Last Updated : 27 Aug, 2016 02:29 PM

 

Published : 27 Aug 2016 02:29 PM
Last Updated : 27 Aug 2016 02:29 PM

முன்னத்தி ஏர் 45: முன்னாள் எம்.எல்.ஏ.யின் இயற்கை மாட்டுப் பண்ணை

ஒரு முழுநேர அரசியல்வாதி, முழுநேரப் பண்ணையாளராக மாறிய சுகமான நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்தேறியுள்ளது. கண்ணுக்கெட்டிய தொலைவுக்குச் சீமை கருவேல முள் மரங்கள், வெப்பம் தகிக்கும் கரிசல் மண் இது. இந்த வறண்ட நிலத்தில் ஒரு சோலையை உருவாக்கியுள்ளார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வ. மார்கண்டேயன்.

ராமச்சந்திராபுரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வழக்குரைஞர் பட்டம் பெற்று, பின் அரசியலில் நுழைந்து வெற்றி பெற்ற இவர், தன்னுடைய சிறு வயது மகனின் ஆசை வார்த்தைகளால் உந்தப்பட்டு இயற்கை வேளாண்மைக்குள் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. வீட்டுமனைத் தொழில் செய்ய வேண்டும் என்று புறப்பட்ட இவருக்கு மகன் கூறிய வார்த்தைகள், சூழலைக் கெடுக்காத தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தீவிரமாக ஏற்படுத்தின.

பால் பண்ணை

வேளாண்மையைக் குடும்பத் தொழிலாகக் கொண்டிருந்தாலும் வழக்குரைஞராக மாறிப் பொதுவாழ்வில் நாட்டத்துடன் இருந்த இவர், தனது ஊரில் உள்ள பொது இடத்தை நல்ல பழத்தோட்டமாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண்மை அவரை ஈர்த்தது.

கடந்த 2007-ம் ஆண்டு இயற்கை வேளாண்மை, பால் பண்ணை என்று தனது பண்ணையை அவர் முழுமையாக விரிவுபடுத்தத் தொடங்கினார். இதற்காகப் பல்வேறு இயற்கை வேளாண் பண்ணைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, ஒவ்வொன்றின் சிறப்புகளையும் தெரிந்துகொண்டார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர்த் தனது பகுதிக்கு ஏற்ற தொழிலாகப் பால் பண்ணைத் தொழில் பொருத்தமானது என்கிற முடிவுக்குவந்தார்.

நான்கிலிருந்து 150 மாடுகள்

நான்கு மாடுகளுடன் தொடங்கிய சிறிய பால்பண்ணை இன்று ஏறத்தாழ 150 மாடுகளுடன் பெருகியுள்ளது. அம்பாள் கோசாலை என்ற பெயரில் இவருடைய பால்பண்ணை நடைபெறுகிறது. இவருடைய அனைத்து உற்பத்திப் பொருட்களும் `அம்பாள்’ என்ற பெயரிலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன.

எந்தவிதமான ஆன்ட்டி பயாடிக்குகள், ஹார்மோன் ஊசிகளின் பயன்பாடு இவருடைய பண்ணையில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கொட்டகையில் காற்றோட்டம், முறையான கழிவு நீக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு மாடுகளுக்கான இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தவணை பால் கறவை நள்ளிரவு தாண்டிய பிறகு, காலை ஒரு மணிக்குத் தொடங்கி நான்கு மணிக்கு முடிகிறது. அதேபோலப் பிற்பகல் கறவை நண்பகல் தாண்டி ஒரு மணிக்குத் தொடங்கிப் பிற்பகல் நான்கு மணிக்கு முடிகிறது. கறப்பதற்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கறவை முடிந்தவுடன் மாடுகள் சுத்தம் செய்யப்பட்டு, சுதந்திரமாகத் திரிவதற்கு எனக் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவை அனுப்பப்படுகின்றன. பெரும்பாலும் கலப்பின மாடுகளையே வைத்துள்ளார்.

லிட்டர் ஐம்பது ரூபாய்தான்

ஏறத்தாழ 1,000 லிட்டர் பால் கிடைக்கிறது. இதில் பெரும்பகுதி நேரடி விற்பனைக்குச் சென்றுவிடுகிறது. மீதமுள்ள பால் தயிர், நெய் தயாரிக்கவும் இனிப்புகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. நேரடி பால், பாக்கெட்டுகளில் பொதிவு செய்யப்பட்டு இவர்களது சொந்த வண்டிகளின் மூலமாக விற்பனை முகவர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஐம்பது ரூபாய் என்ற விலையில் தரமான பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் முகவருக்கும் ஐந்து ரூபாய் கிடைக்கிறது.

விற்பனை போக எஞ்சிய பால், தயிராக மாற்றப்படுகிறது. அதுவும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர நெய்யும் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்குச் செல்கிறது. தூய்மையான முறையில் தயாரிக்கப்படுவதால் மணம் மிகுந்த தரமான நெய், நன்கு விற்பனையாகிறது. இனிப்பு தயாரிப்பதற்கென்று ஒரு தனிப் பகுதி பண்ணையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கே தொழிலாளர்கள் இனிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுவையான இனிப்பு தயாரிக்கப்பட்டு, அதுவும் சந்தைக்கு அனுப்பப்படுகிறது.

(அடுத்த வாரம்: மாடுகள் தரும் மின்சாரம்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் | தொடர்புக்கு: adisilmail@gmail.com

மார்கண்டேயனைத் தொடர்புகொள்ள: 9842905111

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x