Last Updated : 06 Aug, 2016 03:58 PM

 

Published : 06 Aug 2016 03:58 PM
Last Updated : 06 Aug 2016 03:58 PM

நரகத்துக்குள் ‘சொர்க்க’ போகம்!

ஹிரோஷிமா, நாகசாகி நினைவு நாள் ஆகஸ்ட் 6, 9

‘‘சொர்க்கத்தில் இருப்பவர்களிடம் இரண்டு வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன: ஒன்று, சந்தோஷம் உண்டு, ஆனால் சுதந்திரம் கிடையாது. இரண்டாவது, சுதந்திரம் உண்டு, ஆனால் சந்தோஷம் கிடையாது. மூன்றாவது வாய்ப்பென்று ஏதும் இல்லை.’’ (ரஷ்ய எழுத்தாளர் யெவ்ஜெனி ஜம்யாட்டினின் ‘We’ என்ற நாவலிலிருந்து).

ரஷ்யாவின் ஊரல் மலைத்தொடரின் காட்டுக்குள்ளேதான் இருக்கிறது அஜெர்ஸ்க் நகரம் (Ozersk). விலக்கப்பட்ட நகரம் அது. கடும் கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் கம்பிவேலிகள் சூழ இருக்கும் அழகிய புதிர்தான் அஜெர்ஸ்க்; ஏதோ வேறொரு பரிமாணத்தில் இருப்பதாகத் தோன்றும் ஒரு வசிய நகரம்.

‘நகரம்-40' என்று சங்கேதப் பெயரிடப்பட்டிருக்கும் அஜெர்ஸ்க் நகரம்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுத உற்பத்தித் திட்டத்தின் பிறப்பிடம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம், கடந்த 70 ஆண்டுகளாக எந்த வரைபடத்திலும் இடம்பெறவில்லை. இந்த நகரத்தின் குடிமக்கள் பற்றிய தகவல்கள், அடையாளங்கள் சோவியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.

இருண்ட ரகசியம்

அழகான ஏரிகள், வாசம் வீசும் மலர்கள், ஓவியங்களில் இருப்பதுபோல நிழற்சாலைகள் என்று இன்று பார்க்கும்போது 1950-களின் அமெரிக்க நகரம் போல் காட்சியளிக்கிறது அஜெர்ஸ்க்.

வழக்கமான நாட்களில், இளம் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை மழலை வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வருவார்கள்; சிறுவர்கள் வீதியில் விளையாடுவார்கள். பதின்பருவப் பையன்களின் ஸ்டீரியோக்களிலிருந்து ஏதாவது பாடல்கள் அலறிக்கொண்டிருக்கும்; கூடவே, இளம் பெண்களைக் கவர்வதற்காகத் தங்கள் சறுக்குப் பலகை வித்தைகளை அவர்கள் காட்டிக்கொண்டிருப்பார்கள்.

சாலையோரங்களில் உள்ளூர்ப் பெண்கள் பழங்களையும் காய்கறிகளையும் விற்றுக்கொண்டிருப்பார்கள். பொருட்களை விற்பதற்கு முன்பு அவற்றைப் பரிசோதிக்கும் கதிர்வீச்சு அளவுமானிகள்தான் (Geiger counters), இந்த அமைதியான நகர்ப்புறக் காட்சிக்குப் பின்னே உறைந்திருக்கும் இருண்ட ரகசியத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

மாபெரும் கல்லறைத்தோட்டம்

அந்த நகரவாசிகளுக்கு அந்த உண்மை தெரியும்: ஆம், அவர்கள் குடிக்கும் நீர் மாசுபட்டிருக்கிறது, அவர்கள் உண்ணும் காளான்கள், பெர்ரிகள் போன்றவையெல்லாம் நஞ்சாகியிருக்கின்றன, அவர்களின் குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்படலாம்… இந்த உண்மைகள் எல்லாமே அவர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியும்.

