Published : 12 Sep 2015 11:14 AM
Last Updated : 12 Sep 2015 11:14 AM

பேசும் படம்: வல்லூறைத் தேடி இரண்டு மாதம்

“உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் இருக்கும் பீம்தால் கிராமத்தின் மலைச்சரிவில் நின்று படமெடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கழுகைப் பார்த்து, அதைப் படமெடுக்க முன்னேறிக் கொண்டிருந்தபோதுதான் மலையுச்சிக்கு வந்துவிட்டது தெரிந்தது. அதன் பிறகு சருகுகள் நிறைந்த மலைச்சரிவில் கனத்த கேமரா துணைக்கருவிகளுடன் கீழே இறங்குவது பெரும்பாடாக இருந்தது.

அன்று முதல் சுற்றுப்புறத்தைக் கவனித்துவிட்டுத்தான் படமெடுக்கிறேன்” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் அனந்தமூர்த்தி. ஆர்வம் இருந்தால் ஐம்பது வயதிலும் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக ஆகலாம் என்பதற்கு இவரே சாட்சி.

புது ஈடுபாடு

பெங்களூருவில் எல்.ஐ.சி அதிகாரியாகப் பணியாற்றும் அனந்தமூர்த்தி, கடந்த நான்கு ஆண்டுகளாகக் காட்டுயிர்களைத் துரத்தி துரத்தி ஒளிப்படம் எடுத்துவருகிறார். இந்தத் துறை இவருக்குப் புதிய அனுபவங்களை மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு நண்பர்களையும் பெற்றுத் தந்திருக்கிறது. பொழுதுபோக்காகப் படங்களை எடுக்கத் தொடங்கியவர், இன்றைக்கு அதற்காகவே நேரம் ஒதுக்கும் அளவுக்கு அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

“பறவைகள் என்றாலே காகம், குயில், மைனா, சிட்டுக்குருவி போன்றவற்றைத்தான் சிறு வயது முதல் அறிந்திருந்தேன். காட்டுயிர்களைப் படம் எடுக்கத் தொடங்கிய பிறகுதான், பறவை உலகம் எத்தனை பெரிய கடல் என்பது புரிந்தது,” என்று சொல்லும் அனந்தமூர்த்தி, “ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்களைத் தன்னால் இனம்காண முடியும்” என்கிறார். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் காட்டுயிர்களைத் தேடிச் சென்றிருக்கிறார்.

பறவையைத் தேடி

இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட பறவையினங்களைப் படமெடுத்திருந்தாலும், பழங்காலத்தில் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டு, தற்போது அரிதாகிவிட்ட பறவைகளுள் ஒன்றான ஷாஹீன் வல்லூறைப் படமெடுத்ததை மறக்க முடியாது என்கிறார் அனந்தமூர்த்தி. இந்தப் பறவையைப் படமெடுக்க இரண்டு மாதங்கள் காத்திருந்தாராம்.

“காட்டுயிர்களைத் தேடி காடுகளுக்குள் சுற்றும்போதுதான், மனிதர்கள் எப்படியெல்லாம் இயற்கையைச் சீரழித்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. காட்டுயிர்களின் வாழ்வாதாரத்தை, எந்த வகையிலும் அழிக்காமல் இருப்பதுதான் நாம் காட்டுயிர்களுக்குச் செய்யக்கூடிய நல்ல விஷயமாக இருக்கும்” என்கிறார் அனந்தமூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x