Last Updated : 27 Aug, 2016 02:37 PM

 

Published : 27 Aug 2016 02:37 PM
Last Updated : 27 Aug 2016 02:37 PM

அழிந்த நீர்நிலைகளும் விடைபெறாத பஞ்சமும்

சென்னை இப்போது மட்டுமில்லாமல் அந்தக் காலத்திலும் தண்ணீர்ப் பஞ்சத்தால் அவதிப்பட்டுள்ளது. அதேநேரம், அந்தக் காலத்தில் நீர்நிலைகள் பெருமளவில் இருந்தன. அந்தக் காலப் பஞ்சங்கள், நீர்நிலைகளைப் பற்றி தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சென்னை குடிநீர் வாரியத்தில் செயற் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கெ. பக்தவத்சலம்:

“ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க, ஏழு கிணறுகளைத் தோண்டி, அதிலிருந்து குழாய் மூலமாகப் புனித ஜார்ஜ் கோட்டைக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் ஏற்பாட்டை ஆங்கிலேயர்கள் செய்திருந்தனர். இதன் காரணமாகத்தான் ஏழு கிணறு என்று அந்தப் பகுதிக்குப் பெயர் வந்தது.

கிணறு தோண்டப்பட்ட பகுதியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு ஸ்டான்லி மருத்துவமனையின் இணைப்புக் கட்டிடம் (Stanley Annex Building) உள்ள இடத்தில்தான் ஏழு கிணறு தோண்டப்பட்டிருந்தது. அந்தப் பகுதி இன்றைக்கு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மறைந்த தோப்புகள், நீர்நிலைகள்

ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்திருந்த பெரும்பாலான வீடுகளில் அன்றைக்குக் கிணறு இருந்தது. கிணற்றுப் பாசனத்தின் மூலமாகவே அன்றைக்குப் பெரும்பாலான தோட்டங்கள், தோப்புகள் அமைக்கப்பட்டன. நகரத்துக்கு உள்ளேயும் ஒட்டியும் அமைந்திருந்த பகுதிகளின் பெயர்களே (கொண்டித்தோப்பு, புளியந்தோப்பு) இதற்கு சாட்சி.

- கெ. பக்தவத்சலம்

இன்றைக்கு வியாசர்பாடியில் அம்பேத்கர் கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில், ஏரி இருந்தது. கொடுங்கையூர் ஏரி, இன்றைக்கு டவுன்ஷிப் ஆகிவிட்டது. இப்படி நகரமயமாக்கலில் மறைந்துபோன ஏரிகளும் நீர்நிலைகளும் ஏராளம்.

மாம்பலத்திலிருந்து நுங்கம்பாக்கம் வழியாகத் தேனாம்பேட்டை வரை ஒரு பெரிய ஏரி இருந்திருக்கிறது. புழல் ஏரியில் உபரியான நீர் ரெட்டை ஏரிக்கு வரும் ஏற்பாடு அந்தக் காலத்தில் செய்யப்பட்டிருந்தது. இப்படி நகரம் முழுவதும் ஏரி, குளங்கள், கிணறுகள் எனக் கிடைக்கும் மழைநீரைச் சேமிப்பதற்கு நிறைய ஏற்பாடுகள் இருந்தன. இதனால் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவும் நன்றாக இருந்தது.

பஞ்சத்தின் தொடக்கம்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக 20 அடியிலேயே தண்ணீர் கிடைத்தது. நீர்நிலைகள் மறைய மறைய, 1980-களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே போனது. தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்கப் பெருமளவில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டது இந்தக் காலத்தில்தான். பிறகு 90-களில் விசாகப்பட்டினத்திலிருந்து கப்பல் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

இன்றைக்குப் பெரும்பாலான நீர்நிலைகள் மறைந்துவிட்ட நிலையில், தண்ணீர் தேவையைச் சமாளிக்கச் சென்னை மாநகரம் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறது. 10-20 ஆண்டுகளுக்கு முன் எஞ்சியிருந்த நீர்நிலைகள் காப்பாற்றப்பட்டிருந்தால், இந்த அளவு பிரச்சினை மோசமடைந்திருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x