Last Updated : 13 Aug, 2016 12:23 PM

 

Published : 13 Aug 2016 12:23 PM
Last Updated : 13 Aug 2016 12:23 PM

என் லக்ஷ்மியின் நிலையைப் பாருங்கள்...- காட்டுயிர் நல ஆர்வலர் சங்கீதா பேட்டி

உலக யானை நாள்: ஆகஸ்ட் 12

இந்த யானைகளைப் பாருங்கள். எவ்வளவு தெய்வீகமாக இருக்கின்றன. இவற்றைக் கோயில்களில் சிறை வைக்கலாமா?” என்று பார்த்தவுடனேயே கேள்வியுடன்தான் எதிர்கொள்கிறார் சங்கீதா.

பத்திரிகையாளர், காட்டுயிர் நல ஆர்வலர், இந்தியாவில் யானைகள் ‘பழக்கப்படுத்தப்படும் விதம்' (கேப்டிவிட்டி) குறித்து ‘ஹஃபிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் உலக அளவில் கவனத்தைப் பெற்றன. தற்போது கேரள மாநிலத்தில் கோயில் யானைகள் படும் துன்பத்தை மையப்படுத்தி ‘காட்ஸ் இன் ஷேக்கில்ஸ்' என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம் இதுவரை ஏழு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இவற்றுக்கு மகுடம் வைத்ததுபோல, இந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி ‘உலகக் காட்டுயிர் நாளி'ன்போது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

“வணக்கம். நான் தமிழ்நாடுதான். வளர்ந்தது எல்லாம் கேரளத்தில். இப்போது கனடாவில் பத்திரிகையாளராக இருக்கிறேன்” என்று மலையாளம் கலந்த தமிழில் பேசும் அவர், எடுத்த எடுப்பிலேயே தமிழக முதல்வருக்குச் சவாலும் விடுக்கிறார்.

“அவரை இங்கே ‘அம்மா' என்று அழைக்கிறார்கள். நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். உங்களால் முடிந்தால், தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறைபட்டிருக்கும் யானைகளையெல்லாம் காட்டில் கொண்டுபோய் விடுங்கள்!”

ஆனால், அவர்தானே யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் கொண்டுவந்தார்?

“அது தவறானது. வருடம் முழுக்கக் கோயில்களில் கட்டாந்தரையில், வெயிலில், சங்கிலியால் யானைகளின் கால்களைப் பிணைத்துவிட்டு, கால்கடுக்க நிற்க வைத்து ஆசி வழங்கச் சொல்லிவிட்டு, வெறும் 48 நாட்கள் மட்டும் அவற்றுக்குப் புத்துணர்வு முகாம் நடத்துவதால் என்ன பயன்? யானைகள் காட்டில் இருக்க வேண்டியவை, கோயில்களில் அல்ல!

யானைகளைக் காட்சிப்பொருளாகப் பயன்படுத்துவது அமெரிக்காவிலும் நடக்கத்தானே செய்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா, அமெரிக்க நாடுகளில் காணப்படும் வித்தியாசம், ஒற்றுமைகள் என்ன?

யானைகள் துன்பப்படுத்தப்படுவது மட்டும்தான் ஒற்றுமை. மற்றபடி, இந்தியாவில் கோயில் எனும் பெயரில் யானைகளைச் சுரண்டுகிறார்கள். அமெரிக்காவில் பொழுதுபோக்கு என்று அப்பட்டமாக யானைகளைச் சுரண்டுகிறார்கள்.

பெரும்பாலான நேரத்தில் தாய் யானைகள் விபத்திலோ அல்லது கள்ளவேட்டையிலோ மரணமடைகின்றன. அதனால் அவற்றின் குழுக்களில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

தாய் யானைகள் மரணமடையும் பட்சத்தில், ஒருவேளை யானைக் கூட்டத்தில் வேறு பெண் யானைகள் இருந்தால், ஆதரவற்ற அந்தக் குட்டி பாதுகாக்கப்படும். அப்படி ஆதரவு கிடைக்கவில்லை என்றால் பிரச்சினைதான். தேவையான உணவும் பாதுகாப்பும் கிடைக்காமல் போகும். அதனால் அதுவும் விரைவில் இறக்க நேரிடும். இதையெல்லாம்விட இன்னொரு முக்கிய விஷயம், யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். அதன் காரணமாக, தாயின் பிரிவு அந்தக் குட்டியின் வாழ்நாள் முழுவதும் துன்ப நினைவுகளைத் தருவதாக அமையும். அவற்றால் இதர யானைகளுடன் இணைந்து உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போகும்.

எப்போதெல்லாம் யானை - மனித எதிர்கொள்ளல் நிகழ்வுகள் நடைபெறுகின்றனவோ, அப்போதெல்லாம் ‘யானைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது' என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 130 கோடி. ஆனால், உலக அளவில் ஆசிய யானைகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 40 ஆயிரத்துக்கும் கீழேதான். இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை 25 ஆயிரம் இருக்கலாம். இந்த எண்ணிக்கையே போதுமே, யானைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது' எனும் வாதம் தவறானது என்பதை நிரூபிக்க!

யானைகள் ஏன் நமக்கு முக்கியம்?

