Published : 27 Feb 2016 11:47 AM
Last Updated : 27 Feb 2016 11:47 AM

தண்ணீர்ப் பஞ்சம்: யாரும் மிஞ்சப் போவதில்லை!

கிட்டத்தட்ட 400 கோடி பேர், அல்லது உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர்! ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கைதான் இது! இதில் 200 கோடி பேர் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள். ஆக, தண்ணீர் பிரச்சினையின் தீவிரம் முன்பு நினைத்ததைவிட மிகவும் மோசம் என்கிறார் நெதர்லாந்தின் ட்வெண்டி பல்கலைக்கழகத்தின் நீரியல் மேலாண்மைக்கான பேராசிரியர் அர்ஜென் ஒய். ஹோக்ஸ்ட்ரா.

பசி, பஞ்சம், பட்டினி

‘சயின்ஸ் அட்வான்ஸஸ்’ என்ற இதழில் இது தொடர்பாக ஒரு ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வுக்கட்டுரைக்காக பேரா. ஹோக்ஸ்ட்ராவும் அவரது சகா மெஸ்ஃபின் எம். மீகொனெனும் ஒரு கணினி மாதிரியை உருவாக்கினார்கள். இது, உலகில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையின் தீவிரத்தைத் துல்லியமாகப் படம்பிடித்துக்காட்டும் கணினி மாதிரி என்கிறார்கள் அவர்கள்.

கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தால் விளைச்சல் பொய்க்கும் என்றும் இதனால் உணவு தானியங்களின் விலை வானை முட்டும் என்றும் சொல்லப்படுகிறது. கூடவே, பெரிய அளவில் பஞ்சமும் பசி பட்டினியும் தலைவிரித்தாடும் என அஞ்சப்படுகிறது.

இரண்டு மடங்கு தேவை

சரி, தண்ணீர்ப் பற்றாக்குறையை எப்படி வரையறுக்கிறார்கள்? ஒரு பகுதியில் உள்ள நிலங்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள், வீடுகள் போன்றவை அந்தப் பகுதியில் கிடைக்கக்கூடிய நீரைவிட இரண்டு மடங்கு அதிக நீரைப் பயன்படுத்தும்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகிறது.

“இந்தச் செய்தி நமக்கு உணர்த்துவது என்ன? நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டிருக்கிறது, ஏரிகள் வற்றிக்கொண்டிருக்கின்றன, ஆறுகளில் ஓடும் நீரின் அளவும் குறைந்துவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது. கூடவே, தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்துக்குமான நீர்ப் பகிர்மானமும் கேள்விக்குறி ஆகியிருக்கிறது” என்கிறார் பேராசிரியர் ஹோக்ஸ்ட்ரா.

எப்படியிருக்கும்?

இதனால் எல்லோருமே ஒரே விதமாகப் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று அர்த்தம் இல்லை. பணக்கார நாடுகளில் தண்ணீர்ப் பஞ்சம் வந்தால், தூவல் குளியலுக்கும் தோட்டத்துக்கும் தேவையான நீரும் அவ்வப்போது ரேஷன் முறையில் வழங்கப்படக்கூடும். ஏழை நாடுகளோ குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்பதுதான் உண்மை நிலை.

ஆண்டில் ஒரு மாதமாவது கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 400 கோடி பேரில் பாதிப் பேர் சீனாவிலும் இந்தியாவிலும்தான் வாழ்கிறார்கள் என்கிறார் பேராசிரியர் ஹோக்ஸ்ட்ரா. மீதமுள்ள 200 கோடி பேரில் பெரும்பாலானோர் வங்கதேசம், பாகிஸ்தான், நைஜீரியா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் கலிஃபோர்னியா, டெக்ஸாஸ், ஃப்ளோரிடா போன்ற மாகாணங்களில் வசிக்கிறார்கள்.

யாரும் தப்பிக்க முடியாது

170 கோடியிலிருந்து 310 கோடி பேர்வரை கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் கூறின. ஆனால், மேற்கண்ட ஆய்வுகள் பொதுப்படையானவை என்றும் மாதாந்திரத் தரவுகளை அவை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் பேராசிரியர் ஹோக்ஸ்ட்ரா கூறுகிறார்.

“நன்னீர்ப் பற்றாக்குறை என்பது உலகப் பொருளாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல்; 400 கோடி மக்களை நேரடியாக பாதிக்கக்கூடியது. அது மட்டுமல்ல, மீதமுள்ள மக்களுக்கும் இது பாதிப்புதான். ஏனெனில், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாத பகுதிகளில் உள்ளோரும் தங்கள் உணவுக்காகக் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் நாடுகளையே சார்ந்திருக்கிறார்கள். ஆகவே, இந்தப் பிரச்சினையால் அனைவரும் பாதிக்கப்படப் போவது நிதர்சனம்” என்கிறார் பேராசிரியர் ஹோக்ஸ்ட்ரா.

© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x