Last Updated : 19 Sep, 2015 11:17 AM

 

Published : 19 Sep 2015 11:17 AM
Last Updated : 19 Sep 2015 11:17 AM

இப்போ நான் விவசாயி: பெரம்பலூர் இளைஞரின் அருந்தானிய அமுதசுரபி

டிப்ளமோ முடித்த கையோடு சென்னை பன்னாட்டு செல்போன் நிறுவனம் ஒன்றில் நிறைவாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தவர் மாதேஸ்வரன், திடீரென ஒரு நாள் வேலையை உதறிவிட்டுக் கிராமத்துக்குத் திரும்பினார். `இனி பிழைப்புக்குக் கறவை மாடும் விவசாயமும் போதும்...’ என்று மாதேஸ் சொன்னபோது, வழக்கம்போல் ‘பிழைக்கத் தெரியாத ஆள்' என்றே எல்லோரும் அவரை நினைத்தார்கள். ஆனால், தனது செயல்பாடுகளால் மூன்றே ஆண்டுகளில் மாவட்டத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார் மாதேஸ்.

"சென்னையில் வேலை பார்த்தபோது, ஓய்வு நேரத்தில் சக பணியாளர்களுடன் சேர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அப்போது நடிகர் ஒருவரின் அறக்கட்டளையைச் சேர்ந்த நண்பர் ஒருவர், "மேற்படிப்பு உதவி கோரி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து யாருமே எங்கள் அறக்கட்டளைக்கு விண்ணப்பிக்கவில்லை. அந்த அளவுக்கு அறியாமையில் உழல்கிறார்கள். நிஜமாகவே சமூகசேவை செய்ய நினைத்தால் உங்கள் ஊரில் தொடங்கு," என்றார்.

விவசாய ஈர்ப்பு

விடுமுறையில் ஊருக்கு வந்தபோது மேலும் சில அவலங்கள் முகத்தில் அறைந்தன. எங்கே, எதில் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பால்யகால நண்பர்களை ஒருங்கிணைத்து ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற சேவை அமைப்பைத் தொடங்கினோம். நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, இயற்கை வழி வேளாண்மையில் இறங்கினேன். பலரும் முகத்துக்கு முன்பாகவே சிரித்தார்கள்.

"உனக்கென்ன மூளை பிசகிவிட்டதா? உருப்படாமல் போகப் போகிறாய். பொண்ணு கொடுக்க மாட்டார்கள்.." என்று வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். ஆனால் சோர்ந்துபோகும் ஒவ்வொரு முறையும், என்னுடைய இலக்கிலிருந்து விலகாமல் காப்பாற்றியது, உத்வேகம் தந்தது வாசிப்புதான்" - கண்கள் மின்னச் சொல்கிறார் மாதேஸ்வரன்.

சிறுதானியச் சாகுபடி

மரம் நடுதல், நெகிழிப்பைகளை அகற்றுதல், சைக்கிள் சார்ந்த விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு போன்ற சேவைப் பணிகளுடன், குடும்ப நிலத்தில் உழவுப் பணியையும் தொடங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார் மாதேஸ்.

பல முன்னோடிகளைச் சந்தித்து ஆலோசனைகள் கேட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பு கோலோச்சிய சிறுதானியங்களால் சுயசார்புடன் விவசாயம் செழித்திருந்ததை அறிந்து, அவற்றின் பக்கம் திரும்பினார். அப்பகுதியில் வழக்கொழிந்துவந்த மானாவாரி சிறுதானியங்களைப் பயிரிட ஆரம்பித்தார்.

நீர்த்தேவை குறைவு, பொருளாதார ரீதியாகக் கையைக் கடிக்காத இடுபொருள் செலவுடன் இருந்த சிறுதானியங்களை விளைவித்துப் பார்த்த பிறகு, மறந்திருந்த மண்ணின் மக்களுக்கு அவற்றைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அடுத்த களம்

இளைஞர்களை ஊக்கப்படுத்தும் பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமது, மாதேஸ்வரனுக்கு அடுத்த களத்தை அமைத்துக் கொடுத்தார். "பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் சக்கை உணவுகளை விநியோகிக்கும் உணவகங்களைத் தவிர்த்துவிட்டு, சிறுதானிய உணவு வகைகளைப் பரிமாற முடியுமா?" என்று மாதேஸ்வரனிடம் கேட்டார்.

