Last Updated : 11 Mar, 2017 11:16 AM

 

Published : 11 Mar 2017 11:16 AM
Last Updated : 11 Mar 2017 11:16 AM

அந்தமான் விவசாயம் 24: ஆதிகுடிகளின் பரம்பரை அறிவியல்

ஒருபுறம் தனித்து நிற்கும் விரிவாக்க முடியாத பயிர் நிலப்பரப்பு, மறுபுறம் குறைந்த அளவிலான இயற்கை வளங்கள் - இதுதான் அந்தமான் நிகோபார் தீவு. இத்தீவுகளில் தென்னை, சில கிழங்கு வகைகளே பெருவாரியாக வளர்க்கப்படுகின்றன. கோடைகாலத்தில் நீர், உணவுத் தட்டுப்பாடு ஆகியவற்றுடன், தீவுகளைச் சுற்றி அலைகளின் ஆதிக்கமும் அதிகம். இவற்றுக்கிடையே பழங்குடிகளுக்கு முக்கிய உணவாகத் தாழை எனப்படும் பாண்டனஸ் பழங்கள் பயன்படுகின்றன. அப்படியானால் இத்தாவரங்கள் ஆண்டு முழுவதும் பலன் தருகின்றனவா? எல்லாவகையான பாண்டனஸ் தாவரங்களின் பழங்களும் உணவாகுமா?

அந்தமான் நிகோபாரில் வெவ்வேறு பருவத்தில் வெவ்வேறு தாழை தாவரங்கள் (சோம்பென் இனத்தவரால் முன்-குங் என அறியப்படுகிறது) பலன் தருகின்றன. இத்தாவரங்களின் புறத்தோற்றமும் கனிகளின் வண்ணமும் வகைக்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். இதன் அடிப்படையில் மழைப் பருவச் சிவப்பு ரகங்கள், கோடைகால வெள்ளை ரகங்கள் என இவற்றைப் பழங்குடிகள் அறிந்துள்ளனர்.

தாழை அருகே இருப்பிடம்

கிரேட் நிகோபார் தீவில் இவை பெரும்பாலும் தனித்தனியாகவே காணப்படுகின்றன. அல்லது பழங்குடிகளால் அதுபோல வளர்க்கப்பட்டுள்ளன என்றும் சொல்லலாம். இங்கு வாழும் சோம்பென் இனத்தவர், பருவத்துக்கு ஏற்றவாறு பலன்தரும் தாழை தாவரங்களின் தொகுப்புகளுக்கு அருகிலேயே தங்கள் குடில்களை அமைக்கின்றனர்.

அடுத்த பருவத்தில் வேறு இடத்துக்குச் சுழற்சி முறையில் இடம்பெயர்கிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பிட்ட தாழை தாவரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கை, கலாச்சாரக் கட்டுப்பாட்டை அவர்கள் ஒருபோதும் மீறுவதில்லை. இதேபோல் மற்றத் தீவுகளில் வாழும் நிகோபார் பழங்குடியினர் ஒவ்வொரு கிராம எல்லைக்குள் இருக்கும் தாழை தாவரங்களைப் பகிர்ந்துகொண்டு, அவற்றை இயற்கையான இருப்பிடத்திலேயே பராமரிக்கின்றனர். சுருக்கமாக இத்தாழைத் தாவரங்கள் பழங்குடிகளுக்கு ஆண்டு முழுவதும் பலன் தருவதோடு அவர்களின் இருப்பிடத்தைத் தீர்மானிப்பதாகவும் உள்ளன.

வளர்க்கும் முறைகள்

இயற்கையில் தாழைத் தாவரம் விதைகள் மூலமாகப் பெருகுகிறது. இத்தாவரம் கடற்கரைச் சமவெளிகள், நீர்நிலைகளின் கரையோரங்கள், அதிக மழைப் பொழிவுள்ள இடங்களில் நன்கு வளர்கிறது. விதைகள் முளைப்பதற்கு 6 முதல் 12 மாதங்களாகும். நிகோபாரிகள் பழுத்த கனிகளிலிருந்து விதைகளைத் தேர்வு செய்து நீர்நிலைகளின் கரையோரங்களில் விதைக்கின்றனர். அல்லது இயற்கையில் பழுத்துக் கீழே விழும் பழங்களில் இருக்கும் விதைகள் முளைக்கின்றன.

இத்தாவரங்களைத் தண்டுத் துண்டுகள் மூலமாகவும் வளர்க்க முடியும். மணம் தரும் ஸ்குரூபைன் எனப்படும் பண்டன் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கையில் தாய் தாவரத்தின் கீழே வளரும் சிறுகன்றுகள் மூலம் (வாழை போன்று) உற்பத்தி செய்யப்படுகின்றன.

பரம்பரைச் சொத்து

ஆதிகுடிகளைப் பொறுத்தவரை, வெவ்வேறு பருவத்தில் பலன் தரும், தேர்ந்தெடுத்த தாவரங்களின் தண்டுத்துண்டுகளை, தேவைப்படும் இடத்தில் நட்டு வளர்க்கிறார்கள். சில கூட்டுக் குடும்பங்களில் (டுகேட்) இம்மரங்கள் முன்னோர்களின் பெயர்களால் வழங்கப்படுவதும் உண்டு. இவ்வாறு பன்னெடுங்காலமாகச் செய்வதால், நல்ல பலன் தரும் பண்புகளைக் கொண்ட தாவரங்கள் இத்தீவுகளில் பெருகியுள்ளன. அதனால்தான், இவை இம்மக்களின் பரம்பரைச் சொத்தாகப் பராமரிக்கப்படுகின்றன.

பருவநிலை மாற்றங்களின் விளைவுகள், நிலச் சீர்கேடு, கடல் சீற்றம் போன்றவற்றை உணர்ந்த பின்னால், அறிவியல் - வரலாற்றின் பக்கங்களிலும் இயற்கையிலிருந்தும் இன்றைய தலைமுறை விடை தேடி அறிந்துகொண்டதுதான் இத்தாழை தாவரம். இந்த உண்மையை உள்ளடக்கிய ஆதிகுடிகளின் கலாச்சாரம்தான், அவர்கள் பன்னெடுங்காலமாக இத்தீவுகளில் நிலைத்து இருப்பதற்குக் காரணம் என்றால் அது மிகையில்லை.

கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x