Last Updated : 25 Jun, 2016 02:24 PM

 

Published : 25 Jun 2016 02:24 PM
Last Updated : 25 Jun 2016 02:24 PM

காளைகள் கொல்லப்படுவதை பீட்டா ஏன் தடுக்கவில்லை?

விலங்கு நல ஆர்வலர் கேள்வி

ஜல்லிக்கட்டு நடைபெறாததால் பெருமளவு காளைகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. உண்மையிலேயே விலங்குகள் மீது அக்கறை கொண்டிருந்தால் பீட்டா, விலங்கு நல வாரியம் போன்ற அமைப்புகள் காளைகள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமே’’ என்று கேள்வி எழுப்புகிறார் நரேஷ் கட்யான்.

கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவளித்து வந்த பிரபல வட இந்திய விலங்கு நல ஆர்வலர் நரேஷ் கட்யான், சமீபத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். உள்நாட்டு மாட்டினங்களைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் தேவை என்று கூறிவரும் அவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

அவருடைய திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன, விவசாயிகளுக்கு ஆதாரமான கால்நடைகளைக் காப்பாற்றவும், நம் உள்நாட்டு மாட்டினங்களைப் பாதுகாக்கவும் என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று கேட்டோம்:

பீட்டாவின் விளம்பர உத்தி

“தமிழர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு சார்ந்து தேவையற்ற பிரச்சினை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியலும் போலி விளம்பரமுமே விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டைத் தடை செய்வதைத் தங்களுக்கான விளம்பர உத்தியாகவே பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

அவர்களுடைய குற்றச்சாட்டு எல்லாம், ஜல்லிக்கட்டு காளைகள் வதைக்கப்படுவது தொடர்பானதுதான். ஆனால், அந்தக் காளைகள் மக்களின் வாழ்க்கையோடு எப்படிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து அவர்கள் கொஞ்சம்கூட யோசிப்பதில்லை. தமிழக விவசாயிகள் காளைகளைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நடத்தும்போது, அவர்களே அக்காளைகளை எப்படித் துன்புறுத்துவார்கள்?

ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளைத் தடை செய்வதால், உள்நாட்டு மாட்டினங்களின் தற்போதைய நிலை மிக மோசமாகச் சரிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சட்டத்தின் பெயரால் பாரம்பரிய விளையாட்டுகள் தடை செய்யப்பட்டு வருவதால், சுமார் 90 சதவீதக் காளைகள் இறைச்சிக் கடைகளுக்குச் சென்றுவருகின்றன.

ஜல்லிக்கட்டு நடைபெறாததால் காளைகளை இனப்பெருக்கத்துக்காகவோ, சந்தையில் விற்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அப்பாவி மக்களுக்கு அவற்றை விற்பதைத் தவிர்த்து, வேற என்ன வழி இருக்கிறது? இதனால் உருவாகும் பல கோடி ரூபாய் மாட்டு இறைச்சி வணிகத்துக்குப் பீட்டா போன்ற விலங்கு நல அமைப்புகள் மறைமுகமாக உதவுகின்றன.

மாநில அரசின் உரிமை

இந்தப் பின்னணியில் ஜல்லிக்கட்டு தடைக்கு நானும் எப்படி ஆதரவளிக்க முடியும்? வரலாற்று சிறப்புமிக்க விளையாட்டை வேரோடு அழிக்கத் துணை நிற்க முடியாது. இந்தப் பிரச்சினை சார்ந்து, ஆரம்பத்தில் என் நிலைப்பாடு தவறாக இருந்திருக்கலாம்.

இப்போது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் ஒரு விலங்குக் கூட்டம் கொல்லப்படுவதை எப்படி நாம் ஆதரிக்க முடியும். அதனால்தான் உள்நாட்டு காளைகளைக் காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

அது மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்துவது ஒரு மாநில அரசின் உரிமை. இது போன்ற பந்தயங்களை உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்த மாநில அரசு ஒப்புக்கொள்ளும்போது, பீட்டா போன்ற தனியார் அமைப்புகளின் நெருக்கடியால், மேனகா காந்தி மாநிலப் பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கிறார். இது தவறான போக்கு என்பதால் கடுமையாக எதிர்க்கிறேன்.

