Published : 10 Dec 2016 09:46 AM
Last Updated : 10 Dec 2016 09:46 AM

மீனவர்களைத் துரத்திவிட்டு ஆமைகளைப் பாதுகாக்க முடியுமா ?

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தையொட்டிப் பங்குனி ஆமைகள் (ஆலிவ் ரிட்லி) இனப்பெருக்கத்துக்காகத் தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு வருகின்றன. இது நினைவு தெரியாத காலம் முதல் நடந்துவருகிறது. கடல் ஆமைகள் மீனவர்களுக்குப் புதியவை அல்ல; அவர்களைப் பெரிதாகக் கவரும் உயிரினங்களும் அல்ல. ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பார்த்துவரும் ஓர் உயிரினம் அது. இந்தக் கடல் ஆமைகள் ஒருநாள் தங்களுக்கு வில்லனாகப் போகின்றன என்று மீனவர்கள் ஒரு நாளும் நினைத்திருக்க மாட்டார்கள்.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தமிழ்நாடு மீன்வளத் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் உள்ள 90 கிராமங்களில் ஐந்து கடல் மைல்கள் தூரத்துக்கு அனைத்து வகை மீன்பிடித்தலையும், அந்தச் சுற்றறிக்கை தடை செய்தது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் புலம்பெயரும் பங்குனி ஆமைகளைப் பாதுகாக்கத்தான் இந்த உத்தரவு என்று சொல்லப்பட்டது. இது ஏன் நடந்தது? இது எப்படி நடந்தது? தமிழ்நாட்டின் கடல் ஆமை பாதுகாப்பு பற்றியும், மீனவச் சமூகத்தினருக்கு என்ன நிகழவிருக்கிறது என்பதையும் பார்ப்போம்.

நாடகம் அரங்கேறுகிறது

ஓர் ஆங்கில நாளிதழில் ‘துர்நாற்றம் வீசும் மரணம்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை, கடல் ஆமை இறப்பு தொடர்பான எச்சரிக்கை மணியை அடித்தது. ஒரே நாளில் சென்னை கடற்கரையோரத்தில் 35 பங்குனி ஆமைகள் இறந்தது பற்றி அந்தச் செய்திக் கட்டுரை பேசியது. இது சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வரவே, நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கொன்றைப் பதிவு செய்தது. விளைவாக, மீன்வளத் துறை ஆமை பாதுகாப்புக்கான திட்டம் ஒன்றை முன்வைத்தது.

அதைப் பரிசீலனை செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர், அது முழுமையற்ற திட்டம் என்றும், சிறு மீனவர்களை இந்தத் திட்டம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறினார். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் அனைத்து வகை மீன்பிடித்தலையும் தடை செய்வது அவசியமற்றது என்று அவர் சுட்டிக்காட்டினார். வேறு சில இயற்கைப் பாதுகாப்பு நிபுணர்கள், ஆமை புலம்பெயரும் பருவத்தில் 10 ஹெச்.பி. ஆற்றலுக்கும் குறைவான சக்தி கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகளை மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கலாம் என்றனர். அதேநேரம் தீவிரமான கண்காணிப்பு மற்றும் ரோந்து நடைமுறைப்படுத்த வேண்டும், அப்பருவத்தில் பயன்படுத்தப்படும் வலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ஊடகங்கள் உருவாக்கிய எச்சரிக்கை, மீன்வளத் துறையின் தணிக்கை அறிக்கை, சில இயற்கைப் பாதுகாப்பு நிபுணர்கள் முன்வைக்கும் அதிதீவிர நடவடிக்கைகள் ஆகியவையே பிரச்சினை பற்றிய தவறாக பார்வையை உருவாக்குகின்றன.

பாதுகாப்பின் வரலாறு

சென்னையில் கடல் ஆமைப் பாதுகாப்பு வரலாறு 1970-களில் தொடங்கியது. அப்போது, சென்னை பாம்புப் பண்ணை, சென்னை முதலைப் பண்ணை அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் சென்னைக் கடற்கரையோரங்களுக்கு வரும் கடல் ஆமைகள் பற்றியும், அவற்றுக்கு உள்ள ஆபத்துகள் பற்றியும் ஆவணப்படுத்தினர். அதன் மூலம் இந்தியாவில் கடல் ஆமைகள் பாதுகாப்புச் செயல்பாட்டின் பிறப்பிடங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு மாறியது.

