Last Updated : 07 Jan, 2017 10:29 AM

 

Published : 07 Jan 2017 10:29 AM
Last Updated : 07 Jan 2017 10:29 AM

புரிந்துகொள்ளப்படாத பசுமைச் சிந்தனையாளர் - ஜே.சி.குமரப்பா

காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப்பாவின் 125 –ஆம் ஆண்டு நிறைவின்போது அவருடைய சிந்தனைகளை நினைவுகூர்வது மிகவும் அவசியம். வேளாண்மையும் நமது உடல்நலமும் இன்றைக்குக் கண்டுள்ள சீரழிவை, அன்றைக்கே முன்னுணர்ந்து எச்சரித்த தீர்க்கதரிசி குமரப்பா.


குமரப்பா

சிறுதானிய ஆதரவு

ஒருமுறை தமிழக முதல்வர் காமராஜர் குமரப்பாவைச் சந்திக்க வந்திருந்தபோது, அவரிடம் சில கருத்துக்களை குமரப்பா முன்வைத்தார். கிராமப்புறங்களில் மின்சார நீர் இறைப்பான்களையும் கிணற்றுப் பாசனத்தையும் விரிவுபடுத்துவதை மிகக் கவனமாகச் செய்ய வேண்டும் என்பது அவர் முன்வைத்த முதல் கருத்து. அதற்கு மாற்றாக ஏரிகளையும் குளங்களையும் அரசு விரிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கிராம வேளாண்மையில் புஞ்சைப் பயிர்களான சிறு தானியங்கள், தீவனங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் போன்றவை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துக்கானவை. மின்சார நீர் இறைப்பான் கூடவே வரும் பணப் பயிர்களான கரும்பு, வாழை, பருத்தி, புகையிலை ஆகியவற்றின் வரவு கிராம மக்களின் நலனுக்காக இல்லாமல், பெருநகரங்களின் வணிகத் தேவைகளுக்காக வேளாண்மையைத் தலைகீழாக மாற்றிவிடும் என்றார்.

தீட்டிய அரிசியின் நுகர்வை அதிகப்படுத்துவது மக்களின் உடல்நலத்துக்கும், பொருளாதார நலனுக்கும், கிராமியப் பொருளாதார நலனுக்கும் பெருங்கேடாக முடியும் என்பது குமரப்பாவின் வாதம். தீட்டிய அரிசியைக் காட்டிலும், சிறு தானியங்களும் தீட்டாத அரிசியும் மக்களின் நலனுக்கு ஏற்றவை என்றார். தீட்டிய அரிசி நீரிழிவு நோயையும், வைட்டமின், தாதுப் பொருட்களின் குறைவையும் ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

சர்க்கரை ஆலைக்கு எதிர்ப்பு

பிறகு தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் பெருமளவில் தொடங்கப்பட்டபோது, குமரப்பா அவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். கரும்பு உற்பத்தி, வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி, அதனுடன் சேர்த்து எரிசாராய உற்பத்தி ஆகியவற்றுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுவந்து கொண்டிருந்தது. சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, பனைமரங்கள் தரும் பதநீரையும், கருப்பட்டியையும் மேம்படுத்த அரசு பெரும் முதலீடு செய்ய வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. பதநீரும், கருப்பட்டியும் உடல்நலத்துக்கு அமிர்தம் போன்றவை என்பது அவருடைய வாதம்.

உணவு தரும் நல்ல நிலங்களைக் கரும்புச் சாகுபடிக்கு மாற்றுவதற்கு மாறாக, உபயோகமற்றுக் கிடக்கும் நிலங்களில் பெருமளவு பனைமரங்கள் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஆலை முதலாளிக்கு, எரிசாராய வியாபாரிகளுக்குப் பெரும் லாபத்தைத் தரும் சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, ஏழைத் தொழிலாளர்களுக்கு வாழ்வு தரும் பனைத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றார் குமரப்பா. இப்படித் தொடர்ச்சியாக அவர் முன்வைத்த கருத்துகளால் ‘பசுமைப் பொருளாதாரச் சிந்தனையின் சிற்பி' என்று அவர் போற்றப்படுகிறார்.

விடுதலைப் போரில்...

முனைவர் ஜே.சி. குமரப்பா, 1892–ம் ஆண்டு ஜனவரி 4–ம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். லண்டனில் தணிக்கையாளராகத் தகுதி பெற்ற பின், அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பொது நிதி குறித்து குமரப்பா ஆய்வு செய்தார். இந்தியாவில் வறுமையைத் தூண்டும் முக்கியக் காரணி அரசின் கொள்கைகளே என்று அந்த ஆய்வில் கண்டறிந்தார். விவசாய நெருக்கடி, உணவுப் பஞ்சம், பட்டினிச் சாவு, கிராமங்களின் வீழ்ச்சி ஆகியவற்றுக்குக் காரணம் ஆங்கிலேய அரசின் கொள்கைகள். இங்கிலாந்தின் அபாரமான வளர்ச்சிக்கு உறுதுணையாக அந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன என்பதே அவருடைய ஆய்வு முடிவு.

