கிழக்கில் விரியும் கிளைகள் 44: மஞ்சள்நாறி தெரியுமா?

Published : 27 Aug 2016 14:39 IST
Updated : 14 Jun 2017 18:23 IST

தணக்கம் என்ற தாவரப் பெயர் சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு பாட்டில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது (‘பல் பூத்தணக்கம்' குறிஞ்சிப் பாட்டு; 85). அதற்குப் பின்பு பெருங்கதையில்தான் இது மறுபடியும் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (‘தண்பூந்தணக்கம்' - பெருங்கதை: இல:15:15).

வழக்கிலிருந்து அழியவில்லை

பல பூக்களின் சூலகப் பகுதிகள் வளரும்போதே ஒன்றோடொன்று இணைந்து ஒரு கூட்டு உறுப்பை உருவாக்கி, அதிலிருந்து ஒவ்வொரு பூவின் பூவிதழ்களும் குழல் போன்று தனித்தனியாகத் தோன்றுகின்றன. இந்த பல பூக்களின் கூட்டமைப்பு கபிலரின் பார்வையிலிருந்து தப்பவில்லை போலும்! எனவேதான், அதை அவர் பல் பூத்தணக்கம் என்றார்.

இன்றைய வழக்கில் தணக்கம் என்ற சொல் வழக்கில் இல்லை என்றாலும், தமிழ்நாடு-கேரள எல்லை மலைப்பகுதிகளில் இந்த தாவரத்தின் மரக்கட்டையை விற்கும் சில வியாபாரிகள் தணக்கம் என்ற சொல்லை இன்றும் பயன்படுத்துகிறார்கள் என்பதை என்னுடைய கள ஆய்வின்போது கண்டுள்ளேன்.

இரண்டு வேறுவேறு தணக்கம் என்ற சொல் எந்தத் தாவரத்தைக் குறிக்கிறது? தமிழ் நிகண்டுகள் ‘தணக்கு நுணாவே' என்றும் ‘நுணவு தணக்கே' என்று கூறுவதிலிருந்து, இரண்டும் ஒன்றாக இருக்கலாம் என்று சில தமிழறிஞர்கள் கருதுகின்றனர். கவனமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்பு நுணாவும் தணக்கும் ஒரே தாவரப் பேரினத்தின் இரண்டு வெவ்வேறு சிற்றினங்கள் என்பதை நான் கண்டறிந்தேன் (நுணா: Morinda Pubescens; தணக்கம்: Morinda angustifolia). மேலும், முதலாவது சிற்றினம் முல்லை நிலத்தையும், முல்லை திரிந்த பாலை நிலத்தையும் சேர்ந்தது. இரண்டாவது சிற்றினம் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தது என்றும் நான் அறிந்தேன்.

மஞ்சள் நிறத்தின் காரணம்

நுணா, நுணவு, நுணவம் என்ற மூன்று பெயர்களும் தமிழ் இலக்கியத்தில் முல்லை, பாலைத் திணை சார்ந்த பாடல்களில் (குறிஞ்சித் திணை பாடல்களில் அல்ல) காணப்படுகின்றன (‘கருங்கால் மராஅம் நுணவோ டலர இருஞ்சிறை வண்டினம் பாலைமுரல' திணை மொழி ஐம்பது 16).

இந்த இரண்டு சிற்றினங்களுமே மஞ்சநாத்தி என்ற பெயரால் கிராம மக்களால் தற்போது அழைக்கப்படுகின்றன. இந்தப் பெயர் ‘மஞ்சள் நாறி' என்ற சொற்றொடரிலிருந்து தோன்றியது; ஏனெனில், இதன் மரக்கட்டை மஞ்சள் நிறத்தது, மணமுள்ளது. இரண்டுக்கும் காரணம் இந்தக் கட்டைகளில் உள்ள குவினோன் என்ற வேதிப்பொருள். இரண்டு சிற்றினங்களின் மரக்கட்டைகளும் மரவேலைகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டையிலிருந்து பயன் தரும் மஞ்சள் நிறச் சாயமும் பெறப்படுகிறது.

(அடுத்த வாரம்: நிஜ நுணா மருந்தாகுமா?)

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர். | தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor