Last Updated : 29 Apr, 2017 11:03 AM

 

Published : 29 Apr 2017 11:03 AM
Last Updated : 29 Apr 2017 11:03 AM

காணாமல் போன ‘கரகர குரல்’

தவளைகள் பாதுகாப்பு நாள் ஏப்ரல் 29

இரவு நேரத்தில் மழை வருவதை நமக்கு முதலில் அறிவித்து வந்தவை தவளைகளே. ஆனால், இன்றைக்கு மழையைக் காணவில்லை, அவற்றை முன்னறிவித்த தவளைகளை அழித்துவிட்டோம்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 225 நீர்நில வாழ்விகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 92% வகைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழக்கூடிய ஓரிட வாழ்விகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 2015 இடைப்பட்ட காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் 103 புதிய தவளை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாத தவளை, தேரை வகைகள் ஏராளமாக உள்ளன.

அரிய வகைத் தவளைகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தவளைகள், தேரைகள் பல வழிகளில் தனித்தன்மை வாய்ந்தவை. பசுமைமாறாக் காடுகளில் உள்ள மரங்களின் உச்சிகளில் வசிக்கும் களக்காடு பறக்கும் தவளை, மர உச்சியிலிருந்து தரைக்குச் சறுக்கி வந்து, தண்ணீர் குட்டைகளின் மேலே தொங்கும் இலைகளில் முட்டையிடுகிறது.

மிக அரிதான, அழியும் தருவாயில் உள்ள Chalazodes Bubble-nest Frog (குமிழ் தவளை), 136 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மறுபடியும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தவளையின் முட்டை தலைப்பிரட்டையாக மாறாமல், நேரடியாகச் சிறு தவளையாக மாறிவிடும் சிறப்புத்தன்மை கொண்டது.


நெல் வயல்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளால் தவளைகளுக்கு ஏற்படும் நோய்.

மழைக்காடுகளில் மிகவும் சாதாரணமாகக் காணப்படக்கூடிய தவளை Bob Inger's bush frog (புதர் தவளை). இது சுமார் 80 அடி உயரம் கொண்ட மர உச்சிகளில் வசிக்கும். தரை, நீரோடைகளில் காணப்படும் Dusky Torrent Frog (அந்தி தவளை) ஆண் இனம் ஒலி எழுப்பும்போது ஒரு காலை மேலே தூக்கி உல்லாசமாக நடனமாடி ‘நான் இங்கு இருக்கிறேன்’ என இணையை அழைக்கும்.

சூழலியல் முக்கியத்துவம்

தவளைகளும் தேரைகளும் பூச்சிகளைத் தின்று அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன. பசுமைமாறாக் காடுகளிலுள்ள இரவுத் தவளை மூன்று மணி நேரத்துக்குச் சராசரியாக 20 பூச்சிகளைத் தின்கிறது. இப்படி இவை 70-க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களை உட்கொள்கின்றன. சமவெளிகள், எறும்புகள், கரையான்கள், நெற் பயிருக்குச் சேதம் விளைவிக்கும் பூச்சிகள்- கொசுக்களை நெல் வயல்களில் வசிக்கும் ஊசி வாய்த் தவளைகள் உட்கொள்கின்றன.

தவளைகள் மறைந்து விட்டால் உலகம் கொசுக்களின் கூடாரமாகிவிடும். இப்படிப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் தவளைகள் பெரும் பங்காற்றுகின்றன. மேலும் பாம்புகள், பறவைகளுக்கு முக்கிய இரையாகவும் தவளைகள் அமைந்து உணவுச் சங்கிலியில் பெரும் பங்காற்றுகின்றன.

சந்திக்கும் பாதிப்புகள்

அதிகமான பூச்சிக்கொல்லி பயன்பாடு, வாழிட அழிவு, நோய் ஆகியவை இவற்றின் வாழ்க்கையைக் கடினமாக்கி அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றுவிட்டன. விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, செயற்கை உரங்கள் தவளைகளுக்குப் பேராபத்தை விளைவிக்கின்றன. அமெரிக்காவில் அளவுக்கு மிஞ்சிய களைக்கொல்லி பயன்பாட்டால் ஆண் தவளைகள், பெண் தவளைகளாக மாறி வருகின்றன.

தவளைகளும் தேரைகளும் குளிர் ரத்த உயிரினங்கள். சுற்றுப்புற வெப்ப அளவு, ஈரப்பதம் போன்றவற்றால் இவற்றின் உடல் சூடு கட்டுப்படுத்தப்படுவதால் புவி வெப்பமயமாதல் இவற்றையும் பாதிக்கிறது. காடுகளுக்குள் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் தவளைகள் ஏராளம்.


களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மட்டுமே காணப்படும் (ஓரிட வாழ்வி) களக்காடு ‘பறக்கும் தவளை’.

இந்தப் பின்னணியில் தவளைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி 2008-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி முதல் தவளைகள் பாதுகாப்பு நாளை உலக நாடுகள் அனுசரித்துவருகின்றன. தவளைகள் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் தவளைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன் தவளைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வைப் பரவலாக்கவும் முயற்சிப்பதே உயிரினப் பன்மையைப் பாதுகாக்க வழி அமைக்கும்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: mathi@atree.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x