அவைதான் ஒரு காட்டின் ‘நலம்சுட்டும் உயிரினங்களாகக்' (கீஸ்டோன் ஸ்பீசிஸ்) கருதப்படுகின்றன. அதாவது, அந்த உயிரினத்தைச் சார்ந்து மற்ற உயிரினங்கள் வாழும் என்று அர்த்தம். ஒரு யானை ஒரு நாளைக்குச் சுமார் 150 முதல் 200 கிலோ தாவர உணவை உட்கொள்கிறது. அதற்காக ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரங்கள் காடு முழுக்கச் சுற்றி அலைகிறது. அப்போது அதன் கால்கள், தும்பிக்கை, கழிவு ஆகியவற்றின் வழியாக விதைகள் பரவுகின்றன. அந்த விதைகள் மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் தாவர ஆதாரமாக அமைகின்றன. இப்படித்தான் இயற்கை இயங்குகிறது. காட்டை அழிப்பதன் மூலம், மனிதர்கள்தான் இந்த இயக்கத்தைத் தொந்தரவு செய்கிறார்கள்.

கோயில் யானைகள் துன்புறுத்தப்படுவது குறித்துக் கோயில் நிர்வாகத்தினர் என்ன சொல்கிறார்கள்? படப்பிடிப்பின்போது அவர்களால் உங்களுக்கு நேர்ந்த தொந்தரவுகள் என்ன?

நான் கோயில் யானைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்தான் பல கோயில்களுக்குச் சென்றேன். அப்போது கோயில் நிர்வாகத்தினரிடம் யானைகள் துன்புறுத்தப்படுவது குறித்து நான் எதுவும் கேட்கவில்லை. 2013 டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஆரம்பம்வரை சுமார் எட்டு முறை கேரளத்துக்குச் சென்றுவந்தேன். கோயில் யானைகள் துன்புறுத்தப்படும் 25 மணி நேர வீடியோ பதிவுகள் என்னிடம் உள்ளன. அதன் பிறகுதான் கோயில் நிர்வாகத்தினரிடம் இதைப் பற்றி பேச்சே எடுத்தேன். எனக்கு அவர்கள் எந்த விளக்கத்தையும் தரவில்லை. ஆனால், ஒரே ஒரு கோயில் பூசாரி மட்டும், இவ்வாறு யானைகள் துன்புறுத்தப்படுவது தவறு என ஒப்புக்கொண்டார். தவிர, தன்னுடைய கோயிலில் சில சடங்குகளைச் செய்வதற்கு யானைகள் பயன்படுத்தப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தச் சடங்குகளை மனிதர்களே செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உங்கள் படத்தில் ‘லக்ஷ்மி' எனும் யானை பற்றி நிறையப் பேசுகிறீர்கள். அந்த யானை குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

இந்த ஆவணப் படத்துக்காக 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்முறை கேரளத்துக்குச் சென்றபோது, ஒரு பெண் யானையைப் பார்த்தேன். அந்த மாநிலத்தில் கோயில்களில் பயன்படுத்தப் படும் சில பெண் யானைகளில் அதுவும் ஒன்று. அதன் பெயர்தான் 'லக்ஷ்மி'. நாங்கள் இருவருமே பெண் என்பதால், எங்களுக்கிடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டது. சுந்தர மேனன் என்பவரின் வீட்டுக்குப் பின்னால் அந்த யானை கட்டிப் போடப்பட்டிருந்தது. அதனால், அது சுதந்திரமாக நடக்க முடியாமல், ஒரு பகுதிக்குள் சுற்றிக்கொண்டிருந்தது. உடனே அந்தப் பாகன் என்னிடம் சொன்னார். ‘பாருங்கள். அந்த யானை எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!' என்று. அப்போதுதான், யானைகள் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் அவற்றைப் பழக்கப்படுத்துகிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு முறை கேரளத்துக்குச் செல்லும்போதும், லக்ஷ்மியைச் சந்திப்பேன். அப்படி ஒருமுறை நான் சென்றபோது, அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டேன். லக்ஷ்மி உயிரோடுதான் இருந்தது. ஆனால், அதற்கு வேறு ஒரு பிரச்சினை. என் லக்ஷ்மிக்கு என்ன ஆனது என்பதைப் படத்தில் நீங்களே பாருங்கள்.

வரதட்சிணைக் கொடுமையை யானைகளின் பாலின விகிதத்தோடு ஒப்பிடுகிறீர்கள். அதன் மூலம் நீங்கள் கூற வருவது என்ன?

கேரளத்தில் கோயில்களில் பயன்படுத்தப்படும் யானைகளில் பெரும்பாலானவை ‘கொம்பன்' என்று சொல்லப்படும் ஆண் யானைகள்தான். இதனால் காடுகளில் ஆண் யானைகளின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. எந்த அளவுக்குத் தெரியுமா? நூறு பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை எனும் அளவுக்கு!

ஒரு ஆண் யானை பல பெண் யானைகளுடன் இணைசேர்ந்தால், காலப்போக்கில் யானைகளின் ‘மரபணு வளம்' சரிந்துவிடும். இப்படி ஆண் யானைகள் குறைந்துகொண்டே வந்தால், உள்ளினப் பெருக்கம் அதிகரித்து ஒரு கட்டத்தில் யானை இனமே அழிந்துபோகும்.

உங்களின் ஆவணப்படத்தை உச்ச நீதிமன்றத்தில் ஒரு சாட்சியமாகப் பயன்படுத்தப்போவதாகத் தகவல்கள் வருகின்றனவே?

ஆம். இந்தப் படத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காட்ட இருப்பதாக மேனகா காந்தி சொல்லி யிருக்கிறார். கேரள அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு கோயில் யானைகள் தொடர்பாக ஒரு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வரும் செப்டம்பர் மாதம் அதில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. மேற்கண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் எனது படம் சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கின் முடிவிலாவது யானைகளுக்கு விடுதலை கிடைக்குமென்று நம்புவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x