தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 06: பயன்படுத்துவதற்கு முதலில் பராமரிக்க வேண்டும்

Published : 22 Oct 2016 12:18 IST
Updated : 22 Oct 2016 17:10 IST

உணவுக்காக புலி மானைக் கொல்கிறது, மான் இனத்தையே கொன்றொழிப்பதில்லை -

பண்ணை வடிவமைப்பில் சில அறக் கோட்பாடுகளும் இயற்கை விதிகளும் பின்பற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட விதிகளும் கோட்பாடுகளும் பண்ணையை வெற்றிகரமாகக் கொண்டுசெல்வதற்கு உதவுகின்றன. இல்லையென்றால் பண்ணையின் நீடித்த தன்மையும், பொருளாதாரத் தாங்குதிறனும் அறுந்துபோய்விடும். பண்ணை வடிவமைப்பின் முதன்மைக் கோட்பாடு சூழலையும் உயிர்களையும் ஓம்புதல் என்பதாகும். அதாவது நிலம், நீர், காற்று போன்ற வாழ்வாதாரங்களைப் பேணுவதும், நுண்ணுயிர்கள், செடி, கொடிகள், விலங்குகள், மனிதர்கள் முதலிய உயிர்களைப் பேணுவதும் ஆகும்.

எது ஓம்புதல்?

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை' என்று திருக்குறள் வழிகாட்டுகிறது.

இதன் பொருள் அனைத்து உயிர்களையும் பயன்படுத்துவதுடன் பாதுகாத்தல் என்பதாகும். அதாவது ஒரு தென்னை மரத்துக்கு நீரூற்றிப் பராமரிக்கிறோம், பாதுகாக்கிறோம், பின்னர் அதிலிருந்து கிடைக்கும் தேங்காயைப் பயன்படுத்துகிறோம்.

நெல்லை விதைத்து, நீர் பாய்ச்சி, அறுவடை செய்கிறோம், அடுத்த சாகுபடிக்கான விதை நெல்லை எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் சமைக்கிறோம் (இப்போது அப்படிச் செய்வதில்லை).

கால்நடைகளை வளர்க்கிறோம், உணவுக்காகக் கொல்ல வேண்டிய நிலை வருகிறது, மனம் ஒப்பவில்லை, தெய்வத்திடம் செல்கிறோம், உயிரைத் தெய்வம் கொடுத்தது என்று நம்புகிறோம், அந்த உயிரைத் தெய்வத்துக்குப் பலியாகக் கொடுத்துவிட்டு, உடலை உண்கிறோம். அதாவது தெய்வத்துடன் இனம்புரியாத ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக் கொள்கிறோம்.

இப்படிப் பராமரித்துப் பயன்படுத்தும் முறையையே நாம் ஓம்புதல் என்கிறோம்.

பூவுலகு தாங்குமா?

பல்லுயிர் ஓம்புதலை இரண்டு முறையாகப் பிரிக்கலாம்,

1. சூழலைப் பேணுதல்

2. உயிர்களைப் பேணுதல்

வாழ்க்கை ஆதாரங்களான நீர், மண், காற்று போன்ற சூழலியல் கூறுகளைப் பேணுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை வளமாக மாறும். இதையே வேறு வகையில் சொல்வதானால் மண்ணையும், நீரையும் காப்பதால் மட்டுமே மக்களைக் காக்க முடியும். எனவே, மனித குலம் வாழ வேண்டுமானால் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். பண்ணை வடிவமைப்பின் முதல் கோட்பாடு சூழல் நலம் பேணுதல் என்பதே.

‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என்று புறநானூறு குறிப்பிடுகிறது. அதாவது உயிரினங்கள் வாழ்வதற்கான அடிப்படையான உணவு என்பது நீரும், நிலமும். எனவே, நீரையும் நிலத்தையும் பேணுவதன் மூலம் உயிர்கள் தமக்கான உணவைப் பெற முடியும். இது ஓர் அறமாக இருந்தாலும், உயிர் வாழ்தலுக்கான அடிப்படை நிபந்தனையாகவும் உள்ளது. இன்று பெருகிவரும் சூழல் மாசுபாட்டையும் பற்றாக்குறையையும் உருவாக்கிவரும் மனித குலத்தை நீண்ட நாள்களுக்கு இந்தப் பூவுலகம் தாங்கிக்கொண்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இயற்கையே தீர்வு

ரசாயன வேளாண்மையின் போதாமை இன்று உலகமெங்கும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது, விளைச்சல் வீழ்ச்சியடைவது மட்டுமல்லாமல் உலகமே நச்சு வளையத்தில் சிக்கிவருகிறது. இனங்காண முடியாத நோய்கள் பெருகிவிட்டன. உழவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். பல மாநிலங்களில் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பண்ணை, பொருளாதார வகையில் சிறந்து விளங்க வேண்டுமானால், நஞ்சில்லாத நல்ல உணவை விளைவிக்க வேண்டுமானால், நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து விளைச்சல் தர வேண்டுமானால், இயற்கை வழிமுறையே சிறந்தது. அதாவது சூழலைப் பேணும் வேளாண்மை முறையே சிறந்தது.

