கூண்டுப் பறவையைப் பறக்க விடலாமா?

Published : 08 Apr 2014 13:39 IST
Updated : 08 Apr 2014 13:41 IST

தொலைக்காட்சியில் படம் ஒன்று ஓடிக்கொண் டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் வரும் கதாநாயகி சுதந்திரத்தை மிகவும் விரும்புபவள். ஒரு கடைவீதியில் வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடைக்குச் சென்று கூண்டுகளோடு நிறைய பறவைகளை விலைக்கு வாங்கி, அந்தப் பறவைகள் எல்லாவற்றையும் பறக்க விட்டுவிடுவாள். ஒளிந்துகொண்டு பார்க்கும் கதாநாயகனுக்கு நாயகி மேல் காதல் வருவதற்கு இது போதாதா?

பறவைகள் சுதந்திரமாகப் பறக்க வேண்டியவை என்ற நல்லெண்ணம்தான் அந்தக் கதாநாயகியின் செயலுக்கு அடிப்படை. ஆனால், நல்லெண்ணம் பல நேரங்களில் சரியான எண்ணங்களாக இருப்பதில்லை. பெரும் பாலான கூண்டுப் பறவைகள் காலம்காலமாகக் கூண்டுப் பறவைகளாகவே வளர்க்கப் படுபவை. சொல்லப்போனால், பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுபவை.

அவற்றால் அதிக உயரத்திலோ, அதிக தொலைவுக்கோ பறக்க முடியாது. பருந்து போன்ற இரைகொல்லிப் பறவைகள் வந்தால், அவற்றுக்குத் தற்காத்துக்கொள்ளத் தெரியாது. தாமாக இரை தேடத் தெரியாது. கூடு அமைத்துக்கொள்ளத் தெரியாது. அப்படி இருக்கும் போது அந்தப் பறவைகளைச் சுதந்திரமாகப் பறக்க விடுவது, அவற்றைக் கொல்வதற்குச் சமம்.

ஆதிகாலத்து நாயைப் போலச் சுதந்திரமாக இருக் கட்டும் என்று நம் வீட்டு நாயைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன வாகும்? வெகு விரைவில் சிறுத்தைக்கோ, புலிக்கோ இரையாகிவிடுமல்லவா? அதைப் போலத்தான் கூண்டுப் பறவைகளைப் பறக்க விடுவதும்.

ஆரம்ப காலத்தில் சுதந்திர மாகத் திரிந்து கொண்டிருந்த பறவைகளைப் பிடித்துத்தான், கலப்பினப் பெருக்கம் செய்து கூண்டுப் பறவைகளாக்கி வைத்திருக்கிறார்கள். காக்கட்டீல் கிளிகள், காதல் பறவைகள், கானரிகள், ஃபிஞ்ச்சுகள் போன்றவை மிகவும் பிரபலமாக இருக்கும் கூண்டுப் பறவைகளாகும்.

வளர்ப்புப் பறவைகளாக இல்லாமல் இயற்கையாகத் தற்போது பறந்து திரியும் கிளி, மைனா, புறா போன்ற பறவைகளையும் பிடித்துவந்து கூண்டுப் பறவைகளாக ஆக்குகிறார்கள். வளர்ப்புப் பறவைகளாக்குவதற்காக இயற்கைப் பறவைகளைப் பிடிப்பதால், பஞ்சவர்ணக் கிளி போன்ற பல்வேறு பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

கூண்டுப் பறவைகளை விடுதலை செய்வதைவிட புத்திசாலித்தனம், கூண்டுப் பறவைகளை வாங்காமல் இருப்பதுதான். அப்படிச் செய்தால்தான், இந்த நோக்கில் பறவைகளைப் பிடிப்பவர்கள் குறைவார்கள். காலப்போக்கில் கூண்டுப் பறவைகள் என்ற தனி இனமும் இல்லாமல்போகும்.

எனவே, அடுத்த முறை கடைவீதியில் யாராவது கூண்டுப் பறவைகளுக்கு விடுதலை வாங்கித்தந்தால் அவரை அவசரப்பட்டுக் காதலிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor