Last Updated : 22 Oct, 2016 12:21 PM

 

Published : 22 Oct 2016 12:21 PM
Last Updated : 22 Oct 2016 12:21 PM

அந்தமான் விவசாயம் 06: நெல்லும் மீனும் இரட்டை லாபம்

நெல்லும் மீனும் ஒருங்கிணைந்த முறை: மூன்றாவதாகச் செயல்படுத்தப்படும் இந்த முறை, முந்தைய இரண்டு முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டது முக்கியமானது. இதில் நெல்லும் மீனும் ஒருங்கிணைந்து வளர்க்கப்படுவதுடன், நெல்லின் முக்கியத்துவமும் நிலைநிறுத்தப்படுகிறது. இம்முறையில் செவ்வக வடிவிலான நெல் வயல்களைச் சுற்றிலும் 1.5 - 2 மீட்டர் ஆழமும், 5 - 6 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாய் 1:1 என்ற சரிவு விகிதத்தில் வெட்டப்படுகிறது.

பின்னர், வெட்டிய மண்ணைக் கொண்டு கால்வாயிலிருந்து 1 முதல் 1.5 மீட்டர் தூரத்தில் உயரமான நான்கு மீட்டர் அகலமுள்ள பாத்திகள் அமைக்கப்படுகின்றன. அகலப் பாத்தி நன்னீர்க் குளங்களோடு ஒப்பிட்டால், இதில் நிலத்தின் மையப்பகுதி அப்படியே விட்டுவிடப்படுகிறது. ஆனால், அகலப் பாத்தி நன்னீர்க் குளங்களில் மையப்பகுதி வெட்டி எடுக்கப்படுகிறது.

மழைக்காலத்தில் மொத்தப் பரப்பில், அதாவது கால்வாய் மற்றும் மையப்பகுதியில் நீர் சேகரிக்கப்படுகிறது. அதேநேரம், கோடைக்காலத்தில் மழை நீரானது கால்வாய்களில் மட்டுமே இருக்கும். மழைக்காலத்தில் மையப் பகுதியில் நெல்லும், கால்வாய்களில் மீனும், உயர்ந்த பாத்தியில் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கோடைக் காலத்தில் இந்த அமைப்பின் மையப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மழைநீரைக் கொண்டு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இந்த அமைப்பில், சுற்றுக் கால்வாய்கள் அமைக்கப்பட்டபோதும் மீன்கள் சுற்றித் திரியும் பரப்பளவு அதிகம் என்பதால், மீன் மற்றும் நெல்லின் விளைச்சல் அதிகரிக்கும். இந்த அமைப்பு அமில - கார நிலங்களுக்கும், கடல்நீர் தேங்கும் இடங்களுக்கும் உகந்தது.

பருவநிலை மாற்றம் தாங்கும்

அந்தமான் தீவுகளில் சீர்கெட்ட, ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட நிலங்கள் மேற்கூறிய மூன்று முறைகள் மூலம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. எளிதாக மழைநீர் சேகரிக்கப்பட்டு நெல், காய்கறிகள் பயிரிடப்படுவதுடன் நன்னீர் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இம்முறைகள் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 முதல் 3 லட்சம்வரை வருவாய் தர வல்லவை.

இவற்றை வடிவமைக்க நிலத்தின் தன்மை மற்றும் அமைவிடத்துக்கு ஏற்றதுபோல் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1.5 முதல் 3 லட்சம் ரூபாய்வரை செலவாகும். மேலும், இம்முறைகள் பருவநிலை மாற்றத்தையும் தாங்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், கடலோரத் தாழ்நிலங்களைச் சீரமைக்கவும் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் மிகவும் ஏற்றவை.

(அடுத்த வாரம்: பழங்குடியினரின் பாரம்பரிய அறிவியல்)
கட்டுரையாளர், அரசு வேளாண் அலுவலர்
velu2171@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x