அது மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்துவது ஒரு மாநில அரசின் உரிமை. இது போன்ற பந்தயங்களை உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்த மாநில அரசு ஒப்புக்கொள்ளும்போது, பீட்டா போன்ற தனியார் அமைப்புகளின் நெருக்கடியால், மேனகா காந்தி மாநிலப் பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கிறார். இது தவறான போக்கு என்பதால் கடுமையாக எதிர்க்கிறேன்.

வாரியத்தின் பாரபட்சம்

அது மட்டுமல்லாமல் மத்திய விலங்கு நல வாரியம், தன் கோட்பாடுகளை மறந்துவிட்டு உயிரினங்களுக்குத் தொல்லை கொடுக்கும் வாரியமாகவே மாறிவருகிறது. சர்க்கஸில் விலங்குகளைக் காட்சிப்பொருளாகப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் விலங்கு நல வாரியத்துக்கு, இப்படி மீட்ட விலங்குகளைப் பாதுகாக்கக்கூடத் தனியாக ஓர் இடம் இல்லையே. பிறகு எதற்கு அவர்கள் போராடுகிறார்கள்?.

அசாமில் இருக்கும் காமாக்யா கோயிலில், தினம் தினம் பசுக்கள் வதைக்கப்படுகின்றன. இதைப் பற்றி இந்திய விலங்கு நல வாரியம் ஒரு நாளும் கேள்வி எழுப்பியதில்லை, தடையும் விதித்ததில்லை. அப்படி இருக்கும்போது ஜல்லிக்கட்டு, பக்ரித் பண்டிகையை ஒட்டி தடைகளை விதிப்பதெல்லாம் நியாயமற்ற செயல்.

கொல்வதைத் தடுக்கவில்லையே!

இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் உள்நாட்டு காளைகளின் நிலைமை, தற்போது கவலைக்கிடமாக உள்ளது. பெருமளவு காளைகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. உண்மையிலேயே விலங்குகள் மீது அக்கறை கொண்டவர்கள் என்றால், பீட்டா, விலங்கு நல வாரியம், மற்ற விலங்கு நல அமைப்புகள் காளைகள் கொல்லப்படுவதை எதிர்க்க வேண்டும், தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கு முன் பீட்டாவின் இந்த முரண்பாட்டை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களில் பெரும் பணமும் அதிகாரமும் விளையாடுகின்றன. இதனால் நாடு முழுவதும் சாதாரண மக்களே பாதிக்கப்படுகிறார்கள்.

எல்லாம் அழிந்துவிடும்

இந்தச் செயல்பாடுகளால் மாடுகளை நம்பி வாழும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையும் சிதைந்துவிடும். நம் உணவு சங்கிலியில் ஏதாவது ஒன்றை எடுத்தால் எப்படிச் சங்கிலித்தொடர் விளைவாக மொத்தமும் பாதிக்கப்படுகிறதோ, அது போலத்தான் உள்நாட்டு மாட்டினங்களின் வளர்ச்சியைத் தடை செய்வதும்.

இந்த நிலை மாறத் தமிழக மக்கள் போராட முன்வர வேண்டும். மக்கள் வாய் மூடியிருந்தால், இன்னும் எத்தனை காலம் ஆனாலும் ஜல்லிக்கட்டு நடைபெறாது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பலரும் இப்பிரச்சினையை மறந்துவிடுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தை அழிக்க முற்படும் இந்த அபத்தமான செயலை, மக்கள் தீவிரமாக எதிர்த்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்” - உறுதியோடு முடிக்கிறார் நரேஷ் கட்யான்.

- நரேஷ் கட்யான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x