அஜெர்ஸ்க்கும் அதைச் சூழந்திருக்கும் பகுதியும்தான் பூமியிலேயே மிகவும் மாசுபட்ட பகுதிகள்; சிலர் அதை ‘பூமியின் கல்லறைத் தோட்டம்’ என்று வர்ணிக்கிறார்கள்.

இருந்தும் இந்த நகரவாசிகளில் பெரும்பாலானோர் இந்த நகரத்தை விட்டு வெளியேற விரும்புவதில்லை. ரஷ்யாவின் ‘பிரத்யேகமான செல்லங்கள்’என்று தங்களை அவர்கள் கருதிக்கொள்கிறார்கள். மூடுண்ட அந்த நகரத்தின் குடிமக்களாக இருப்பதில் அவர்களுக்குப் பெருமிதமும் உண்டு. இங்கேதான் அவர்கள் பிறந்தார்கள், திருமணம் செய்துகொண்டார்கள், குடும்பம் நடத்தினார்கள். அவர்களின் பெற்றோர்களையும், ஏன் அவர்களின் மகன்கள், மகள்களையும்கூட இங்கேதான் புதைத்திருக்கிறார்கள்.

‘உலகின் ரட்சகர்கள்’

பிரம்மாண்டமான ‘மாயக்' அணுஉலையைச் சுற்றி, இர்ட்யாஷ் ஏரியின் கரைகளில்தான் 1946-ல் 'நகரம்-40'-ன் கட்டுமானத்தை மிகவும் ரகசியமாகத் தொடங்கியது சோவியத் ரஷ்யா. சோவியத் ஒன்றியத்தின் அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுக்கவும் அணுகுண்டு தயாரிக்கவும் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் அங்கே அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவருக்குமான குடியிருப்புதான் அந்த நகரம்.

அஜெர்ஸ்கிலிருந்து 20 நிமிடங்கள் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள சதுக்கத்தில் ஒரு கடிகாரம் தொங்குகிறது. உள்ளூர் நேரத்தையும் காற்றில் உள்ள கதிரியக்கச் செறிவையும் அந்தக் கடிகாரம் அடுத்தடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. செர்னோபில் அணு உலை விபத்தின்போது கதிரியக்கத்தால் அருகிலிருந்த உக்ரைன் மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட ஐந்து மடங்கு அதிகக் கதிர்வீச்சால் அஜெர்ஸ்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அஜெர்ஸ்க் நகரின் எல்லையில் ஒரு எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நகரத்துக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று எச்சரிக்கும் ஆங்கில, ரஷ்ய வாசகங்களை அந்தப் பலகை தாங்கியிருக்கிறது. ரஷ்யாவின் ரகசிய போலீஸின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டினரோ வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்யர்களோ இங்கே நுழைய முடியாது. இந்தப் பகுதிக்குள் படமெடுப்பதற்கும் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கைப் பலகை

சிறப்பு அனுமதி இருந்தால் அஜெர்ஸ்க் நகரவாசிகள் அந்த நகரத்திலிருந்து வேறு இடங்களுக்குச் சென்று வரலாம். அந்த நகரத்துக்குத் திரும்பியே வரப்போவதில்லை என்றாலும்கூட, அங்கிருந்து அவர்கள் வெளியேறலாம். ஆனாலும் சிலரே அப்படிச் செய்கிறார்கள். மூடுண்ட அந்த நகரத்தை விட்டுப் போனால், எல்லா சொகுசு வாழ்க்கை சலுகைகளையும் இழக்க வேண்டிவருமே!

எல்லாம் கிடைக்கும்

தனி அடுக்ககங்கள், ஏராளமான உணவு (வாழைப்பழங்கள், சுண்டிய பால் முதலான வெளிநாட்டு உணவுப் பொருட்கள் உட்பட), நல்ல பள்ளிக்கூடங்கள், சுகாதார, மருத்துவக் கட்டமைப்புகள், பொழுதுபோக்கு, கலாச்சாரச் செயல்பாடுகள் என்று எல்லாமே தேவதைக் கதையில் வருவது போன்ற ஒரு வாழ்க்கை, அதுவும் அழகான ஏரி, காடு ஆகியவற்றின் பின்னணியில்!

