Last Updated : 25 Jul, 2015 01:30 PM

 

Published : 25 Jul 2015 01:30 PM
Last Updated : 25 Jul 2015 01:30 PM

காய்கறிகள், ஜாக்கிரதை!

காய்கறிகள் பல்வேறு ஊட்டச்சத்துகளை நம் உடலுக்குத் தரும் என்று நம்பித்தான் நாம் ஒவ்வொருவரும் அவற்றைச் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், அண்டை மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் பூச்சிக்கொல்லிகள், தமிழகத்தில் தடை செய்யப்படாமல் பயன்படுத்தப்படும் செய்தி சமீபத்திய அதிர்ச்சி.

தவிர்க்கும் கேரளம்

தமிழகத்தில் விளையும் காய்கறிகளைக் கடந்த வாரத்தில் கேரளம் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறது என்று செய்திகள் வர ஆரம்பித்தபோது, இப்பிரச்சினை கவனத்துக்கு வந்தது. இதற்குக் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் அதிகமாக இருப்பதாகக் கேரளம் குற்றஞ்சாட்டுகிறது. அதேநேரம் கேரளத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பல பூச்சிக்கொல்லிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்படவில்லை. அப்படியென்றால், அண்டை மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி, நம்மூரில் தடையின்றிப் பயன்படுத்தப்படுகிறதா என்னும் கேள்வி எழுவது இயல்பு.

தமிழகத்தில் விளையும் காய்கறி, பழ ரகங்களில் 5-ல் மட்டுமே அதிகப் பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கிறது. எஞ்சிய 95 சதவீத மாதிரிகளில் பூச்சிக்கொல்லி பாதிப்பு இல்லை என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது. அப்படியானால் நாம் சாப்பிடும் காய்கறிகளில், உண்மையில் எந்தப் பிரச்சினையும் இல்லையா? துறை சார்ந்த நிபுணர்கள் பல விஷயங்களைக் கவனப்படுத்துகிறார்கள்.

அதிகப் பூச்சிக்கொல்லி

“இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்திவரும் முதல் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அப்படியானால், இங்கு விளையும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் இல்லை என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?

பூச்சிக்கொல்லி எச்சம் தொடர்பான பரிசோதனைக்காகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், எந்தெந்த இடங்களில் காய்கறி மாதிரிகளைச் சேகரித்தது என்று தெரியவில்லை. ஐந்து நகரங்களில் இருந்து விற்பனைக்குத் தயாராக இருக்கும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் அதிகபட்ச அளவை மீறி இருக்கிறதா (Maximum Residue Limit MRL) என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா?

வாழ்வாதாரப் பிரச்சினை

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் ஒரு சதவீதம்தான் பூச்சிகளின் மேல் விழுகிறது. மீதி 99 சதவீதம் நிலத்திலும், நீரிலும், காற்றிலும் பரவுகிறது. இதனால்தான் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய இடத்துக்கு, வெகு தொலைவில் இருப்பவர்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

விளைந்த காய்கறிகள், கனிகளில் மட்டும் சோதனை செய்தால் போதுமா? பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் என்னென்ன, நீர், நிலம் எப்படி மாசுபட்டிருக்கிறது என்றெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டாமா?

இதை இரு மாநிலப் பிரச்சினையாகப் பார்க்காமல் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தும் விவசாயத் தொழிலாளர்களின் நிலை, அவர்களுடைய ஆரோக்கியம், அன்றாடம் காய்கறிகளைச் சாப்பிட்டுவரும் சாதாரண மனிதர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரப் பிரச்சினையாக அரசு பார்க்க வேண்டியது அவசியம்" என்கிறார் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து.

எப்படி நம்புவது?