பெண் பங்குனி ஆமைகள் கடற்கரையோரங்களை இனப்பெருக்கத்துக்காக முட்டையிடும் மையமாகக் கருதுகின்றன. இப்படி இடப்படும் ஆமை முட்டைகளை முறைப்படிப் பாதுகாக்க, அவற்றைச் சேகரித்து முட்டை பொரிப்பகங்களில் 45 நாட்களுக்கு அடைகாக்க வைக்கும் வேலையைத் தன்னார்வலர்கள் செய்கின்றனர். ஆரம்பக் காலத்தில் மீனவர்களும் இரவு நேரத்தில் கடற்கரையோரமாக ரோந்து சென்று பாதுகாப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவியாகவும் முட்டை பொரிப்பகங்களுக்கு உதவியாகவும் செயல்பட்டுள்ளனர்.

பிறகு மாணவத் தொண்டர்கள் இணைந்து கடல் ஆமை பாதுகாப்பு மாணவர்கள் அமைப்பை (Students Sea Turtle Conservation Network -SSTCN) 1988-ல் உருவாக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு கடல் ஆமைப் பாதுகாப்பில் முனைப்பாக ஈடுபட்டுவருகிறது. டிரீ ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகள், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் ஆமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபாடு காட்டின.

சேகரிக்கப்பட்ட முட்டைகள் 45 நாட்கள் கழித்துப் பொரிந்த பிறகு, ஆமைக் குஞ்சுகளைக் கடலில் விடுவது இப்போது கொண்டாட்டமாகவே மாறிவருகிறது. அந்த நிகழ்வுகளில் உள்ளூர் மீனவச் சமூகமும் முக்கியப் பங்காற்றுகிறது. அது மட்டுமல்லாமல், கடல் ஆமையைத் தங்கள் வாழ்க்கையில் முதன்முறையாகப் பார்ப்பவர்களைப் பயிற்றுவிக்கும் வேலையையும் மீனவர்கள் செய்கிறார்கள்.

இப்படியிருக்கும் நிலையில், ஆமைகளைக் காப்பதற்காக மீன்வளத் துறை சமீபத்தில் அறிவித்துள்ள மீன்பிடித்தலுக்கான தடை நியாயமற்றது. உள்ளூர் மக்களுக்கும் கடல் ஆமைகளுக்கும் இடையிலான உறவை அது சிதைத்துவிடும். உள்ளூர் மீனவர்கள் கடல் ஆமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லையெனும்போது, பின்னர் பிரச்சினை எங்கிருந்து வருகிறது?

கடல் வளத்தின் நிலை

மீன்பிடித் தொழில் எப்படி இருக்கிறது என்றும், மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் பாரம்பரிய சிறுதொழில் மீனவர்களைக் கேட்டால் தெரியும். மிகவும் சோகத்தில் இருக்கிறோம் என்ற பதிலையே அவர்கள் சொல்வார்கள். கடலடியை வழித்தெடுக்கும் இயந்திரப் படகு இழுவை வலைகள், செயற்கையிழை வலைகள் போன்ற நவீன மீன்பிடி முறைகளை நாட்டிலேயே முதன்முதலில் முன்னெடுத்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆனால், அந்த மாற்றங்கள் எந்தக் கட்டுப்பாட்டுடனும் நடைமுறைக்கு வரவில்லை.

இதன் காரணமாக, இழுவைப் படகுக்காரர்களுக்கும் சிறுதொழில் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏனென்றால், இழுவைப் படகுக்காரர்களும் கடற்கரையோரத்தில் மீன்பிடிக்க ஆரம்பித்ததுதான். இதனால் சிறுதொழில் மீனவர்கள் சங்கமாகத் திரண்டு போராடியதன் காரணமாகத் தமிழ்நாடு கடல் மீன்வளக் கட்டுப்பாடுச் சட்டம் 1983 (Tamil Nadu Marine Fisheries Regulation Act, 1983) உருவானது. அச்சட்டம் கடற்கரையோரமாக மூன்று கடல் மைல்கள் தொலைவில் சிறுதொழில் மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கலாம் என்றது.