இதற்குப் பிரதியுபகாரமாக, அந்த நகரவாசிகள் தங்கள் வாழ்க்கையையும் பணியையும் பற்றிய ரகசியத்தைக் காப்பாற்றுமாறு கட்டளையிடப்பட்டது. ரஷ்யாவின் அணு ஆயுதங்களுக்கு வேண்டிய எல்லாத் தனிமங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த நகரத்தில், அதன் நகரவாசிகள் முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தை இன்றுவரை கடமை தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

ஆக, அஜெர்ஸ்க்கில் வாழ்வது என்பதே தனி கவுரவம்! “அறிவுஜீவிகளின் நகரம்” என்றே அந்த நகரவாசிகள் தங்கள் நகரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால், ‘எல்லாவற்றிலும் சிறந்த விஷயங்கள்’ அவர்களுக்குத்தானே கிடைக்கின்றன! மூடுண்ட ஒரு நகரத்தில் இருப்பதென்பது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பொருளாதார நிலைத்தன்மைக்கும் வசதியானது. தங்கள் குழந்தைகளுக்கு வெற்றிகரமான எதிர்காலத்துக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று அஜெர்ஸ்க் நகரவாசிகள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஆனால், அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஆபத்தான பின்விளைவுகளும் இருக்கின்றன. அந்த நகரவாசிகள், அவர்களின் குழந்தைகளுடைய உடலில் எந்த அளவுக்குக் கதிர்வீச்சு தாக்கியிருக்கிறது என்பதையும் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளையும் பற்றிய தகவல்களை சோவியத் ஒன்றியத்தின் அரசியல் தலைமையும் அறிவியல் தலைமையும் மூடிமறைத்தே வந்திருக்கின்றன.

மரண ஏரி

ஆரம்பத்திலிருந்தே 'மாயக்' அணுஉலை அருகே வசிக்கும் மக்கள் மிகவும் ஆபத்தான சூழலிலேயே வாழ்ந்தார்கள். 1940-களின் பிற்பகுதியில் தொடங்கி அங்குள்ள மக்கள் நோய்வாய்ப்படவும் இறக்கவும் ஆரம்பித்தார்கள். கதிரியக்கத்துக்கு நீண்ட காலம் ஆட்பட்டதன் விளைவுதான் இது.

ரகசியத்தை மிகக் கடுமையாக அதிகார மட்டம் காத்துவருகிறது. ஆகவே, எத்தனை பேர் இறந்துபோனார்கள், எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டார்கள் என்பது குறித்த துல்லியமான தரவுகள் நமக்குக் கிடைப்பதில்லை. அஜெர்ஸ்க்கின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிஞ்சு உயிர்கள், இளைஞர்களின் கல்லறைகள்தான் சோவியத் ஒன்றியம் புதைக்க முயன்ற உண்மையின் சாட்சியங்கள்!

ஏராளமான அணுஉலை விபத்துக்களில் அந்த நகரவாசிகள் உயிரிழந்திருக்கிறார்கள். செர்னோபில் அணுஉலை விபத்துக்கு முன்பு நிகழ்ந்தவற்றில் மிக மோசமானதாகக் கருதப்படும் கிஷ்டிம் பேரழிவு 1957-ல் ஏற்பட்டது. எனினும் எல்லாவற்றையும் பெரும் ரகசியமாகவே காத்துவந்தார்கள் சோவியத்காரர்கள்.