லண்டனிலும் பின் அன்றைய பம்பாயிலும் வெற்றிகரமாக ஆடிட்டர் தொழிலை நடத்தி வந்த குமரப்பா, தொழிலையும் ஆடம்பர வாழ்வையும் துறந்து 1929-ம் ஆண்டில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிய முன்வந்தார். அதன் பிறகு காந்தியடிகளின் ‘யங் இந்தியா’ வார இதழின் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது ஆங்கிலேய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக குமரப்பா கடும் வாதங்களை முன்வைத்தார். அவரின் புரட்சிகர எழுத்துக்களுக்காக ஆங்கிலேய அரசால் மூன்று முறை சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

கொள்ளைப் பொருளாதாரம்

அவரது கருத்துக்கள் நிலைபெற்ற பொருளாதாரத் தத்துவங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் புரட்சிகரமான வாதங்களை முன்வைத்தன. பெருந்தொழில்களும், பெரும் பொருளாதார அமைப்புகளும் அரசின் ஆதரவுடன், மோசமாகவும் அநீதியாகவும் சிறு தொழில்களையும், மக்களின் பரவலான பொருளாதார அமைப்புகளையும் அழித்து உருவாக்கப்பட்டவை என்பதை அவர் உறுதியாக எடுத்துக்காட்டினார். கிராமங்களும், கைத்தொழில்களும், வேளாண்மையும் ஆங்கிலேய அரசின் வஞ்சத்தினால் வீழ்த்தப்பட்டன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், முன்னேற்றம் போன்ற பசுத்தோல்களால் அந்த அநீதிகள் மறைக்கப்பட்டுள்ளன என்றார். இன்றைக்கு நாம் பெரிதும் வலியுறுத்திக்கொண்டிருக்கும் பெருந்தொழில்கள், பெரும் பொருளாதாரங்கள், வல்லரசுகள், பெருந்தேசங்கள் ஆகியன இயற்கையையும், எளியவர்களையும் உறிஞ்சியே உருவாகவும், காலப்போக்கில் நிலைக்கவும் முடியும் என்பதை அன்றே அவர் சுட்டிக்காட்டினார்.

விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களைப் பெருந்தொழில்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் அரசின் கொள்கைகள் எடுத்துக் கொடுக்கின்றன. குறிப்பாக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற எரிபொருட்கள் நம்ப முடியாத குறைந்த விலையில் அள்ளி அள்ளிக் கொடுக்கப்படுவதால், பெருந்தொழில்களின் உற்பத்திச் செலவு பெருமளவு குறைகிறது. எளிய மக்கள் உடல் உழைப்பால் தங்களுடைய தன்னிறைவுக்காக உற்பத்தி செய்யும் பொருட்கள், வலிந்து விலை குறைக்கப்பட்ட இந்தப் பெருந்தொழில் உற்பத்தியுடன் போட்டி போட முடிவதில்லை. இயற்கையைக் கொள்ளையடித்துக் குறுகிய காலத்தில் அளவில்லாது உற்பத்தி செய்து பெருஞ்செல்வம் ஈட்டும் பெருந்தொழில்களும், பெரும் பொருளாதாரமும் இயற்கை வளங்களை முற்றிலும் அழித்தொழிக்கும் அம்சங்கள் என்றார் குமரப்பா. இதைக் ‘கொள்ளைப் பொருளாதாரம்’ என்றே அவர் அடையாளம் காட்டினார்.

அழிவற்ற பொருளாதாரம் எது?

பரவல்முறை உள்ளூர்ப் பொருளாதாரம் வளம் சேர்ப்பதாகவும், வளர்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து தருவதாகவும், இயற்கையைப் பேணுவதாகவும் இருக்கும் என்று அவர் நம்பினார். இயற்கையோடு இயைந்த எல்லைக்கு உட்பட்ட பொருளாதாரம் அழிவற்ற பொருளாதாரமாகப் பல்லாயிரம் ஆண்டுகள் தொடரும் என்பது அவருடைய நம்பிக்கை. குமரப்பா தனது கருத்துக்களைத் தொகுத்து ‘அழிவற்ற பொருளாதாரம்’ என்ற நூலாக 1942–ம் ஆண்டு வெளியிட்டபோது, மகாத்மா காந்தி அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். அப்போது குஜராத் வித்யாபீத் பலகலைக்கழகத்தின் வேந்தராக காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனவுக்காகப் போராட்டம்