ஆனால், அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அது மட்டுமல்ல, சிறுதொழில் மீனவர்களின் வலையில் ஆமைகள் சிக்குவதே மீன்பிடித் தடைக்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அதைவிடவும் இயந்திர-இழுவைப் படகு வலைகளிலேயே ஆமைகள் அதிகம் பலியாகின்றன.

இப்போது, கடல் ஆமைப் பாதுகாப்பே மிக முக்கியமானது என்று சொல்கிற மீன்வளத் துறை, மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி எந்தக் கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக, மீன் பிடிப்பதற்காகத் தடை செய்யப்பட்ட கடற்பரப்பை ஐந்து கடல் மைல்கள்வரை நீட்டித்துள்ளது. இது தவறானது மட்டுமல்லாமல், விநோதமானதும்கூட. 1983 சட்டம் கொண்டுவரப்பட்டதன் உண்மையான நோக்கமே, சிறுதொழில் மீனவர்களைக் காப்பதுதான்.

இதுநாள்வரை சிறுதொழில் மீனவர்களைப் பாதுகாக்க அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தாத அரசு, இப்போது ‘தன் கண்களைத் தன் கையாலேயே குத்திக்கொள்வதைப் போன்று சிறு மீனவர்களுக்கு எதிராக அதே சட்டத்தைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதுதான் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.

பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள்

முட்டை இடுவதற்குக் கடற்கரையைத் தேடி வரும் கடல் ஆமைகளைப் பாதுகாப்பது முக்கியமானதுதான். அதேநேரம், ஏற்கெனவே துன்பச் சுழலில் உழன்றுகொண்டிருக்கும் மீனவர்களுக்கான வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துவதும் முக்கியமானதுதான். அவர்களின் வாழ்வாதாரம் நிலைத்திருப்பதை உறுதிப்படுத்துவதும் முக்கியமானதுதான்.

கடற்கரையோரம் முழுவதும் மீன் பிடிக்கத் தடை விதிப்பது பிரச்சினைக்குத் தீர்வல்ல. சமூகரீதியில் நியாயமானதும், சுற்றுச்சூழல் ரீதியில் வலுவானதுமான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மீனவர்களுக்கும் கடல் ஆமைகளுக்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவைத் தகர்த்தெறியாமல், அதை வலுப்படுத்து வதற்கான பாதுகாப்புத் திட்டங்களே தற்போதைய தேவை.

கடந்த 30 ஆண்டுகளாக, இனப்பெருக்கத்துக்காகத் தமிழ்நாட்டுக் கடற்கரையைத் தேடி வரும் ஆமைகளின் எண்ணிக்கை நிலையான ஒன்றாக இருக்கிறது என்பதை SSTCN அமைப்பின் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆமைகளைப் பாதுகாப்பதில் நாட்டம் கொண்டவர்களும் மீனவச் சமூகமும் கரம்கோத்துச் செயல்பட்டதே, ஆமைகளின் எண்ணிக்கை சரியாமல் இருந்ததற்கான வெற்றியின் ரகசியம் என்பதை உணர வேண்டும்.

இயற்கைப் பாதுகாப்பு நிபுணர்களும் மீன்வளத் துறையும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேலும் சிறந்த திட்டங்களைக் கண்டறிய வேண்டும். அதற்குப் பதிலாக மீன் பிடிக்கத் தடை விதித்துவிட்டு, ஆமைப் பாதுகாப்பில் மீனவர்களை எப்படி ஈடுபடுத்த முடியும்?

- ராகுல் முரளிதரன்
சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளை.
- ஆர்த்தி ஸ்ரீதர்
தக்ஷிண் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்

தொடர்புக்கு: Rahul.muralidharan@atree.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x