Published : 07 May 2016 12:06 PM
Last Updated : 07 May 2016 12:06 PM

‘அட்டை புலி’கள் நிஜமாகுமா?

அட்டைக்கத்தி தெரியும். ‘அட்டை புலி’கள் தெரியுமா? இந்தப் புலிகளுக்கு உயிரில்லை என்று அர்த்தமில்லை. உயிருள்ளவைதான், ஆனால் வளர்ப்புப் புலிகள். உலகில் காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 4,000-க்கும் குறைவு. ஆனால், வளர்ப்புப் புலிகளின் எண்ணிக்கை 12,000.

பார்ப்பதற்குக் காட்டுப் புலியைப்போலவே, இந்தப் புலிகள் இருக்கும். உருவத்திலோ வளர்ச்சியிலோ எந்த வேறுபாடும் இருக்காது. ஆனால், இயற்கையாகக் காட்டில் வசிக்கும் புலிகளின் இயல்பிலிருந்து பெரிதும் மாறுபட்டவை இவை. மூர்க்கம் இருக்காது, இயல்பூக்கமாக அமைந்த வேட்டை தெரியாது, வேகம் போதாது. அதற்காகக் கையை நீட்டினால் கடிக்காது என்றெல்லாம் உத்தரவாதம் தர முடியாது. அதேநேரம், பெரும்பாலானவை மனிதர்களுடன் நட்பாகப் பழகக் கூடியவை.

கடைசி புகலிடம்

ஒருகாலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் இருந்த காட்டுப் புலிகளின் எண்ணிக்கை தற்போது சொற்பமாகச் சுருங்கிவிட்டது. புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த இந்தியா உட்படப் பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன. கோடிக்கணக்கில் செலவு செய்தும்கூடக் கடந்த 20 ஆண்டுகளில் 10 சதவீதத்துக்கு மேல் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை. 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 2,226. உலகம் முழுவதும் காட்டில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை 3,890. ஆக, இந்தியாவில் மட்டுமே 70 % புலிகள் இயற்கையாக வாழ்கின்றன.

வீட்டு நாய்களைப்போல்

இவைதவிர அமெரிக்காவில் சுமார் 5,000, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் 7,000 வளர்ப்புப் புலிகள் இருக்கின்றன என்கிறது வனக்கடத்தல் மற்றும் வனப் பொருட்கள் வணிகத்தை ஆய்வு செய்யும் டிராஃபிக் அமைப்பு. அமெரிக்காவில் அலபாமா, மிசிசிபி, மிசெளரி, ஒஹையோ, டெக்சாஸ்,பென்சில்வேனியா உட்பட 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வளர்ப்புப் புலிகளை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் நாய்களை வளர்ப்பதுபோலக் குட்டியிலிருந்தே புலிகளைப் பழக்கி, வளர்க்கிறார்கள். பல வீடுகள், பண்ணைகளில் புலிகளே காவல் காக்கின்றன. நாய்களைப் போலப் புலிகளைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சுகிறார்கள். இவற்றில் அசைவப் புலிகள் மட்டுமின்றி பால், பிஸ்கெட், பீட்ஸா, கோக், கேக் சாப்பிடும் சைவப் புலிகளும் உண்டு. இவற்றைப் பராமரிப்பதற்குப் பராமரிப்பு மையங்கள், மருத்துவமனைகளும் இருக்கின்றன. இவை தவிர, கண்காட்சிகளிலும் விலங்குகாட்சி சாலைகளிலும் பார்வை யாளர்களை மகிழ்விக்க வளர்ப்புப் புலிகளைச் சாகசங்களைச் செய்ய வைக்கிறார்கள்.

பிரச்சினைகளும் உண்டு

இந்த வளர்ப்புப் புலிகளால் அசம்பாவிதங்கள் ஏற்படாமலும் இல்லை. கடந்த 1990 முதல் 2016 வரை வளர்ப்புப் புலிகளால் 157 அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்துள்ளன. வீடுகளில் புகுந்து விடுவது, தெருக்களில் புகுந்து மக்கள் அலறி அடித்து ஒடியச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் 27 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சில புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சிக்கல்களால் புலிகள் வளர்ப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான விதிமுறைகளை ஐக்கிய அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை அமைப்பு மூலம் அமெரிக்க அரசு சமீபத்தில் கடுமையாக்கியுள்ளது.

புலியுடன் தங்கலாம்

அமெரிக்காவில் இப்படி என்றால் சீனாவில் 200 புலிப் பண்ணைகளில் சுமார் 6,000 வளர்ப்பு புலிகள் இருக்கின்றன. சீனாவில் புலியின் எலும்பு உள்ளிட்ட உடல் பாகங்களில் இருந்து பாரம்பரிய மருந்துப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். இதற்காகப் புலிகளைக் கொல்வது தடை செய்யப்பட்டிருந்தாலும் சட்ட விரோதமாகவும் வயதான புலிகளைக் கொன்றும் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தாய்லாந்தில் புலிகளை வைத்து ‘புலி சுற்றுலா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கே இருக்கும் விலங்கு காட்சி மையங்களில் புலிகளைப் பெரிய அறைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். குட்டியிலிருந்தே பழக்கப்பட்ட புலிகள் இவை. இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 முதல் ரூ. 1,500 வரை செலுத்தினால் குறிப்பிட்ட நிமிடங்கள் அந்தப் புலிகளுடன் கட்டிப்பிடித்துக் கொஞ்சலாம், விளையாடலாம்.

ஆனாலும், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கையெழுத்து வாங்கிக்கொண்ட பிறகே அனுமதிக்கிறார்கள். இப்படியாக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,000 வளர்ப்புப் புலிகள் இருக்கின்றன.

புலிகளை மீட்பது சாத்தியமா?

இவை எல்லாம் இயற்கைக்கு முரணான விஷயங்கள் என்று உலகெங்கும் இயற்கை செயல்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வந்தாலும், வளர்ப்புப் புலிகளின் மீதான மோகம் குறையவில்லை. அதேநேரம், அழியும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் எதிர்காலத்தில் மொத்தக் காட்டுப்புலிகளும் அழிந்தாலும்கூட, வளர்ப்புப் புலிகளின் மூலம் மீண்டும் காடுகளில் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முடியும் என்கிறது அமெரிக்க மீன்கள் மற்றும் வனவிலங்கு சேவை அமைப்பு.

ஆனால், ஒன்று... ‘பழக்கப்பட்ட புலி என்று எதுவுமே கிடையாது’ என்பார் பிரபல புலிகள் ஆய்வாளர் ஜான் வார்டி. பழக்கப்படுத்திய உயிரினங்களைக் காட்டில் கொண்டுபோய்விட்டு, அந்த உயிரினங்களை மீள் உருவாக்கம் செய்வது சாத்தியம் கிடையாது. வளர்ப்பு நாயை காட்டில் விட்டால், அதற்கு வேட்டையாட தெரியாது. அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் பட்டினியால் அல்லது பிற விலங்குகளால் வேட்டையாடப்பட்டு இறந்துவிடும். அதுபோலதான் வளர்ப்புப் புலிகளும். இயற்கைக்கு முரணான எதுவுமே மனிதனுக்கு எதிராகவே திரும்பும் என்பதை மறந்துவிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x