சிற்றுயிரின் பெரும் பங்கு

இரண்டாவதாக, உயிர்களைப் பேணுதல் என்பது, பூவுலகில் தோன்றிய உயிர்களைப் பேணுவது என்பதாகும். இதைச் சூழல் அறம் என்றும் கூறலாம். ஒரு பண்ணையில் பல்வேறு பயிரினங்களும் உயிரினங்களும் இருக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையையும், கூடுதல் வேலையையும் செய்துகொண்டிருக்கும். அதைப் பற்றி விரிவாகப் பின்னர் காண்போம்.

அப்படிப்பட்ட பல்வேறு பயிர்களையும் உயிர்களையும் பேணிக் காப்பதன் மூலம் பண்ணையின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். பயிர்களைத் தாக்கும் ஒரு வகைப் பூச்சியைக் குளவிகள் கட்டுப்படுத்தும். குளவிகளை முற்றிலும் அழித்துவிட்டால், பூச்சிகளின் அளவு பண்ணையில் அதிகரிக்கும்.

பண்ணையில் விழும் கழிவுகளை மட்க வைப்பதில் நுண்ணுயிர்களின் பங்கும் மண்புழுக்களின் பங்கும் அடிப்படையானது. அப்படியான நுண்ணுயிர் நிறைந்த மண்ணில் பூச்சிக்கொல்லிகளைக் கொட்டி நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் கொன்றுவிட்டால் மட்குச் செயல்பாடு நின்றுபோகும். மண்வளம் குறையும். பண்ணையின் நலனைப் பேணுவதில் ஒவ்வொரு சிற்றுயிருக்கும் ஒரு பங்கு உண்டு. இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

உயிர்ம நீதி

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது மற்றொரு அறம். அந்த அடிப்படையில் அனைத்து உயிர்களும் இந்த மண்ணில் வாழ உரிமை பெற்றவை. மனிதர்கள் மாத்திரமே இந்தப் பூமியில் வாழ உரிமை கொண்டவர்கள் அல்ல. ஆனால், மனிதக் குலமோ அதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், தனது எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டே செல்கிறது. காட்டில் வாழும் மான்களில் இருந்து புலிகள், யானைகள், அரிய பறவைகள், மீன்கள் என்று பெரும்பாலான உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், மனித எண்ணிக்கையோ நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.

அனைத்து மக்களுக்குமான சமூக நீதி பற்றிப் பேசுகிறோம். ஆனால் அனைத்து உயிர்களுக்குமான உயிர்ம நீதி பற்றிப் பேச மறுக்கிறோம். எப்படி அதிகாரத்தில் உள்ளவர்கள் அடித்தட்டு மக்களுக்கான நீதியை மறுக்க முனைகிறார்களோ, அதே முறையில் ‘நாகரிக' மனித குலம் உயிர்ம நீதியை மறுக்கிறது. ‘முன்னேறா' மக்கள் என்று சொல்லப்படும் பழங்குடிகளிடம் இருக்கும் உயிர்ம நேயம், ‘முன்னேறிய' மக்களிடம் இல்லை.

ஒரு புலி பசிக்காக ஒரே ஒரு மானைக் கொல்கிறது, அந்த உடல் மற்ற உயிர்களுக்கும் உணவாகக் கிடைக்கிறது. பசியில்லாதபோது அருகில் செல்லும் மான்களைப் புலி கொல்வதில்லை. மான் கூட்டத்தையே வேட்டையாடி அழிப்பதில்லை.

இலவச ஊட்டச்சத்து

பண்ணை என்பது பல்லுயிர்களின் கூடமாக இருக்க வேண்டும். இது அறக் கோட்பாடாக மட்டுமல்லாமல், பண்ணை நீடித்து இயங்குவதற்குப் பல்வேறு உயிர்களும் பயிர்களும் அத்தியாவசியம். நம் பண்ணைக்குள் வந்து செல்லும் பறவைகள் மிகச் சிறந்த சாம்பல் (பொட்டாஷ்) உரத்தை வழங்குகின்றன, கிடைக்காத அபூர்வமான விதைகளைக் கொண்டுவருகின்றன.

கறையான்கள் உயரிய இயக்குநீர்களை (ஹார்மோன்களை) வழங்குகின்றன. மண்புழுக்கள் கதிர்க் காளான்களை (ஆக்டினோமைசிஸ்) அள்ளி வழங்குகின்றன. ஏன், களைகள் என்று தூற்றப்படுபவையும்கூடப் பண்ணைக்கு உதவி செய்கின்றன. எருக்கிலை போரான் சத்தைக் கொடுக்கிறது, ஆவாரஞ் செடி செம்புச் சத்தைக் கொடுக்கிறது. துத்திச் செடி சுண்ணாம்புச் சத்தை வழங்குகிறது. இவை எல்லாம் கடையில் அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்கள். இவற்றைக் காசின்றி இலவசமாக வழங்குகின்றன பண்ணை உயிர்கள்.

(அடுத்த வாரம்: பகிர்தலும் பகுத்துண்ணலும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com 

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor