரம்

நிலத்தின் மேற்பரப்பில் பல்வேறு காலநிலை, மனிதர்கள், விலங்குள் உள்ளிட்டவற்றின் தொடர் நடவடிக்கைகளால் பாறை உள்ளிட்டவற்றில் இருந்து உருவாகும் மண் துகள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதனுடன் தாவரங்கள், உயிரினங்கள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றின் சிதைவு, கழிவு போன்றவையும் கலந்து வளமான மண்ணாகச் செழுமையுறுகிறது. வண்டல் மண்ணில் பல்வேறு வகையான பயிர்களுக்குத் தேவையான ஊட்டங்களும் நிறைந்துள்ளதால், வண்டல் மண் இட்டுப் பயிர் செய்த நிலங்கள் வளம் கொழிக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ஏரி-குளங்களில் வீழ்படிவாகப் படியும் வண்டல் மண்ணை ‘வளமான உரம்’ என்றே சொல்லலாம்.

வண்டல் மண் சட்டம்: மேலும் மாற்றங்கள் தேவை

தற்போதைய விதிகளின்படி ஏரி, குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்டத் தலைநகரில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தையே நாட வேண்டியுள்ளது. இதற்கான வழிமுறைகளை விவசாயிகள் தங்களது கிராமத்திலேயே பெறும் வகையில் விதிகளை மாற்றியமைக்க வேண்டும். புதிய சட்டத்திருத்தம் வண்டல் மண் மட்டுமல்லாமல் நீர்நிலைகளின் கட்டமைப்பைக் குலைக்கக்கூடிய சவுடு மணல், பாறைமண் எடுக்கவும் வழிசெய்கிறது. இதனால் நீர்நிலைகளின் கட்டமைப்பு குலைய விடக் கூடாது.

அதேநேரம், வேளாண் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுப்பதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் கூடாது. வேண்டும் அளவு மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும். விவசாயத் தேவைக்காக எடுக்கும்போது எவ்விதக் கட்டணமும் விதிக்கக் கூடாது. தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களை வண்டல் மண் எடுப்பதற்கு ஈடுபடுத்தலாம். செயற்கை ரசாயன உரங்களுக்குத் தரும் மானியத்தை வண்டல் மண் எடுப்பதற்கு அளிப்பதன் மூலம், ஏழை உழவர்கள் வாகனச் செலவுக்கு உதவியாக அமையும். நீர்நிலைகளைத் தூர்வார ஆகும் செலவை வண்டல் மண் எடுத்து நிலத்துக்குச் செல்வதற்குச் செலவிட வேண்டும்.

வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை ஆகியவை வண்டல் மண் நன்மைகள் குறித்து விளக்கி மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

வண்டல் மண் எடுப்பதற்கான வழி

தமிழ்நாடு அரசு மக்களின் சொந்தப் பயன்பாட்டுக்கும், விவசாய நிலங்களை மேம்படுத்தவும் அரசாணை எண் 233 (எம்.எம்.சி. 2) தொழில்துறை; நாள் 23.09.2015-ன்படி,1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளில் விதி எண் 12 (2)-ல் மாற்றியமைத்துள்ள புதிய வழிமுறைகளின்படி பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் 30 கன மீட்டர் (அதாவது 200 கன அடி கொள்ளளவு, 5 லாரிகள்) அளவுக்கு எந்தக் கட்டணமும் செலுத்தாமல் முன் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் மாவட்ட நிர்வாகம் கூறும் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, வேண்டும் அளவு எடுத்துக்கொள்ளலாம். இதற்குத் தங்களுடைய நிலம் தொடர்பான ஆவணங்களின் நகலை அளித்து மாவட்ட நிர்வாகம் அல்லது கனிம வளத் துறையை அணுக வேண்டும்.

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆய்வு மாணவர்
தொடர்புக்கு: mazhai5678@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x