காந்தியப் பொருளாதாரத் தத்துவத்தின் அதிகாரபூர்வ கருத்தாளராகப் போற்றப்பட்ட குமரப்பா, தனது வாழ்வின் பெரும் பகுதியை கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சிக்காகச் செலவிட்டார். 1934-ம் ஆண்டு காந்தி தலைமையில் தொடங்கிய அகில இந்திய கிராமக் கைத்தொழில் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றிய குமரப்பா, அழிந்துவரும் கிராமத் தொழில்களை மீட்டெடுப்பதற்காக கடுமையாகப் பாடுபட்டார். காந்தியின் சேவா கிராம ஆசிரமத்தின் அருகே ‘மகன்வாடி’ என்ற பெயரில் கிராமத் தொழில்களுக்கான தேசிய மையத்தை அமைத்தார். அதன் தொடக்க நாட்களில் குமரப்பாவுடன் காந்தியும் தங்கி, அவருடைய பணிகளுக்கு மதிப்புக் கூட்டினார். பிரம்மச்சாரியான குமரப்பா ஒரு எளிய விவசாயியைப் போல, தனது வாழ்வு முழுவதையும் மாற்றிக்கொண்டு காந்திஜியின் கனவான கிராமியப் பொருளாதாரத்துக்கான தீரம் மிகுந்த போராட்டத்தை நடத்தினார்.

கிராமியம், சிறுதொழில்கள், இயற்கையைப் பேணுவது, சிற்றளவுப் பொருளாதாரம், எளிய வாழ்வு, சேமிப்பு, பகிர்வு போன்ற கருத்துக்களை முன்னெடுத்துச் சென்ற ஆரம்ப நாட்களில் அவருக்குத் துணை நின்றவர்கள் மிக மிகக் குறைவு. 'கிராமம் எளியவர்களின் சரணாலயம். பெருநகரங்கள் சுரண்டிக் கொழிப்பவர்களின் பாசறை' என்பது அவரின் வாதம். நகரங்கள் வன்முறையின், சுரண்டலின் அடையாளச் சின்னங்கள் என்ற காந்தியின் நிலைப்பாட்டை சரியாகப் புரிந்துகொண்ட மிகச் சிலரில் குமரப்பா முதன்மையானவர். காந்தியின் மற்ற சகாக்களான நேரு, படேல், ராஜாஜி, ராஜேந்திரபிரசாத் போன்றவர்களால் குமரப்பாவின் கருத்துகள் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப் படவில்லை. குமரப்பா ஒரு தீர்க்கதரிசி. அவரின் நுட்பமான கருத்துகள், பல்லாண்டுகள் முன்கூட்டிய சிந்தனையில் உருவானதால், அவருடைய கருத்துகளை எவரும் புரிந்துகொள்ளவில்லை.

எங்கெங்கும் ஒலிக்க வேண்டிய குரல்

காந்தியின் மறைவுக்குப் பின் சேவா கிராம ஆசிரமத்திலும், பண்ணை ஆசிரமத்திலும் கிராமியத் தொழில் வளர்ச்சிக்காகவும், இயற்கை வேளாண்மை மேம்பாட்டுக்காகவும் பல்வேறு முன்னோடிப் பரிசோதனைகளை குமரப்பா செய்துபார்த்தார். மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தின் பணிகளால் கவரப்பட்ட குமரப்பா, 1954 முதல் தனது ஓய்வுக்காலத்தை அங்கு செலவிட்டார். 1960–ம் ஆண்டு சென்னை பொது மருத்துவமனையில் குமரப்பா காலமானார். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் அமைந்துள்ள அவருடைய சிறிய குடில், நினைவிடம், எளிய அருங்காட்சியகம் போன்றவை அவருடைய வாழ்வின் செய்தியை இப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

வளர்ச்சி என்ற பெயரில் நுகர்வுப் பேராசைக்காக உற்பத்தி செய்யும் பெருந்தோழில்களையே, அரசும் நன்கு படித்த மேதாவிகளும் அன்றும் இன்றும் ஆதரிக்கின்றனர். சுதேசி என்ற வார்த்தையைச் சொல்ல இன்று நாதி இல்லை. 'இந்தியாவின் எளிய மக்களுக்காக உற்பத்தி' என்ற கருத்து தூக்கி எறியப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டவர்களுக்கு உற்பத்தி செய்யும் கூலிப்பட்டறையாகவும், சுற்றுச்சூழல் குப்பைத் தொட்டியாகவும் மாற்றப்படும் காலத்தில், குமரப்பாவின் கருத்துகள் மிக அரிதானவை. எங்கேயோ கேட்டதாக இருந்த குமரப்பாவின் குரல், எங்கெங்கும் ஒலிக்க வேண்டிய குரலாக உள்ளது.

கட்டுரையாளர், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
தொடர்புக்கு: ragugri@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x