Published : 10 Jun 2017 11:53 AM
Last Updated : 10 Jun 2017 11:53 AM

தொழிற்சாலைப் பண்ணைத் துயரம்: பேலியோவுக்கு மறைமுக எச்சரிக்கை?

பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, இயற்கை வேளாண்மை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருக்கும் காலம் இது. இந்தியா மட்டுமல்ல... இன்னும் சில மூன்றாம் உலக நாடுகள்கூட இயற்கை வேளாண்மையைக் கைக்கொண்டு வருகின்றன.



அதேவேளையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மிகவும் அபாயகரமான ஒரு வேளாண் முறை பரவலாகி வருகிறது. அது, ‘இண்டஸ்ட்ரியல் ஃபார்மிங்’எனப்படும் தொழிற்சாலைப் பண்ணை!



மாடுகள், பன்றிகள், கோழிகள், மீன் என இறைச்சிக்காகப் பயன்படும் உயிர்களை, அதிகளவில் ஒரே இடத்தில் அடைத்து வைத்து, அவற்றுக்குப் போதிய உடல் உழைப்பை வழங்காமல் வெறுமனே வேளா வேளைக்குத் தீவனத்தை மட்டும் வழங்கி அவற்றைக் கொழுக்கச் செய்து, இறுதியில் பலியிட்டு அவற்றை நமது உணவுத் தட்டுகளுக்குக் கொண்டு வரும் வேலையைத்தான் இந்த தொழிற்சாலைப் பண்ணை செய்கிறது.



இந்த ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் நாளின் கருப்பொருள்: 'இயற்கையுடன் மக்களை இணைப்போம்!'



'ஃபார்மகெடன்' எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்த இதை விடவும் சிறந்த தருணம் இருக்கப்போவதில்லை. இந்தப் புத்தகத்தை புளூம்ஸ்பரி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதன் ஆசிரியர் பிலிப் லிம்பெரி. பல ஆண்டுகளாக உலகளவில் பண்ணை வேளாண்மைக்கு எதிராகச் செயல்பட்டுவரும் இவர், அது சார்ந்த பிரச்சினைகளை இந்தப் புத்தகத்தில் கவனப்படுத்தியுள்ளார்.



ஒரே இடம்... குறுகிய இடம்!



9,600 சதுர அடி கொண்ட கோழிப் பண்ணையில், கோழிகளுக்கு உணவு அளிக்க 220 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இது ஓர் அடிப்படைக் கணக்கு. அவ்வளவு பெரிய இடத்தில் ஒரு கோழி, சாதாரணமாக நடமாடுவதற்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? ரொம்ப யோசிக்க வேண்டாம்... ஒரு ‘ஏ 4’ தாள் அளவு இடம் மட்டுமே ஒரு கோழிக்குக் கிடைக்கும். அப்படியென்றால், 9,600 சதுர அடியில் எத்தனை கோழிகளை அடைத்து வைத்திருப்பார்கள் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!



இப்படி நெருக்கமாக அடைத்து கோழிகளை வளர்க்கும்போது, அதிகளவில் நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. கோழிகள் மட்டும்தான் இப்படி என்றில்லை. பன்றிகள், மாடுகள் ஏன் மீன்களும்கூட இப்படித்தான் நெருக்கமாக அடைத்து வளர்க்கப்படுகின்றன. இதனால் ஹெச் 5என் 1, எம்.ஆர்.எஸ்.ஏ., ஸ்வைன் ஃபுளூ என்று பல தொற்றுகள் ஏற்படுகின்றன.



கழிவு தரும் கேடு



இப்படி நெருக்கமாக அடைத்து வளர்க்கப்படும் பண்ணையில், உயிரினங்களின் கழிவுகளும் முறையாகக் கையாளப்படுவதில்லை. பண்ணையில் இல்லாமல், இயற்கையான முறையில் சுதந்திரமாக வளர்க்கப்படும் உயிரினங்களின் கழிவுகள், சிறந்த இயற்கை உரமாக மாறுவதற்கு சாத்தியம் உண்டு. ஆனால், பண்ணையில் வளர்க்கப்படும் உயிரினங்களின் கழிவுகள் அங்கேயே தேங்கிவிடுகின்றன. பல பண்ணைகள், அந்தக் கழிவைச் சுத்தப்படுத்துவதில்லை.

நாளடைவில் இந்தக் கழிவு நிலம், நீரில் கசிந்து கலந்துவிடுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுதல், நதி, ஏரி ஆகியவற்றில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுதல் போன்ற பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இந்தக் கழிவுகள் உண்டாக்குகின்றன. அந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்குத் தோல் நோய்கள் உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன.



குறைந்த அளவே சிறந்தது



இப்படி இறைச்சிக்காக வளர்க்கப்படும் உயிரினங்கள், பண்ணையில் சந்திக்கும் துயரங்கள் சொல்லி மாளாது. உதாரணத்துக்கு, பிராய்லர் கோழிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றின் எடையைக் கூட்டுவதற்கு அவற்றுக்கு ஆன்டிபயாட்டிக் ஊசிகள் செலுத்தப்படுவது தவிர, வேறு பல துயரங்களையும் சந்திக்கின்றன.



சாதாரணமாக, கோழிகள் வருடத்துக்கு ஒருமுறை தனது இறக்கைகளை உதிர்த்து, புதிதாக இறக்கைகளை வளர்க்கும். அதற்கு பத்து முதல் இருபது நாட்கள் ஆகும். அந்தக் காலத்தில் அவை முட்டையிடாது. அந்த நேரத்தில் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்படும். எனவே, இயற்கையாக கோழிகள் தங்களது இறக்கைகளை உதிர்க்கும் காலத்துக்கு முன்பாக, பண்ணையில் பணியாற்றுபவர்களே கட்டாய இறகு உதிர்ப்பை மேற்கொள்கிறார்கள்.



இந்தத் துயரங்கள் எல்லாம் ஒரு புறமிருக்க, பண்ணையில் வளரும் உயிரினங்களின் உணவுக்காக ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களால் தற்போது உலகிலிருக்கும் மனிதர்களுக்கு உணவு தருவதுடன் கூடுதலாக முந்நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவை வழங்க முடியும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.



'நாம் உட்கொள்ளும் இறைச்சியின் அளவை குறைத்துக்கொண்டால் போதும். உலகில் எங்குமே தொழிற்சாலைப் பண்ணை இருக்காது. அங்கு உயிரினங்கள் கொடுமைப்படுத்துவதும் நிகழாது' என்கிறார் ஆசிரியர்.



அதனால்தான் இன்று அமெரிக்காவில் 'ஃபிளெக்சிடேரியனிசம்' எனும் புதிய உணவு முறை பிரபலமாகி வருகிறது. அப்படி என்றால் என்ன..? குறைந்த அளவு இறைச்சியை உட்கொள்வதுதான்! பலரும் பேலியோ, பேலியோ என்று கண்ணை மூடிக்கொண்டு ஒரே திசையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நிதர்சனத்தில் நின்று பேசுகிறது ஃபிளெக்சிடேரியனிசம். அது உலகை ஆட்கொள்ளுமா, காத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x