Published : 04 Apr 2015 02:26 PM
Last Updated : 04 Apr 2015 02:26 PM

உருகும் ஆர்டிக் பனி உலகுக்கு ஆபத்து

புவி வெப்பமடைவதன் எதிரொலியாகக் கடல் மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இந்நிலையில், அதை மோசமடைய வைக்கும் வகையில் சமீபத்திய குளிர்காலத்தில் ஆர்டிக் கடலில் மிகக் குறைந்த அளவே பனிப்பாறைகள் உருவாகியுள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களைச் செயற்கைக்கோளின் மூலம் பதிவு செய்ய ஆரம்பித்த 1979-க்குப் பிறகு, இந்த ஆண்டுதான் ஆர்டிக் பனி பரப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 1975 முதல் 2012 வரை, ஆர்டிக் கடலில் உருவாகும் பனிப் பாறையின் கனஅளவு 65 சதவீதம் குறைந்திருக்கிறது.

ஆபத்து அதிகரிப்பு

ஆர்டிக் கடலில் இந்த ஆண்டு பனிப்பாறை உறைந்த விகிதம் 145 லட்சம் சதுரக் கிலோ மீட்டர் என்று கொலராடோ பல்கலைக்கழகத்தின் நேஷனல் ஸ்னோ அண்ட் ஐஸ் டேட்டா சென்டர் தெரிவித்திருக்கிறது.

"துருவப் பகுதிகளில் பனிப் பாறைகள் படிப்படியாக மறைந்துவரும் நிலையில், மற்றொருபுறம் கடல் மட்டமும் உயர்ந்து வருவதால் உலகில் எல்லா உயிர்களுக்கும் ஆபத்தை அதிகரித்து வருவதற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையே இது" என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் பருவ மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்யும் கிராந்தம் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பாப் வார்ட்.

மகிழ்ச்சியல்ல

வசந்த காலம் தொடங்கியதை அடுத்துக் கடந்த பிப்ரவரி 25க்குப் பிறகு பனிப்பாறை உறையும் தன்மை குறைந்து, உருக ஆரம்பிக்கும் தன்மை அதிகரித்துவிட்டது என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் புள்ளி விவரம் குறித்து டபிள்யு.டபிள்யு.எஃபின் குளோபல் ஆர்டிக் புரோகிராமின் இயக்குநரான அலெக்சாண்டர் செஸ்டகோவ் கூறுகையில், "இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் விஷயமல்ல. துருவப் பனிப்பாறைகள் முந்தைய அளவு உருவாகாமல் இருப்பது ஆர்டிக் பகுதிக்கு மட்டுமில்லாமல், உலகம் முழுவதற்குமே ஆபத்து அதிகரிப்பதன் வெளிப்பாடு இது" என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x