Published : 12 Aug 2014 10:00 AM
Last Updated : 12 Aug 2014 10:00 AM

புரட்சி செய்த புத்தகம்

மசானபு ஃபுகோகா 1978-ம் ஆண்டு எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அவருடைய இயற்கை வேளாண் முறை தொடர்பாக உலகம் முழுவதும் கவனம் திரும்பியது.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை வேர்விட ஆரம்பித்த காலத்தில் அவரது வேளாண் முறை பரவலான விவாதத்தை உருவாக்கியது. ‘பூவுலகின் நண்பர்கள்' இயக்கத்தினரால் 1991-ம் ஆண்டே ‘ஒற்றை வைக்கோல் புரட்சி' தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. வேறு எந்தச் சுற்றுச்சூழல் - விவசாயம் சார்ந்த நூல்களைவிடவும் அதிகப் பதிப்புகளை இந்நூல் கண்டுள்ளது. அந்த நூலுக்குப் பிரபல அமெரிக்க ஆங்கில எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வெண்டல் பெர்ரி எழுதிய முன்னுரையின் சில பகுதிகள்:

பசுமைக்குத் தாவும் புத்தகம்

இந்த நூல் வேளாண்மை மீது ஈடுபாட்டை ஏற்படுத்துகிற மிக அத்தியாவசியமான ஒரு புத்தகம். ஏனென்றால், இது வேளாண்மை பற்றி மட்டும் பேசும் புத்தகமாக இல்லை என்பதுதான்.

இதைப் படிக்கும் வாசகர்களின் எண்ணங்கள் புத்தகத்தின் பக்கங்களில் இருந்து வயல் வரப்புக்குத் தாவுவதையும், தொடர்ந்து நம் நாட்டின் வேளாண் முறைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் எண்ணங்களையும் நிறுத்தவே முடியாது.

தனது வாழ்க்கையை ஒரு பரிசோதனைக்கூட விஞ்ஞானியாக ஃபுகோகா தொடங்கினாலும், விரைவிலேயே சோதனைச் சாலைகளின் வரம்புகளை உணர்ந்த அவர் சொல்கிறார்: “அது புரிந்துவிட்டதால், என்னுடைய புதிய எண்ணங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்கத் தீர்மானித்தேன். நடைமுறையில் அதைச் செயல்படுத்தி என் புரிதல் சரியா, தவறா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் முனைந்தேன். வேளாண்மையில் என் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்ற முடிவுடன் இறங்கினேன்... இப்படித்தான் என் வேளாண் ஆர்வம் தொடங்கியது". நூறு விளக்கங்களைக் கொடுப்பதைவிட ஒரு தத்துவத்தை நடைமுறையில் கடைப்பிடிப்பதுதானே சிறந்த வழி?

இயற்கையை மீட்டெடுத்தல்

“எதுவுமே செய்யத் தேவையற்ற” (Do nothing farming) வேளாண் முறைகளை ஃபுகோகா பேசுவதன் அடிப்படை நோக்கம், உலகில் உள்ள பொருள் கூட்டத்துக்கு இடையே மனிதர்களின் முறையான இடம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இந்த உலகத்தையோ, நம்மையோ நாம் உருவாக்கிக்கொள்ளவில்லை. வாழ்க்கையை நமக்கு உகந்த வழிகளில் வடிவமைத்துக்கொண்டு உயிர் வாழ்கிறோம், நாமே உருவாக்கி வாழவில்லை.

ஆனால், எப்படி ஒரு பறவை அலைந்து திரியாமல் தனக்குத் தேவையான உணவைக் கண்டுபிடிக்க முடியாதோ, அதைப் போலவே ஒரு விவசாயி உழைப்பைச் செலவிடாமல் வேளாண்மை செய்வதும் சாத்தியமில்லை.

தனக்கே உரிய நகைச்சுவையுடன் ஃபுகோகா இது பற்றிக் கூறுகிறார்: "எதுவுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை குறித்துப் பேசும்போது, பலரும் படுக்கையில் இருந்துகூட எழுந்திருக்காமல் வாழ்க்கையை நடத்தும் ஒரு மாய உலகத்தைக் கண்டுவிடலாம் என்றே என்னை நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு மாபெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது.