நண்பர்களின் உதவியுடன் உழைப்பை மூலதனமாக்கிய மாதேஸ்வரன் அருந்தானிய உணவைப் பரிமாறினார். அதன் சிறப்புகள் குறித்துப் புத்தகத் திருவிழாவின் மேடையிலேயே சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் கு. ஞானசம்பந்தம், ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

மக்கள் மத்தியிலும் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு பரவலானது. மாவட்ட நிர்வாகத்தின் கூடுதல் ஆதரவுடன் பெரம்பலூர் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் அருந்தானிய உணவகங்களை மாதேஸ்வரன் நடத்திவருகிறார். தூதுவளை, முடக்கத்தான் போன்ற மூலிகைகள், கீரைகளின் சூப், ஆவாரம்பூ, செம்பருத்தித் தேநீர், முளைகட்டிய பயிர், சிறுதானிய பிஸ்கட் ஆகியவற்றின் ருசிக்கு அடிமையாகி, வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் பெருகிவருகிறார்கள்.

கூட்டுறவு உயர்வு

பெரம்பலூரைத் தொடர்ந்து அரியலூர் புத்தகத் திருவிழாவிலும் அருந்தானிய உணவகம் நடத்தும் வாய்ப்பு வந்தது. அங்கிருக்கும் இளைஞர்களைக் கொண்டு, அந்த மாவட்டத்திலும் நிரந்தர அருந்தானிய உணவகங்களைச் செயல்படுத்தும் முனைப்பில் இருக்கிறார் மாதேஸ்வரன்.

‘அருந்தானியம்' என்ற பெயரில் ஓர் இணையதளம் ஆரம்பித்து, சிறுதானிய விளைபொருட்களைக் கடல் கடந்து சந்தைப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.

"கூட்டுறவுப் பால் பண்ணைகள்போல, சிறுதானிய விவசாயிகளைக் கொண்டு கூட்டுறவு அமைப்பைத் தொடங்கி, விளைபொருளுக்கான விலையை அவர்களிடமே முழுவதுமாகக் கொண்டு சேர்க்கும் ஏற்பாடுகளைச் செய்துவருகிறேன். இதன்மூலம் மரபு சார்ந்த சிறுதானிய விவசாயத்துக்கு நிறைய விவசாயிகள் திரும்புவார்கள். மக்களுக்கும் நஞ்சில்லாத சத்தான உணவு கிடைக்கும்," - மாதேஸ்வரனின் கண்கள் எதிர்காலத்தை நோக்குகின்றன.

கவனம் ஈர்த்த பணிகள்

பெரம்பலூர் மாவட்டக் கிராமமான நக்கசேலத்தில் நடந்த ரத்ததான முகாமைக் காணச் செய்தியாளர்கள் சென்றிருந்தனர். செய்தி சேகரிப்பு முடிந்து புறப்பட நினைத்தவர்களிடம், "அண்ணா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு நீங்களும் ரத்ததானம் செய்யலாமே" என்று நட்புடன் கோரிக்கை வைத்தார் மாதேஸ்வரன்.

செய்தியாளர்களுக்கு அது புதிதாக இருந்தாலும், மறுநிமிடமே உற்சாகமாக உதவ முன்வந்தார்கள். "இன்றைக்கு எங்கே ரத்ததான முகாம் நடந்தாலும், பெரம்பலூர் செய்தியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதே என்னுடைய ஆர்வத்துக்குக் கிடைத்த வெகுமதி" என்று பெருமிதப்படுகிறார் மாதேஸ்வரன்.

சகாக்களுடன் சேர்ந்து ரத்தத் தானம் மட்டுமல்லாமல் மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கவனப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார். கண்ணில்படும் சமூக அவலங்களைக் கேமரா ஃபோனில் படமெடுத்து முகநூல், வாட்ஸ்அப் எனச் சமூக ஊடகங்களில் கேள்விக்கு உட்படுத்துகிறார். குடிநீர்ப் பிரச்சினை, மதுக்கூடங்கள் அகற்றுதல் எனக் களத்தில் இறங்கி அவர் கேள்வி கேட்பது, சமூகத்தில் பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

மாதேஸ்வரன் தொடர்புக்கு: 8056714556

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x