‘மாயக்' அணுஉலை நிர்வாகம் அணுஉலைக் கழிவுகளை ஏரிகளிலும் ஆறுகளிலும் கொட்டுகிறது. ஓப் நதியின் வழியாக அந்தக் கழிவுகள் ஓடி ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ‘மாயக்' அணுஉலை தன் சுற்றுச்சூழலில் கொட்டிய கதிரியக்கக் கழிவுகளின் அளவு எவ்வளவு தெரியுமா? 20 கோடி க்யூரிகள் (க்யூரி என்பது கதிர்வீச்சை அளவிடுவதற்கான ஒரு அளவீடு. பியர் க்யூரி, மேரி க்யூரியின் நினைவாக வைக்கப்பட்ட பெயர்). செர்னோபிலைவிட நான்கு மடங்கு அதிக கதிர்வீச்சை ‘மாயக்' வெளிப்படுத்தியிருந்தாலும் அதிகாரத் தரப்பு, இதை எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது.

கதிரியக்கக் கழிவுகளைக் கொட்டுவது இன்னமும் தொடர்கிறது என்றே அஜெர்ஸ்க் நகரவாசிகள் தெரிவிக்கிறார்கள். அருகில் உள்ள ஏரிகளில் ஒன்று புளூட்டோனியத்தால் கடுமையாக மாசுபட்டிருப்பதால் அந்த ஏரிக்கு ‘மரண ஏரி’ என்றும் ‘புளுட்டோனியம் ஏரி’ என்றும் உள்ளூர்வாசிகள் பெயரிட்டிருக்கிறார்கள். அந்த ஏரியின் கதிரியக்கச் செறிவு 12 கோடி க்யூரிகளுக்கும் அதிகம் என்று கருதப்படுகிறது. செர்னோபில் வெளிப்படுத்திய கதிர்வீச்சைவிட இரண்டரை மடங்கு அதிகம் இது.

வெளியேற விருப்பாதவர்கள்

அஜெர்ஸ்கிலிருந்து 20 நிமிடங்கள் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள சதுக்கத்தில் ஒரு கடிகாரம் தொங்குகிறது. உள்ளூர் நேரத்தையும் காற்றில் உள்ள கதிரியக்கச் செறிவையும் அந்தக் கடிகாரம் அடுத்தடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. செர்னோபில் அணு உலை விபத்தின்போது கதிரியக்கத்தால் அருகிலிருந்த உக்ரைன் மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட ஐந்து மடங்கு அதிகக் கதிர்வீச்சால் அஜெர்ஸ்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

மர்ம சொர்க்கம்

பெரும்பாலான அஜெர்ஸ்க்வாசிகளைப் பொறுத்தவரை நகரத்தைச் சுற்றி இடப்பட்டிருக்கும் கம்பிவேலி என்பது தங்களின் விருப்பத்தை மீறி அங்கே அடைத்துவைப்பதற்கானது அல்ல; தங்கள் சொர்க்க பூமியில் அந்நியர் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ‘எதிரி’களான அந்நியர்களிடமிருந்து அவர்களைக் காப்பதற்கானதுதான் அந்த வேலி. நகரத்தின் நிலஅடையாளங்களிலிருந்தும் நகரவாசிகளின் மனஅமைப்பிலிருந்தும் நீக்கவே முடியாத ஒரு அங்கமாக அந்த வேலி ஆகியிருக்கிறது.

தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருக்க்கும் ‘நகரம்-40'-ல் அந்த மக்கள் எப்படித்தான் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்பதை வெளியாட்களால் அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. தங்களைப் பற்றியும் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் வெளியுலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி அஜெர்ஸ்க் நகரவாசிகள் பொருட்படுத்துவதில்லை என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் சொல்கிறார்.

“எங்களை அமைதியாகவும், தனியாகவும் வாழ விடுங்கள்” என்றே அந்த நகரவாசிகள் நினைக்கிறார்கள் என்று அந்தப் பத்திரிகையாளர் கூறுகிறார். அவரும்கூட அதையேதான் நினைக்கிறார். ‘கம்பிவேலியிட்ட சொர்க்க'த்தில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் அஜெர்ஸ்க் நகரவாசிகள்!

கட்டுரையாளர், கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ‘City 40’ என்ற முழுநீள ஆவணப் படத்தின் இயக்குநர்-தயாரிப்பாளர்.

‘தி கார்டியன்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x