“என்னுடைய விவாதம் உழைப்பை எதிர்க்கும் ஒன்றல்ல, தேவையற்ற உழைப்பை எதிர்த்தே. மக்கள் பல நேரம் தாங்கள் ஆசைப்படும் பொருட்களைப் பெறுவதற்குத் தேவைக்கு அதிகமான உழைப்பையும், தேவையற்ற பொருட்களைப் பெற சில அவசியமற்ற வேலைகளையும் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.”

இயல்பான அறிஞர்

இப்படியாக ஃபுகோகா அறிவியலை அல்லது அறிவியல் என்று பல நேரம் கூறப்படும் விஷயங்களைச் சந்தேகக் கண்ணுடன் நோக்கும் ஒரு அறிவியலறிஞராக இருந்தார். அதனால் அவர் நடைமுறைக்கு ஒவ்வாதவர் என்றோ, அறிவை எள்ளி நகையாடுபவர் என்றோ அர்த்தமல்ல. அவரது சந்தேகங்கள் அறிந்துவைத்துள்ள விஷயங்களில் இருந்தும், அதை அவர் நடைமுறைப்படுத்தும் முறைகளில் இருந்தும் உதித்துள்ளன. நிபுணத்துவம் என்ற பெயரில் அறிவுத் துறைகளைச் சிறுசிறு பிரிவுகளாகச் சிதறடிப்பதை அவர் எதிர்க்கிறார்.

தனது ஆய்வுக்கான பொருளை முழுமையின் ஒரு பகுதியாகப் பார்க்கவே ஃபுகோகா விரும்புகிறார். முழுமை என்பது அவர் அறிந்தது, அறியாதது ஆகிய இரண்டும் உள்ளடங்கியதுதான் என்பதை அவர் மறுக்கவில்லை. தனக்குத் தெரிந்த விஷயங்களுக்குள்ளாகவே குறுகிப் போய்விடும் அறிவியல், தனக்குத் தெரியாத விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிடக்கூடியவை என்று நம்பும் அதன் அடிப்படை போக்கு ஆகியவற்றின் மீதான பயம்தான், நவீனப் பயன்பாட்டு அறிவியல் பற்றிய அவரது பயத்துக்குக் காரணம்.

உயிரற்ற கூடு

"அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக் கூட்டுடன் உலவும் ஒரு பிசாசு. அதற்கு ஆத்மா கிடையாது" என்கிறார் ஃபுகோகா.

முழுமையின் உணர்வை நமக்குத் தருவது அறிவு அல்ல, மகிழ்ச்சிதான் என்பது ஃபுகோகாவின் கருத்து. "ஒன்றைத் தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் ஒருவன் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் இழக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டால், இயற்கை வேளாண்மையின் அடிப்படை புரிந்துவிடும்."

மனிதர்கள் ‘அதிகத் உற்பத்தி’, அதிக தரம்’ ஆகியவற்றுக்காக உழைக்காமல், ஒட்டுமொத்த மனித குல நன்மைக்காக உழைக்கும்போது, அவர்களுடைய உழைப்பு சிறந்து விளங்கும். ஆனால் தொழில்மயப்படுத்தப்பட்ட வேளாண்மையின் தாரக மந்திரமோ, ‘அதிக உற்பத்தி'யில்தானே அடங்கியுள்ளது.

ஃபுகோகா மேலும் சொல்கிறார்: வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல, மனிதர்களை வளர்த்து முழுமை பெறச் செய்வதுதான்".

வேளாண்மையை ஒரு வாழ்க்கை முறையாகவே அவர் பார்க்கிறார். ஒரு சிறிய வயலைக் கவனித்துக்கொண்டு, ஒவ்வொரு தினத்தின் ஏகாந்தத்தையும் சுதந்திரத்தையும் முழுமையாகத் தனதாக்கிக்கொண்டு இருப்பதுதான் வேளாண்மையின் ஆதி வழியாக இருந்திருக்க வேண்டும்.

வாழ்க்கையின் ஒரு பகுதியை மற்றொன்றிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை ஃபுகோகா நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.

ஒரு மனிதனின் உடலையும் ஆன்மாவையும் முழுமையாகச் செழுமைப்படுத்தும் வேளாண்மை அது.

நன்றி: ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள், தொடர்புக்கு: 98416 24006

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x