பயிர்களைப் பாதுகாப்பதில் நமக்கு உதவும் பூச்சிகளும் இருக்கின்றன. அவற்றையும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திக் கொல்வது முட்டாள்தனம் என்கிறார்கள் பூச்சியியல் வல்லுநர்கள். நம்மாழ்வார் சொல்வதைப் போல, பயிர்களைத் தாக்கும் 10 சதவீதப் பூச்சிகளுக்காக, விவசாயத்துக்கு நன்மை செய்யும் 90 பூச்சிகளை எண்டோசல்பானையும், மோனோகுரோட்டோபாஸையும் பயன்படுத்திக் கொன்றதன் மோசமான விளைவைத்தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

“கேரளத்தில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் இங்கு இன்னமும் பயன்பாட்டில் இருப்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தேனிக்கு அருகே மிளகாய் பயிருக்குக்கூட எண்டோசல்பான் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். காய்கறி, கனிகளைப் பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் எங்கு, எப்படிச் சேகரிக்கப்பட்டன என்ற விவரம் சொல்லப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது தமிழகத்தில் விளையும் காய்கறிகளை `பாதுகாப்பு’ என்றால் எப்படி நம்புவுது?" என்று கேட்கிறார் மண்புழு உரத்துக்கு வித்திட்ட பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்.

என்ன பாதிப்பு?

மேலும் அவர் கூறுகையில், "எண்டோசல்பான், மோனோகுரோட்டோபாஸ், டைமெத்தோயேட் போன்ற ரசாயனங்கள் நம் உடலுக்குள் போகும்போது, ஈரல், சிறுநீரகங்களில் கொழுப்புப் படிவுகளாக அவை தங்கிவிடும். நாட்கணக்கில் உடலுக்குள் சேர்ந்துகொண்டிருக்கும் கொழுப்பு, உயிர் உருப்பெருக்கம் (Bio Magnification) அடைந்து திடீரென உடல் உறுப்புகளைப் பாதிக்கும். இதனால் பல வகைப்பட்ட புற்றுநோய், ஆஸ்துமா, தோல் நோய்கள், இதய நோய், இனப்பெருக்கச் செல்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை போன்ற பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நிலத்தில், நீர்நிலைகளில், நிலத்தடி நீரில், ஆற்றின் வழியாகக் கடலிலும் கலக்கிறது. பிறகு கடல்வாழ் உயிரினங்களின் வழியாக மீண்டும் மனிதர்களைத் தாக்குகிறது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக ஆய்வு செய்யும் மற்றவர்களும் பூச்சிக்கொல்லி எச்சம் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் உயிருக்குப் பாதுகாப்பு” என்கிறார் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்.

என்ன தீர்வு?

சரி, இந்தப் பூச்சிக்கொல்லிகளில் இருந்து எப்படித் தப்பிப்பது. இதற்கு என்ன உத்தரவாதமான தீர்வு என்ற கேள்வி எல்லோரிடமும் எழும். உடனடியாக இந்தக் காய்கறிகளைத் தவிர்க்க முடியாவிட்டாலும் சிறிய, சிறிய மாற்றங்கள் அவசரத் தேவை என்கிறார்கள் நிபுணர்கள்.

“இயற்கை விவசாயத்தின் மூலமாக விளைந்த பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குவது, மாடிகளில் வீட்டுக்குத் தேவையான காய்கறி, கீரை வகைகளை வளர்ப்பதன்மூலம் பூச்சிக்கொல்லி பாதிப்பில்லாத காய்கறிகளை நாம் பெறமுடியும். மாறாகக் காய்கறிகளை நீரில் கழுவி உண்பதன்மூலமாக ரசாயன எச்சம் போய்விடாது.

பூச்சிக்கொல்லி தெளித்து மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கு மாற்றாகத்தான் இயற்கை விவசாயத்தை முன்வைக்கிறோம். இதை அரசு ஆதரித்துப் பரவலாக்குவதே, இந்தப் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு” என்கிறார் இயற்கை வேளாண் நிபுணர் பாமயன்.

அனந்துவும் அதை வழிமொழிகிறார். இயற்கை விவசாய முறையைப் பரவலாக்கப் பல மாநிலங்கள் ஊக்கம் அளித்துவருகின்றன. தமிழக அரசும் அதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்பதே பாதுகாப்பான உணவை வலியுறுத்துபவர்களின் வேண்டுகோள். இதற்கான வரைவு அறிக்கை ஏற்கெனவே தயாராக இருக்கிறது, செயல்படுத்த வேண்டியதுதான் பாக்கி என்கிறார். கேரளத்தைப் போலவே, தமிழகத்திலும் அந்த மாற்றம் விரைவில் வரும் என்று நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x