Published : 16 May 2015 12:00 PM
Last Updated : 16 May 2015 12:00 PM

ஒரு வீட்டுக் குப்பையிலிருந்து தினசரி 3 ரூபாய் வருமானம்

பதினெட்டு மாதங்களில் சென்னையைக் குப்பை இல்லாத மாநகரமாக மாற்ற முடியும்’ - இப்படியொரு பிரம்மாஸ்திரத்தைக் கையில் வைத்திருக்கிறார் சீனிவாசன்.

குன்றுகளால் சூழப்பட்ட வேலூரின் வெப்ப நிலையைக் குறைப்பதற்காக 1997-ம் ஆண்டையொட்டி வேலூரைச் சுற்றியுள்ள குன்றுகளில் தாவரங்களை வளர்க்கும் சேவையில் இறங்கினார் சீனிவாசன். அதற்குத் தேவையான இயற்கை உரத்துக்காக வீடுதோறும் குப்பை சேகரித்தபோதுதான், குப்பைக்குள் இருக்கும் கறுப்புத் தங்கம் அவருடைய கண்ணுக்குத் தெரியவந்தது.

குப்பைக்குப் பயனுண்டு

’’குப்பை ஒரு கழிவு அல்ல; உரிய முறையில் பயன்படுத்தினால் அது இன்னொரு கச்சாப் பொருள். வேலூரில் 1998-ல் குப்பையை எருவாக்கும் திட்டத்தைத் தொடங்கினேன். இதைக் கேள்விப்பட்டு யுனிசெஃப் நிறுவனம் ரூ. 2.25 கோடிக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்தது. அதைக் கொண்டு வேலூர் அருகிலுள்ள வாழப்பாடி சுடுகாட்டில் குப்பையைத் தரம் பிரித்துக் காசாக்கினேன். ‘மக்கும் குப்பை, மக்காத குப்பை’ என்று தரம் பிரிக்கும் முறையை அப்போதுதான் அறிமுகம் செய்தேன். அதன் பிறகு அது பல்வேறு பரிமாணங்களைக் கடந்து இப்போது, ‘திட மற்றும் திரவ வள மேலாண்மை (Solid Liquid Resource Management)’ என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

வீட்டுக்குள் இருக்கும் குப்பையை 12 மணி நேரத்துக்குள் வெளியே கொண்டுவந்துவிட்டால், அது கெடாமல் இருக்கும். அதேபோல, உணவுக் கழிவை 6 மணி நேரத்துக்குள்ளும் மாமிசக் கழிவை 3 மணி நேரத்துக்குள்ளும், காய், கனி மார்க்கெட் கழிவை 4 மணி நேரத்துக்குள்ளும் வெளியே கொண்டுவந்துவிட்டால் கெடாமல் சேமித்துவிடலாம். இதைப் புரிந்துகொண்டு அதற்கேற்பத் திட்டம் வகுத்தேன்’’ என்கிறார் சீனிவாசன்.

உரமும் முட்டைகளும்

வீட்டுக் குப்பை, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுச் சேகரிக்கப்படும் குப்பை, இவருடைய திட மற்றும் திரவ வள மேலாண்மை மையங்களுக்கு 12 மணி நேரத்துக்கு ஒருமுறை வந்துசேர்கின்றன. இதேபோல் மார்க்கெட் கழிவும், இறைச்சிக் கழிவும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை சேகரிக்கப்பட்டு மையத்துக்கு வந்துசேர்கிறது. அங்கே, மக்கும் குப்பை 21 வகைகளாகவும் மக்காத குப்பை 24 வகைகளாகவும் தரம் பிரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பை ஒவ்வொன்றையும் விற்றுக் காசாக்கிவிட முடியும்.

ஒரு வாழை இழை மக்கி உரமாவதற்கு 120 நாட்கள் ஆகும். ஆனால், அதையே மாட்டுக்குக் கொடுத்தால் 8 மணி நேரத்தில் சாணமாகி, 72 மணி நேரத்தில் உரமாகவும் மாறிவிடும். சாணத்திலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மீன், மாமிசக் கழிவைச் சேமித்து, அவற்றை வாத்துகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவந்தால், ஒரு வாத்திலிருந்து மாதம் 24 முட்டைகளை உற்பத்தி செய்ய முடியும். இதுதான் சீனிவாசன் உருவாக்கியிருக்கும் திட மற்றும் திரவ மேலாண்மை திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்.

சம்பாதிக்கவே செய்யலாம்

’’சலூன், பியூட்டி பார்லர்களில் இருந்து 6 விதமான கழிவு வகைகள் வெளிவருகின்றன. இவற்றை மற்ற குப்பைகளோடு சேர்க்காமல் தனியாகச் சேமிக்க வேண்டும். இதில் பெண்களின் கூந்தல் கிலோ ரூ. 2,500 விலை போகிறது. அதேநேரம் தெர்மாகோல் கழிவு போன்ற எந்த வகையிலும் பயன்படாத குப்பை வகைகள் 15 இருக்கின்றன’’ என்கிறார் சீனிவாசன்.

ஒரு வீட்டின் குப்பையிலிருந்து தினசரி மூன்று ரூபாய் வருமானம் கிடைக்கும். அதன்படி, 25 லட்சம் வீடுகளையும் ஐந்து லட்சம் வணிக நிறுவனங்களையும் கொண்ட பெங்களூரு நகரக் குப்பையிலிருந்து ஒரு மாதத்துக்கு ரூ. 27 கோடி சம்பாதிக்க முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சீனிவாசன். “இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினால் 18 மாதங்களில் சென்னையைக் குப்பை இல்லா மாநகராக்கிவிடலாம்’’ என்று அடித்துச் சொல்கிறார்

வட மாநிலங்களில் இவருடைய திட்டத்தைத் திறந்த மனத்துடன் வரவேற்கிறார்கள். அதனால், தமிழகத்தை விட்டுவிட்டு வடக்கே புலம்பெயர்ந்துவிட்டார். இப்போது குஜராத், சிக்கிம், ராஜஸ்தான், புதுடெல்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இவருடைய திட்டம் செயல்படத் தொடங்கி இருக்கிறது.

சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x