Published : 31 Oct 2015 01:11 PM
Last Updated : 31 Oct 2015 01:11 PM

கிழக்கில் விரியும் கிளைகள் 7: உலகுக்கு இந்தியா தந்த பழம்

மனிதனால் வளர்ப்புக்குக் கொண்டுவரப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் மிகவும் பண்டைய காலத் தாவரங்களில் வாழை முக்கியமானது. தமிழர்களால் முக்கனிகளில் ஒன்றாகப் போற்றப்பட்ட வாழை, தமிழகத்திலும் இந்தியாவின் இதர சில பகுதிகளிலும் பாரம்பரியம், பண்பாட்டுடன் ஒன்றறக் கலந்துவிட்ட ஒரு தாவரம்.

விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்டிகைகள் போன்றவற்றுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ள வாழை, பண்டைய இந்திய மொழிகள் அனைத்தின் இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் பரவலாக இடம்பெற்றுள்ள ஒரு தாவரம். கனியாக மட்டுமின்றி வேறு பல வகைகளிலும் பயன்படும் வாழை இந்தியாவில் ஆண்டுக்கு 1.7 - 2 கோடி டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலக வாழை உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 - 20 சதவீதம்.

கலப்பு வாழைகள்

தாவரவியல் அறிஞர்களின் கருத்துப்படி, மூசா அக்யூமினேட்டா (இது பொதுவாக AA எனப்படுகிறது) மற்றும் மூசா பல்பிசியானா (இது பொதுவாக BB எனப்படுகிறது) எனப்படும் இரண்டு இயல் வாழைச் சிற்றினங்களுக்கு இடையே ஏற்பட்ட கலப்புயிரி அல்லது கலப்பில்லாத ரகங்களே தற்போது வளர்க்கப்பட்டுவரும் பயிர் வாழை ரகங்கள் அனைத்தும். இந்தியாவில் ஏறத்தாழ 52 வளர்ப்பு வாழை ரகங்கள் உள்ளன. வளர்ப்பு ரகங்களுக்கும், அவற்றின் இயல் முன்னோடிகளுக்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உண்டு.

வளர்ப்பு ரகங்களின் பழங்கள் உண்ணத் தகுந்தவை, விதைகள் அற்றவை, கிழங்குகள் (அடித்தண்டுகள்) மூலம் மட்டுமே இனப்பெருக்கம் அடையக்கூடியவை. இவற்றின் இனப்பெருக்கம் பெரிதும் மனித உதவியைச் சார்ந்தே உள்ளது. ஆனால் அதேநேரம், இயல் சிற்றினங்களின் பழங்கள் பொதுவாகச் சிறியவை, விதைகள் கொண்டவை, கிழங்கு பொதுவாக இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.

எத்தனை எத்தனை ரகங்கள்?

மேற்குறிப்பிட்ட 52 வளர்ப்பு ரகங்களில் இந்தியத் தேசியத் தாவர ஜீனிய குலங்கள் நிறுவனத்தின் (National Bureau of Plant Genetic Resources -NBPGR) அறிக்கையின்படி, கிழக்கு மலைத்தொடர் பகுதியில் பின்வரும் முக்கிய வாழை ரகங்கள் காணப்படுகின்றன: விருப்பாக்ஷி, பூவன், கதலி, நெய்ப்பூவன், ரஸ்தாளி, பச்சைலாடன், ரசவாழை, மொந்தன், பேயன், சம்பா, அம்ரித்சாகர், லகாடன், ஜெயன்ட் குரோவர், தெல்லா செக்கரக்கேலி. இவற்றில் ஒரு சிலவற்றுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் உண்டு.

மேற்குறிப்பிட்ட 52 வளர்ப்பு ரகங்களில் இந்தியத் தேசியத் தாவர ஜீனிய குலங்கள் நிறுவனத்தின் (National Bureau of Plant Genetic Resources -NBPGR) அறிக்கையின்படி, கிழக்கு மலைத்தொடர் பகுதியில் பின்வரும் முக்கிய வாழை ரகங்கள் காணப்படுகின்றன: விருப்பாக்ஷி, பூவன், கதலி, நெய்ப்பூவன், ரஸ்தாளி, பச்சைலாடன், ரசவாழை, மொந்தன், பேயன், சம்பா, அம்ரித்சாகர், லகாடன், ஜெயன்ட் குரோவர், தெல்லா செக்கரக்கேலி. இவற்றில் ஒரு சிலவற்றுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் உண்டு.

வாழையின் தோற்ற வரலாற்றிலும், அதன் விரிவாக்கத்திலும், பரவலிலும் இந்தியா முக்கிய மையமாகத் திகழ்ந்துள்ளது. இந்தியாவில்தான் மிக அதிக எண்ணிக்கையில் AB கலப்பு வாழை ரகங்கள் காணப்படுகின்றன. எனவே, இந்தியாவும் அருகில் அமைந்துள்ள மியான்மர், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளும் பெரும்பாலான வாழை ரகங்களின் தோற்றம் கொண்ட பகுதிகளாகும்.

கர்நாடகத்தின் தெற்குப் பகுதி, கேரளம், தமிழ்நாடு, பிளவுக்கு முந்தைய ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற இந்தியப் பகுதிகளில் நம் நாட்டின் 52 வாழை ரகங்களில் பல தோன்றி, விரிவடைந்து, பரவியுள்ளதற்கு முக்கிய சான்றுகள் உள்ளதாகத் திருச்சி வாழை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் உமா, உலக உணவு, வேளாண் அமைப்புக்கு (FAO) அனுப்பியுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் வாழையின் தொன்மையை நோக்கும்போது மேற்கூறப்பட்ட கருத்து மேலும் வலுவடைகிறது.

(அடுத்த வாரம்: கிழக்கு மலைத்தொடரின் ‘சிறப்பு வாழை’கள்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x