Last Updated : 24 Dec, 2016 11:30 AM

 

Published : 24 Dec 2016 11:30 AM
Last Updated : 24 Dec 2016 11:30 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 14: சிக்கலிலேயே தீர்வும் உள்ளது

சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சம்தான் பச்சை இலைகள் மூலமாக பழங்களைத் தருகிறது. சிக்கலிலேயே தீர்வும் உள்ளது என்ற கூற்று சற்று நகைச்சுவையானதாகத் தோன்றும். மெய்யியல் கூற்றாகவும் தோன்றும். பண்ணை வடிவமைப்பில் இது மிகவும் அடிப்படையான விதிகளில் ஒன்று. பண்ணை வடிவமைப்புக்கு மட்டுமல்லாது வாழ்க்கை அணுகுமுறைக்கும் இந்த விதி பயன்படும்.

ஆஸ்திரேலிய நிரந்தர வேளாண்மை அறிஞர் பில் மொலிசன் இதைப் பண்ணை வடிவமைப்பு நெறிமுறைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். நாம் சிக்கலை எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் தீர்வும் காணப்படும். இல்லையேல் சிக்கல் நெருக்கடியாகவே கருதப்படும்.

ஃபுகோகாவின் கண்டறிதல்

ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகா ‘நானும் எனது பூச்சி நண்பர்களும் சேர்ந்து ஒரு அருமையான நெல் விதையைக் கண்டறிந்தோம்' என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். பொதுவாகப் பூச்சி தாக்குதல்தான் உழவர்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. இதற்காக டன் கணக்கில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மண் வளம் கெட்டு, சூழல் நாசம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பூச்சிகளை நண்பர்கள் என்று மசானபு ஃபுகோகா கூறுவதன் பொருள் - சிக்கலிலேயே தீர்வை கண்டதுதான்.

ஒரு முறை அவரது நெல் வயலில் கடுமையான பூச்சி தாக்குதல் ஏற்பட்டது. அப்போது பெரும்பாலான பயிர்கள் அழிந்துவிட்டன. எஞ்சியது மிகச் சொற்பமே. இந்தப் பேரழிவிலும் மிஞ்சிய பயிர்களில் ஓரிரு நெல் மணிகள் கிடைத்தன. அந்த நெல்மணிகளை அடுத்த முறை விதைத்தபோது மேற்கூறிய பூச்சித் தாக்குதலை எதிர்கொண்டு, அவை நன்கு விளைந்தன. ஆக, வழக்கமான பூச்சித் தாக்குதலை எதிர்கொள்ளும் திராணி பெற்ற, ஒரு புதிய நெல் விதையைக் கண்டறிந்துகொண்டதாக மசானபு ஃபுகோகா குறிப்பிடுகிறார். எனவே, சிக்கல் என்பது எல்லா இடத்திலும் இருக்கும். அதை எப்படிப் பயனுள்ளதாக, தீர்வாக மாற்றுகிறோம் என்பதில்தான் நமது திறமை உள்ளது.

ஈரநிலத்தின் உருமாற்றம்

பண்ணை ஒன்றில் ஒரு குறிப்பிட்ட இடம் மோசமான கழித்தரையாக இருந்தது. மற்ற இடங்களில் பயிர் நன்றாக வளரும். ஆனால், இந்த ஒரு இடத்தில் மட்டும் விளைச்சல் மிகக் குறைவாக இருந்தது, எப்போதும் நீர் தேங்கி நின்றது. இதனால் பயிர்கள் அழுகின. வேர்கள் நன்கு இறங்கிப் பயிர்கள் செழித்து வளர்வதற்கு, கழித்தரை இடைஞ்சலாகவே இருந்தது. இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று யோசித்து ஒரு முடிவெடுத்தோம். நீர் நிற்கும் கழித்தரைப் பகுதியில் ஒரு மீன் குட்டை அமைத்தோம். தண்ணீர் நீண்ட நாட்களுக்கு நின்றது, அதிலிருந்து மீன்களும் அறுவடையாகின. பண்ணைக்கான நீரும் ஓரளவு கிடைத்தது.

மாறியது மண்ணரிப்பு

மற்றொரு பண்ணையில், நிலம் தொடங்கும் இடத்தில் மிகப் பெரிய அளவில் மண் அரிமானம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. பெரியதொரு மலைப் பகுதியின் அடிவாரத்தில் நிலம் தொடங்குகிறது. எனவே, மழை பெய்துவரும் நீரின் வேகம் மிக அதிகமாக இருந்தது. எப்படிக் கரை அமைத்தாலும், அடுத்த மழையில் அவை அடித்துச் செல்லப்பட்டுவிடும். இது அவர்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. பண்ணையில் தனியாக ஒரு கால்வாயை வெட்டி நீரை வெளியே கடத்திவிடலாம் என்ற கருத்து பண்ணையை நிர்வகிப்பவர்களிடையே இருந்தது.

“அது சரியான முறையல்ல என்று அவர்களுடன் கலந்து பேசி, வேறு ஒரு யோசனையை முன்வைத்தோம். நீர் பண்ணைக்குள் இறங்கி உடைப்பெடுக்கும் இடத்தில், ஒரு பண்ணைக் குட்டை அமைத்தோம். இந்த நிலம் செம்மண் நிலம், கழித்தரை இல்லை. எனவே, நீர் நீண்ட நாட்களுக்கு நிற்காது. அதேநேரம், பண்ணையில் கீழ்ப் பகுதியில் உள்ள கிணற்றில் நன்கு நீர் ஊற்று கிடைத்தது. இப்படிச் சிக்கல்களை நமக்குச் சாதகமாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

மருந்தான ‘களை’

பொதுவாக உழவர்களுக்குக் களைகள் மிகப் பெரிய சிக்கல். ‘களை எடுத்தே கடன்காரன் ஆனேன்' என்று சொல்லும் உழவர்களைக் காண முடியும். முதலில் களைகளைப் பற்றிய அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். பூச்சிகளில் எப்படி நமக்கு நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளனவோ, அதுபோல நன்மை செய்யும் களைகளும் உள்ளன.

பயிற்சி முகாம் ஒன்றில், ஓர் இளைஞர் “பண்ணையில் ஆவாரைச் செடிகள் மிகவும் தொந்தரவாக உள்ளதாகவும், அதை அழிக்க ஏதாவது களைக்கொல்லி இருக்கிறதா?” என்றும் கேட்டார். அந்த முகாமில் இயற்கை உணவு வல்லுநர் சிவகாசி மாறன் அவர்களும் இருந்தார். அவரைப் பொறுத்தவரை ஆவாரைப் பூவும் செடியும் மிகச் சிறந்த மருந்தாகும். அதை அவர் விலை கொடுத்து வாங்குகிறார். ஆனால் மற்றொருவரோ அது மிகப் பெரிய தொல்லை, அதை அழிக்க வேண்டும் என்கிறார்.

எங்களது கலந்துரையாடலுக்குப் பின்னர் களையாகக் கருதப்பட்ட ஆவாரைச் செடி விலைமதிப்புள்ள மருந்தாக மாறியது. இருவருக்கும் லாபம். இப்படிப் பல களைச் செடிகளுக் கும் பயன்கள் உண்டு. பெரும்பாலும் நமது நாட்டு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுபவை இந்தக் ‘களைச்' செடிகள்தாம். களைகளைப் புரிந்துகொண்டால் சிக்கல் தீர்வாகும்.

எலியும் களையும்

இதேபோல ஒரு பண்ணையின் நடுவில் இருக்கும் மரத்தை உடனே வெட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டியதில்லை. அதை வைத்துக்கொண்டு ஒரு ஆட்டுக் கொட்டகையோ அல்லது கோழிக் கொட்டமோ அமைக்கலாம். நிழலில் அமையும் அந்த இடத்தைக் கால்நடைகள் விரும்பி தங்கும்.

உங்கள் பண்ணையில் எலிகள் மிகப் பெரிய சிக்கலாக உள்ளனவா? அவற்றைக் கிட்டிகள் (எலிப்பொறி) வைத்துப் பிடியுங்கள், அவற்றை உங்களது பழ மரங்களுக்கு அடியில் புதையுங்கள், பின்னர்ப் பாருங்கள் விளைச்சல் பெருகும். பண்ணை நிலத்துக்குள் பாறைகள் இருந்து, பயிர் செய்வதற்குத் தடையாக உள்ளனவா? அவற்றை உடைத்து வீடு கட்டலாம், செங்கல்லை வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை.

பழத் தோட்டத்தில் ஏராளமாகக் களைகள் பெருகிக் கிடக்கின்றன என்றால், உடனே அவற்றைக் கொல்லக் களைக்கொல்லிகளை நாட வேண்டாம். அவற்றைப் பிடுங்கி அழிக்க ஆட்களை வேலைக்கு வைத்துப் பண விரயமும் செய்ய வேண்டாம். பழத் தோட்டத்துக்குள் இளம் செம்மறி ஆட்டுக்குட்டிகளை (வெள்ளாடு வேண்டாம்) மேய விடுங்கள். காசு இல்லாமலேயே உங்கள் பழத் தோட்டத்தில் அவை களை எடுத்துவிடும்.

ஆக, நம் சிக்கல்கள் யாவற்றையும் ஒற்றைத் தன்மையுடன் அணுக வேண்டியதில்லை. பல கோணங்களில் பல முறைகளில் அணுகினால், சிக்கலே தீர்வாகவும் அமையும்.

(அடுத்த வாரம்: உற்பத்தித்திறனுக்கு வரம்பில்லை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x